என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகரில் வார்டு அலுவலகங்களில் மறுசுழற்சி மையம் திறப்பு
    X

    செல்விநகரில் உள்ள அலுவலகத்தில் பொதுமக்கள் பழைய பொருட்களை ஒப்படைத்த காட்சி. 

    நெல்லை மாநகரில் வார்டு அலுவலகங்களில் மறுசுழற்சி மையம் திறப்பு

    • மேலப்பாளையத்தில் 2 இடங்களில் மறுசுழற்சி, மறுபயன்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
    • மறுசுழற்சிக்கு தேவைப்படும் பொருட்கள் தனித்தனியாக எடுக்கப்பட்டு அனுப்பப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் நெகிழி பயன்பாட்டை தவிர்க்கும் விதமாகவும், மக்காத குப்பைகளை பொது மக்கள் வாறுகால், கால்வாய்களில் வீசிவதை தடுக்கும் விதமாகவும் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், மாநகர நல அலுவலர் சரோஜா அறிவுரையின் பேரில், மாநகர பகுதி முழுவதும் உள்ள சுகாதாரத்துறை வார்டு அலுவலகங்களில் என் வாழ்க்கை என் சுத்தமான நகரம் என்ற தலைப்பில் குப்பையை குறைப்பதற்காக மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    மாநகர பகுதியில் 4 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 17 வார்டு அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் நெல்லை மண்டலத்தில் 3 இடங்கள், தச்சநல்லூர் மண்டலத்தில் 2 இடங்கள், பாளை மகாராஜாநகர் மற்றும் மேலப்பாளையத்தில் 2 இடங்களிலும் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

    டவுன் தொண்டர் சன்னதி வார்டு அலுவலகத்தில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் இந்த மையம் திறக்கப்பட்டு துணிகள், புத்தகங்கள், காலணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் பெறப்பட்டது.

    அவற்றில் மறுபயன்பாடு, மறுசுழற்சிக்கு தேவைப்படும் பொருட்கள் தனித்தனியாக எடுக்கப்பட்டு அனுப்பப்படும். தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட இந்த மையம் குறித்து தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த மையங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பழைய பொருட்களை வழங்கி சென்றனர்.

    செல்விநகர்

    தச்சநல்லூர் மண்டலம் 12-வது வார்டுக்கு உட்பட்ட செல்விநகர் சுகாதார அலு வலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறுசுழற்சி மையத்தில் பொதுமக்கள் தேவையற்ற பழைய பொருட்களை ஒப்படைத்தனர். நிகழ்ச்சியை தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வி. சுரேஷ், சுகாதார அலுவலர் சாகுல் அமீது, ராஜா மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் வஹாப், மகாலட்சுமி, கணேசன் இசக்கிமுத்து, சந்துரு, வேல்முருகன் ஆகியோர் செய்தனர்.

    Next Story
    ×