என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் ரேடியோலஜிஸ்ட் பணியிடம் காலி
- ஸ்கேன் அறிக்கை பெறுவதில் சிக்கல்
- மருத்துவர் பணியில் இல்லை எனக்கூறி நோயாளிகளை அலைக்கழிப்பது வேதனையாக உள்ளது
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை என சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக சி.டி. ஸ்கேன் மையம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
மனிதனின் உடலில் நோய் தாக்குதலை கண்டறிய சி.டி. ஸ்கேன் அறிக்கை அவசியம். ஆனால் இம்மருத்துவமனையில் ரேடியால ஜிஸ்ட் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் அங்கு உள்ள டாக்டர்களுக்கு நோயின் தன்மை குறித்து அறிவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து நோயாளிகள் கூறுகையில் சி.டி.ஸ்கேன் எடுக்க தனியார் மருத்துவ மனையில் ரூ. 2,500 முதல் ரூ.4,000 வரை செலவாகும். ஆனால் அரசு மருத்துவமனையில் ரூ.500 உடன் முடியும் என்பதற்காகவே நோயாளிகள் இங்கு வருகின்றனர்.
ஆனால் இங்கு எடுக்கப்படும் சி.டி.ஸ்கேனில் நோயின் தன்மை குறித்து தெரிவிக்க ரேடியாலஜிஸ்ட் பணியில் ஆள் இல்லை எனக் கூறி மருத்துவர்கள் நோயாளியை அலைக்கழித்து வருகின்றனர். இதனால் நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நோயாளிகள் சி.டி.ஸ்கேன் எடுத்த பின்பு அறிக்கை வழங்க இயலாது, அதற்கான மருத்துவர் பணியில் இல்லை எனக் கூறி நோயாளிகளை அலைக்கழித்து வருவது வேதனையாக உள்ளது என கூறினர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவர்கள் கூறுகையில் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் எடுக்கும் போது பெரிய அளவிலான அறிகுறிகள் மட்டுமே நோயாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மிக நுண்ணிய அளவில் உள்ள நோய் தாக்குதல்களை தெரிவிக்க வேண்டும் என்றால், ரேடியோலஜிஸ்ட் மருத்துவர் பணியிடத்தை நிரப்ப வேண்டி உள்ளது. இது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. எனவே அரசு உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனையில் ரேடியாலஜிஸ்ட் பணியை பூர்த்தி செய்ய வேண்டும் என கூறினர்.






