search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    6 பேரை மணந்து மோசடி: 7-வது திருமணத்துக்கு முயன்ற கல்யாண ராணி அதிரடி கைது
    X

    கைது செய்யப்பட்ட கவுதம், தனலட்சுமி, ஜெயவேல், சந்தியா ஆகியோரை படத்தில் காணலாம்.

    6 பேரை மணந்து மோசடி: 7-வது திருமணத்துக்கு முயன்ற கல்யாண ராணி அதிரடி கைது

    • விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
    • போலீசார் மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர் :

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் தனபால் (வயது 37). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தியா (27). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 7-ந் தேதி பரமத்திவேலூர் அண்ணா நகர் அருகே உள்ள புதுவெங்கரையம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

    இந்த திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் மணமகளின் அக்காள் மற்றும் மாமா என 2 பேர் மட்டுமே வந்திருந்ததாக‌ கூறப்படுகிறது. திருமணத்திற்கு ஏற்பாடு செய்த திண்டுக்கல் மாவட்டம் தாதன்குளத்தை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் (45) என்பவர் திருமணம் முடிந்த பின்னர் அதற்கான கமிஷன் தொகையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்று கொண்டு மணமகளின் அக்கா மற்றும் மாமா என்று கூறி வந்த 2 பேரையும் அழைத்து கொண்டு சென்று விட்டார்.

    இந்த நிலையில் புதுமாப்பிள்ளை தனபால் பல கனவுகளுடன் தனது வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் 2 நாட்களில் தனபாலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3-வது நாளில் தனபால் காலையில் எழுந்து பார்த்தபோது ‌‌தனது ஆசை மனைவி சந்தியாவை காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சந்தியாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து தனபால் உடனே மனைவி சந்தியா, புரோக்கர் பாலமுருகன் மற்றும் உறவினர்களாக வந்த 2 பேருக்கு போன் செய்தபோது, அனைவரது செல்போன்களும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது திருமண பட்டு சேலை மற்றும் சந்தியா கொண்டு வந்த துணிமணிகள் இல்லாததை கண்டு திடுக்கிட்ட தனபால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    இதுகுறித்து தனபால் வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது ஒருபுறம் இருக்க அதே பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுக்க மணமகளை தேடியபோது வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்ததை அறிந்த தனபால் அந்த நபர் மூலம் சந்தியா, புரோக்கர் மற்றும் உடன் வந்தவர்களை பிடிக்க எண்ணினார்.

    அதன்படி அந்த நபர் திருமணம் செய்து கொள்ள தனது விருப்பத்தை மதுரை மேலவாசல் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த புரோக்கர் தனலட்சுமியிடம் (45) கூறினார். பின்னர் மணமகனின் போட்டோவையும் புரோக்கரிடம் கொடுத்தனர். அதில் மணமகளுக்கு மாப்பிள்ளையை பிடித்துள்ளது என தனலட்சுமி செல்போனில் கூறியதையடுத்து திருமணத்தை முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் காலை திருச்செங்கோட்டில் உள்ள கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்து மணப்பெண் சந்தியா மற்றும் தனலட்சுமியின் உறவினர் என கூறப்பட்ட 4 பேர் உள்பட 5 பேர் ஒரு காரில் திருச்செங்கோடு வந்தனர். அப்போது அங்கு நின்ற தனபால் மற்றும் அவருடைய உறவினர்கள் சேர்ந்து சந்தியா, அவருடன் வந்தவர்களை மடக்கி பிடித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் சந்தியாவுக்கு இதுவரை 6 திருமணங்களை நடத்தி வைத்து நகை, பணம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

    தற்போது சந்தியாவுக்கு திருச்செங்கோட்டில் நடைபெற இருந்தது 7-வது திருமணம் ஆகும். இதையடுத்து சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, மதுரை மாவட்டம் வில்லாபுரம் அம்மாச்சியார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் மெக்கானிக் கவுதம் (26), மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மேல்நாச்சியாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் கார் டிரைவர் ஜெயவேல் (30) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவான புரோக்கர் பாலமுருகன் மற்றும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் அய்யப்பன் (28) ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைதான 'கல்யாண ராணி' சந்தியா ஒவ்வொரு திருமணத்தின்போதும் மணமகன் வீட்டில் இருந்து நெருங்கி பழகி நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு மாயமாகி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் இந்த மோசடியில் ஒரு கும்பலே ஈடுபட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சினிமா போல நடந்த இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சந்தியா மற்றும் புரோக்கர்கள் எத்தனை இடங்களில் இதுபோல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×