என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுனாமி நினைவு ஸ்தூபிகளில் உறவினர்கள் மற்றும் மீனவ மக்கள் மலர் தூவி அஞ்சலி

    • கொட்டில்பாடு குழந்தை ஏசு காலனியில் இருந்து மவுன ஊர்வலம் நடைபெற்றது.
    • கல்லறை தோட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

    கன்னியாகுமரி:

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த 2004-ம் ஆண்டு கடலில் ஏற்பட்ட சுனாமி பேரலை கடற்கரை கிராமங்களை புரட்டி போட்டது.

    குமரி மாவட்டத்திலும் சுனாமி ஆழி பேரலை ஏற்படுத்திய கோர தாண்டவத்தில் ஏராளமானோர் பலியானார்கள். குளச்சல் பகுதியில் 414 பேர் சுனாமிக்கு இறந்தனர். அவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. அதே போல் கொட்டில்பாடு மீனவர் கிராமத்தில் பலியான 199 பேர் உடல்களும் ஒரே இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன.

    சுனாமியால் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் நினைவு ஸ்தூபிகளும் அமைக்கப்பட்டன. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் 26-ந் தேதி, பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கொட்டில்பாடு பகுதியில் உள்ள நினைவு ஸ்தூபியில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக இன்று காலை கொட்டில்பாடு குழந்தை ஏசு காலனியில் இருந்து மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மவுன ஊர்வலம், நினைவு ஸ்தூபி வரை சென்றது. அங்கு மலர் தூவியும் மலர் வளையம் வைத்தும் ஊர்வலத்தில் வந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து புனித அலெக்ஸ் சர்ச்சில், நினைவு திருப்பலி நடந்தது.

    பங்குத் தந்தை ராஜ் தலைமையில் பங்குந்தந்தைகள் சர்ச்சில், ஜேசுதாஸ், ஜிந்தோ ஆகியோர் திருப்பலியை நடத்தினர். இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொட்டில்பாடு நினைவு ஸ்தூபியில் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபியிலும் இன்று ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பயிற்சி கலெக்டர் குணால் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    மணக்குடி புனித அந்திரேயா ஆலயத்தில் சுனாமியால் பலியானவர்களின் நினைவாக இன்று காலை திருப்பலி நடந்தது. தொடர்ந்து அங்கிருந்து 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் அங்குள்ள கல்லறை தோட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×