என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    அரகோணம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் புதிய பஸ் நிலைய பகுதி மற்றும் அசோக் நகர் ஆகிய பகுதிகளில் டவுன் போலீஸ்சப் - இன்ஸ்பெக்டர் முத்து ஈஸ்வரன் ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தார். 

    அப்போது புதிய பஸ் நிலையம் அருகேமேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் சந்தேகிக் கும் வகையில் இருந்த நபரை பிடித்து விசாரித்த போது அரக்கோணம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த பாபு என் கிற திக்கி பாபு (41) என்பதும், கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது.

    அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து பாபுவை கைது செய்தார். இதேபோன்று சாலைகிராமம் பகுதியில் கஞ்சா விற்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்குரகசிய தகவல் கிடைத்தது. 

    அதன் பேரில் தாலுகா போலீஸ்சப் - இன்ஸ் பெக்டர் கோவிந்தசாமி தலை மையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றனர்.

    அப்போது சாலை பஸ் நிறுத்தத் தில் போலீசாரை கண்டதும் ஓடிய நபரை பிடித்து விசா ரித்ததில் அவர் சாலை கிரா மத்தை அடுத்த கைலாசபுரம் பகுதியை சேர்ந்தசீனி என்கிற சீனிவாசன் (23) என்பதும்; கஞ்சா விற்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை கைது செய்து, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    ராணிப்பேட்டை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண உதவித்தொகையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண உதவித்தொகை வழங்கும் விழா இன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சேலம் கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    திருச்சி கதர் கிராம தொழில் வாரிய மண்டல துணை இயக்குனர் பாலகுமாரன் திட்ட விளக்கவுரையாற்றினார்.விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண உதவித் தொகை வழங்கி சிறப்புரையாற்றினார்.இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.

    மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

    இந்த விழாவில் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்திடும் தொழிலாளர்கள் மழைக் காலங்களில் உற்பத்தி செய்வது கடினம் என்பதால் தமிழகத்தில் உள்ள மண்பாண்ட உற்பத்தி தொழிலில் ஈடுபட்டோர்ளில் 11,822 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 2021-2022ம் ஆண்டிற்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கிட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 231 மண்பாண்ட உற்பத்தி தொழிலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் வீதம் தொகை ரூ.11 லட்சத்து 55 ஆயிரம் நிதியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் மண்பாண்ட உற்பத்தி பயனாளிகளுக்கு  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வழங்கினார். 

    இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.77.58 கோடி மதிப்பில் 24,980 நபர்களுக்கு கூட்டுறவு விவசாயிகளுக்கு 5 சவரன் நகைகடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. அதன்படி பயனாளிகளுக்கு நகைகடன் தள்ளுபடி செய்ததை அமைச்சர் காந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர்கள் அனிதா குப்புசாமி(காவேரிப்பாக்கம்) வடிவேல்(நெமிலி) கலைக்குமார்(சோளிங்கர்) ஒன்றியக்குழு துணை தலைவர்கள், நகரமன்ற தலைவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் பயணாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    விழா முடிவில் கண்காணிப்பாளர் நாகலிங்கம் நன்றி கூறினார். 

    முன்னதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரிக் கப்பட்ட பொருட்களை கண்காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த பொருட்களை அமைச்சர் காந்தி பார்வையிட்டார்.
    ஆற்காடு அருகே பைக் மீது கார் மோதியதில் தந்தை&மகன் பரிதாபமாக இறந்தனர்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் மசூர் அஹமத் (வயது 49), இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மகன் முயிஸ் (6) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று மாலை மசூர்அஹமத் தனது மகனை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு மேல் விஷாரத்தில் இருந்து கீழ்விஷாரம் நோக்கி வந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் மசூர் அஹமத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆபத்தான நிலையில் இருந்த முயிசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே முயிஸ் பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்த புகாரின்பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தனியார் கம்பெனி வேன் கவிந்து பெண் தொழிலாளி பலியானதால் அரக்கோணம் அருகே உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    நெமிலி:

    ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தை சேர்ந்த குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்&1 மற்றும் 8&ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் லட்சுமி வேலை செய்து வந்தார். 

    நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து கம்பெனி வேனில் வீட்டிற்கு வந்த போது காஞ்சிபுரம் மாவட்டம் பட்டுமுடையார் குப்பம் அருகே திடீரென வேன் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

    விபத்தில் சிக்கியவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த லட்சுமியின் குடும்பத்திற்கு அரசு மற்றும் தனியார் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் நிதியுதவி கோரி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று காலை மின்னல் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக வந்து சாலை கிராமத்தில் அரக்கோணம் - சோளிங்கர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இதில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    ராணிப்பேட்டை சிப்காட் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே உள்ள சீக்கராஜபுரம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி ஜெயலட்சுமி (50). 

    கடந்த 8&ந் தேதி ஜெயலட்சுமி தன் உடலில் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன்யின்றி நேற்று ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸ் சப்-&இன்ஸ்பெக்டர் தாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரத்தினம் மனைவி கஸ்தூரி (75) இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். 

    இந்த நிலையில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த கஸ்தூரி தனது வீட்டின் அருகில் இருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் போலி சான்றிதழ் கொடுத்த பெண் போலீஸ் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த தக்கோலம் நகரி குப்பத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மையம் (சி.ஐ.எஸ்.எப்) இயங்கி வருகிறது.

    இங்கு பயிற்சி நிறைவு செய்யும் போலீசார் விமான நிலையங்கள், புராதான சின்னங்கள், அணுமின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

    இந்த நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கைருனீஷாகாட்டூன் (வயது 26), என்பவர் அரக்கோணம் சி ஐ எஸ் எப்ல் போலீஸ் கான்ஸ்டபிள் பயிற்சிக்காக கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி வந்து சேர்ந்தார். 

    இவர் பயிற்சி பெற்று வந்த நிலையில் அவரின் சான்றிதழ் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு அனுப்பி சரிபார்க்கப்பட்டது.

    அதில் அவர் போலியான சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். 

    இதுகுறித்து சிஐஎஸ்எப் பயிற்சிப்பள்ளி இன்ஸ்பெக்டர் சீனி தக்கோலம் போலீசல் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கடப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் பழனி தொழிலாளி. இவருடைய மகள் ஷாலினி (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். 

    இவர் வழக்கம் போல காலையில் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் தண்ணிர் தொட்டி அருகே இருந்த மோட்டார் ஸ்விட்ச்யை நிறுத்துவதற்காக ஷாலினி சென்றார். 

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவேரிப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 33 இடங்களில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 33 இடங்களில் கூடுதலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். 

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் 27 இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17-ந் தேதி வரை சுமார் 927 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

    தற்போது நவரை பருவ நெல் அறுவடையை முன்னிட்டு, இணையதளம் மூலம் பதிவு செய்து நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக நாளை (திங்கட்கிழமை) கூடுதலாக 33 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

    புதிதாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ள இடங்கள் விவரம் வருமாறு:-

    பழைய கேசாவரம், வளர்புரம், திருமாதலம் பாக்கம், மேலந்தாங்கல், கே.வேளூர், அனத்தாங்கல், வெள்ளம்பி, தாளிக்கல், வேம்பி, சென்னசமுத்திரம், அகரம், மருதாலம், ஒழுகூர், செங்கல் நத்தம், கரிக்கல், வேடந்தாங்கல், சேரி, காவேரிப்பாக்கம், கீழ் களத்தூர், கீழவீதி, மேலபுலம்புதூர், பெரும் புலிப்பாக்கம், நெமிலி, செங்காடு, வள்ளுவம் பாக்கம், கூராம்பாடி, மேல் வீராணம், பரவத்தூர், சேந்தமங்கலம், காட்டுப்பாக்கம், களத்தூர், ரெட்டிவலம், ஆற்காடு.

    இந்த நேரடி நெல் கொள்முதல் மையங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு அருகாமையில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் tncsc.edpc.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.

    மேலும் மேற்கண்ட கொள்முதல் நிலையங்களையும் சேர்த்து மாவட்டத்தில் 60 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
    அரக்கோணம் அருகே விஷம் குடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரத்தை   சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). விவசாயி. இவரது மனைவி லட்சுமி (27). அவர்களுக்கு சுமித்ரா (4), முத்கதஷ் (2) என 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணவன் மனைவிக் கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிது. இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 

    பின்னர் வெங்கடேசன் வெளியே சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான லட்சுமி வீட்டில் இருந்த கொக்கு மருந்தை ஜூசில் கலந்து குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்து கிடந்தார். 

    பாட்டிலில் மீதியிருந்த விஷத்தை குளிர்பானம் என நினைத்து குழந்தை சுமித்ராவும் எடுத்துக் குடித்துள்ளார். 

    அப்போது வீட்டிற்கு வந்த வெங்கடேசன் குழந்தை அழுது கொண்டிருப்பதைக் கண்டு குழந்தையிடம் விசாரித்தார். சுமித்ரா தனக்கு நெஞ்சு எரிச்சலாக உள்ளதாக கூறியுள்ளார். 

    இதனால் சந்தேகம் அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது அவரது மனைவி லட்சுமி வாயில் நுரை தள்ளியபடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் லட்சுமி மற்றும் குழந்தையை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    டாக்டர்கள் பரிசோதித்தபோது லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    குழந்தை மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் சிவதாஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
    நெமிலி அருகே நிலத்துக்கு இழப்பீடு கேட்டு நெடுஞ்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெமிலி:

    சென்னை - பெங்களூர் விரைவுப் சாலை அமைக்கும் பணிகளுக்காக ராணிப்பேட்டை மாவட்டம் வேட்டாங்குளம், பெரப்பேரி, உளியநல்லூர், மகேந்திரவாடி, கோடம்பாக்கம், பாணாவரம் உள்ளிட்ட கிராமங்களில் வருவாய் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அந்தப் பகுதியைச் சுற்றி உள்ள விவசாய நிலங்களை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கையகப்படுத்தினர்.

    ஆனால் அதற்குரிய இழப்பீட்டு தொகை இதுநாள் வரை வழங்கப்படவில்லை.
    இதுகுறித்து பலமுறை மாவட்ட வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கை இல்லை.

    இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று மகேந்திரவாடி சாலை அருகே நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதை தடுத்து நிறுத்தினர்.

    மேலும் சாலை போடும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்து, அதன்மீது ஏறிநின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனால் அந்தப் பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆற்காட்டில் விலை உயர்ந்த பைக்கை பார்த்தாலே எரித்து விடும் சைக்கோ வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன்.இவர் தனது பைக்கை கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே நிறுத்தி வைத்திருந்தார்.

    நேற்று அதிகாலை அந்த பைக்கை யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு தீயணைப்பு நிலைய அலுவலர் பரிமளாதேவி தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பைக் முழுவதும் எரிந்து நாசமானது.

    அதேபோல் விஷாரத்தை சேர்ந்த யூனுஸ் பாஷா உட்பட 2 பேர் பைக்குகளையும் நேற்று அதி காலை யாரோ மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் சப்&இன்ஸ் பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் பைக்குகளை தீ வைத்து எரிக்கப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு வாலிபர் பைக்குகளில் உள்ள பெட்ரோலை திருடி அதே பைக்குகள் மீது ஊற்றி தீவைத்து எரிப்பது தெரியவந்தது. அந்த வாலிபர் ஆற்காடு கஸ்பாவை சேர்ந்த கார்த்திக் ரோகித் (வயது 23) என தெரிய வந்தது. 

    அவரை பிடித்து விசாரணை செய்ததில் விலை உயர்ந்த புதிய பைக்குகளை கண்டாலே எரிக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்று கூறினார். இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து போலீசார் கார்த்திக் ரோகித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்த பைக்குகள் நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி எடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம் மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் என வழங்கப் பட உள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் சொந்த நிலம் வைத்திருக்கும் அனைத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்கின்ற விவசாயிகள் இதில் பங்கு பெறலாம். விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்று இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி சமர்ப்பிக்க  கடைசி நாளாகும்.

    மேலும் இது குறித்த விவரங்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அரக்கோணம்&94436 96846,ஆற்காடு-97503 90717, காவேரிப்பாக்கம்-90254 68461, சோளிங்கர்-94864 07176, நெமிலி- 90254 68461, திமிரி-97896 36301, வாலாஜா- 96885 41875
    ×