என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: தாயிடம் ஒப்படைப்பு
    X

    காரைக்காலில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: தாயிடம் ஒப்படைப்பு

    • காரைக்காலில் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • உன் குழந்தையை கொஞ்சம் கொடு காட்டிவிட்டு வருகிறேன்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் பிறந்து 6 நாள் ஆன நிலையில், பஸ் நிறுத்தம் அருகில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி மஞ்சு(வயது33). இவர் கடந்த வாரம், காரைக்கால் அரசு மருத்துவமனையில், பிரவசத்துக்காக சேர்க்கப்பட்டார். அப்போது, 45 வயது மதிக்கத்தக்க ரபீக் என்ற பெண் தனது மகளை இதே மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்த்துள்ளதாக கூறி அறிமுகமாகியுள்ளார். பின்னர், மஞ்சுவின் செல்போன் எண்ணை வாங்கிகொண்டு, குழந்தை பிறந்துவிட்டதா என கூறி அடிக்கடி செல்போனில் பேசிவந்துள்ளார். இந்நிலையில் மஞ்சுவிற்கு, கடந்த 8-ந் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அறிந்த ரபீக், குழந்தை மற்றும் மஞ்சுவை பார்த்து, அப்பிள், ஆர்லிக்ஸ் மற்றும் பொருட்களை கொடுத்து நலம் விசாரித்து வந்துள்ளார்.

    பின்னர் 2 நாட்கள் கழித்து, எனது மகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால், உன் குழந்தையை கொடு, நான் நன்றாக வளர்க்கிறேன் என கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு, மஞ்சு, தரமுடியாது என கூறியுள்ளார். தொடர்ந்து, கடந்த 13-ந் தேதி, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வந்த மஞ்சுவை, காரைக்கால் எம்.ஓ.எச் பஸ் நிறுத்தம் அருகில் நிறுத்தி, தனது உறவினர் நசிமா பானு என்ற பெண்ணுடன் சென்று, தனது மகள் அருகில் உள்ள ஆட்டோவில், குழந்தை இல்லை என்ற சோகத்தில் இருப்பதால், உன் குழந்தையை கொஞ்சம் கொடு காட்டிவிட்டு வருகிறேன். என கூறி, பிறந்த 6 நாள் ஆண் குழந்தையை, ரபீக், மஞ்சுவிடம் வாங்கிச்சென்றுள்ளார். ஒரு மணி நேரம் ஆகியும் குழந்தையை கொண்டுவராததால், நசிமா பானுவிடன் மஞ்சு கேட்டுள்ளார். அதற்கு, நீ இங்கேயே நில்லு, நான் குழந்தையை வாங்கி வருகிறேன் என நசிமா பானு சென்றதாக கூறப்படுகிறது.

    நசிமா பானுவும் குழந்தையை கொண்டுவராததால், ரபீக்கு மஞ்சு போன் செய்துள்ளார். அதற்கு, குழந்தையை பார்த்ததும், தனது மகள் குழந்தையுடன் சென்றுவிட்டதால், மறுநாள் காலை கொண்டுவருகிறேன் என ரபீக் கூறியதாக தெரிகிறது. மறுநாளும் குழந்தையை கொண்டுவராததால், மஞ்சு காரைக்கால் நகர போலீஸ்ல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ரபீக், நசீமா பானு என்ற இரு பெண்களை வலை வீசி தேடிவந்தனர். இந்நிலையில் குழந்தை கும்பகோணம் அருகில் உள்ள வலங்கைமான் பகுதியில் ரபீக் மற்றும் நசீமா பானுமிடமிருந்து மீட்டு, நேற்று காரைக்காலில் உள்ள தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் குழந்தை உண்மையில் கடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது ஒப்பந்த முறையில் குழந்தை கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்து ரபீக் மற்றும் நசீமா பானுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×