என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றியதால் ஆத்திரம்
- போக்குவரத்து பாதிப்பு
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த காவனூர் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துதர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்படி புதியதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் போதிய இடம் வசதி இல்லை எனக்கூறி காவனூர் கிராமத்தில் கட்ட வேண்டிய கட்டிடம், புங்கனூர் கிராமத்தில் கட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த கிராம மக்கள், இன்று காலை 7 மணி முதல் காவனூர் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாசில்தார் வசந்தி, திமிரி போலீசார், அதிகாரிகள் விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் காவனூர் கிராமத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது புங்கனூர் கிராமத்தில் கட்டப்படுகிறது என தெரிவித்தனர். உடனே கிராம மக்கள் காவனூர் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் அதிகளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டால் இதற்கான தீர்வு கிடைத்துவிடும். இதற்கான நடவடிக்கை எடுக்கும் வரை, நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் எனக்கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆற்காடு - கண்ணமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.






