search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவாணி அணைக்கு தண்ணீர் திறப்பு- கேரளாவுக்கு தமிழக அரசு நன்றி
    X

    சிறுவாணி அணைக்கு தண்ணீர் திறப்பு- கேரளாவுக்கு தமிழக அரசு நன்றி

    • கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் பற்றாக்குறையினை போக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா முதல் மந்திரிக்கு கடிதம் எழுதினார்.
    • கேரளா அரசு சிறுவாணி அணையில் இருந்து போதிய நீரை திறந்து விட்டுள்ளது.

    சென்னை:

    அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சிறுவாணி அணையை நீராதாரமாகக் கொண்ட கோயம்புத்தூர் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் ரூ.16.16 கோடி மதிப்பீட்டில் அரசாணை எண். 2343, நாள் 28.11.1976ல் 12.74 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

    தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே ஆன ஒப்பந்தத்தின் அடிப்படையில் 650 மில்லியன் கன அடி கொள்ளவுள்ள அணை மற்றும் நீர் புகுகிணறு ஆகியவை கேரள எல்லையில் தமிழக அரசின் நிதியில் அமைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி சிறுவாணி அணையில் இருந்து வருடத்திற்கு 1300 மில்லியன் கன அடி (நாளொன்றுக்கு 101.40 மில்லியன் லிட்டர்) வழங்கப்பட வேண்டும்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக கேரள நீர்ப்பாசனத் துறையானது இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச நீர்மட்டத்தை 878.50 மீட்டருக்கு பதிலாக 877.00 மீட்டராகக் குறைத்து பராமரித்து வருகிறது. நீர்மட்டம் 1.50 மீட்டர் குறைந்ததால் 122.05 மில்லியன் கன அடி நீர் சேமிப்பு பற்றாக்குறை ஏற்பட்டது.

    கேரள நீர்ப்பாசனத்துறையால் நீர் எடுப்பு கோபுரத்தில் உள்ள வால்வு கட்டுப்படுத்தப்பட்டு வந்ததால், கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாள்தோறும் வழங்கப்படவேண்டிய 101.4 மில்லியன் லிட்டர் நீர் அளவு குறைந்து, 40 மில்லியன் லிட்டர் நீரை மட்டுமே வழங்கப்பட முடிந்தது.

    இந்த பிரச்சனை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல் மந்திரிக்கு 1.2.2022 அன்று கடிதம் எழுதினார்.

    கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் பற்றாக்குறையினை போக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 19.06.2022 அன்று மீண்டும் கேரளா முதல் மந்திரிக்கு கடிதம் எழுதினார்.

    தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளுக்கிணங்க, கேரளா அரசு சிறுவாணி அணையில் இருந்து போதிய நீரை திறந்து விட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாநகராட்சியின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு, போதிய அளவு நீர் வழங்க இயலும்.

    கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இரு மாநிலங்களுக்கிடையே ஆன ஒப்பந்தத்தின்படி வேண்டிய நீர் வழங்கிய கேரளா முதல் மந்திரிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    Next Story
    ×