என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    கந்தர்வக்கோட்டை அருகே மின் கம்பத்தில் ஏறி ஒயர் சரி செய்த போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலியானார்
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பழைய கந்தர்வக்கோட்டையை சேர்ந்தவர் சண்முகம் (வயது 46). மின்சாரா வாரியத்தில் ஒயர் மேனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார் இவருடன் கருப்பையா என்பவரும் இவர்களுக்கு உதவியாக ஒருவரும் சென்றுள்ளனர். கந்தர்வக் கோட்டைக்கு அருகே உள்ள வான்டையான் பட்டி என்ற கிராமத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தை சரி செய்வதற்காக சண்முகம் மின் கம்பத்தின் மீது ஏறி மின் ஒயர்களை சரி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது உதவியாளர் கருப்பையா என்பவரின் கவன குறைவால் எதிர்பாராதவிதமாக சண்முகத்தின் மீது மின்சாரம் பாய்ந்தது.
    இதனால் காயமடைந்த அவரை மீட்டு கந்தர்வக் கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கந்தர்வக் கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கருப்பையாவின் கவன குறைவால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுவதால் மேல் அதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

    மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலியான சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
    அறந்தாங்கி :

    நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 297 விசைப்படகுகளிலும், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 203 விசைப்படகுகளிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    அவர்களில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் பாக்கியம் (வயது 45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அப்பாஸ்கான் மகன் மைதீன்கான் (45), மைக்கேல் மகன் ஜோசப்அருள் (50), உலகநாதன் மகன் பாக்கியம் (45) ஆகிய 3 மீனவர்கள் நடுக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர். நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கிறீர்கள் என்று கூறி அந்த படகில் இருந்த 3 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். மேலும் அவர்களது விசைப்படகையும் சிறைப் பிடித்து காங்கேசன் துறை முகத்திற்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் அங்கு அவர்களை விசாரணை செய்து, மேல் நடவடிக்கைக்காக இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    ஏற்கனவே கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்களும், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 21 விசைப்படகுகளும் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 மீனவர்களும், ஒரு விசைப்படகும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற ராமேசுவரம், கோட்டைப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் குறி வைத்து தொடர்ந்து சிறை பிடித்து வருகின்றனர். இதனால் மீனவர்கள் கடலுக்கு அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதுகுறித்து கோட்டைப்பட்டினம் மீனவர் சங்கத் தலைவர் சின்னஅடைக்கலம் கூறியதாவது:–

    தடைக்காலத்தில் ஒவ்வொரு விசைப்படகு உரிமையாளரும் பல லட்ச ரூபாய் செலவு செய்து விசைப் படகுகளை பழுது நீக்கம் செய்துள்ளனர். இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்து அங்குள்ள கடற்பகுதியில் பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்படுவதால், அந்த படகுகள் முற்றிலும் சேதம் அடைகின்றன.

    எனவே மத்திய மாநில அரசுகள் உடனே தலையிட்டு, இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இலங்கை சிறை பிடித்து வைத்துள்ள அனைத்து விசைப்படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த திங்கட்கிழமை டெல்லி சென்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்படும் சம்பவத்தை தடுக்க வேண்டும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் கடலுக்கு சென்ற கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப் பட்ட சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முருகேஷ் தலைமை வகித்தார். திருமயம் சட்டப் பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் கனகரெத்தினம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

    திருப்பூர் சுடலை, புதூர் சிவராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் நல்லூர் தார்சாலை சீரமைக்கப்படவேண்டும். கொள்ளுப்பட்டு சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவேண்டும். வார்ப்பட்டு துணை சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    நிர்வாகிகள் நாகராஜன், சுரேஷ், ரவீந்திரன், ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    புதுக்கோட்டையில் வருகிற 16–ந்தேதி கூகூர் சண்முகம் இல்ல திருமண விழாவை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நடத்தி வைக்கிறார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கூகூர் மிராஸ் கே.சண்முகம்– செல்வி ஆகியோரின் மகள் கே.எஸ்.சண்முகப்பிரியாவிற்கும், திருச்சி மாவட்டம் மேலக்கல்கண்டார்கோட்டை கணேசன்–கலைவாணி ஆகியோரின் மகன் சிவக்கண்ணுவிற்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அவர்களது திருமணம் வருகிற 16–ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் புதுக்கோட்டை லேணா மண்டபத்தில் நடைபெறுகிறது.

    விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.

    விழாவில் மாநில நிர்வாகிகள் லேணா சரவணன், ஆர்.எல்.தமிழரசன், பூமா.ராமசாமி, ஏ.கே.ராமன், ஆனந்த் மாணிக்கம், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பெரியண்ணன் அரசு எம். எல்.ஏ., ரகுபதி எம்.எல்.ஏ., சி.வ. மெய்யநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்டத் தலைவர் கூகூர்.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    புதுக்கோட்டை அருகே பெண் சத்துணவு அமைப்பாளர் கொலை தொடர்பாக அரசு பஸ் கண்டக்டரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது முதல் மனைவி துளசியம்மாள் (வயது 47). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 24-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற துளசியம்மாள் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆத்தங்கரை விடுதி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தைலமரக்காட்டில் ஒரு மண்டை ஓடும், அதன் அருகே இளஞ்சிவப்பு நிறத்தில் சேலையும் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது, அங்கு இறந்து கிடந்தது துளசியம்மாளின் மண்டை ஓடு என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் துளசியம்மாள் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என்று கண்டுபிடிப்பதற்காக துளசியம்மாளின் செல்போன் எண்ணை கடைசியாக தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    அதில் இடையாத்தியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் ஜெயபால் (37) என்பவர் பேசியது தெரிய வந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஜெயபாலுக்கும், துளசியம்மாளுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு ஜெயபாலை துளசியம்மாள் வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த பிரச்சினை காரணமாக துளசியம்மாளை ஜெயபால் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இலுப்பூர் பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    இலுப்பூர்:

    இலுப்பூர் அருகே உள்ள போலம்பட்டியை சேர்ந்த கோகுல் என்பவர் ஒரு டிராக்டரில் நேற்று முன்தினம் மாலையில் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து குப்பைகளை ஏற்றி கொண்டு சாத்தம்பட்டி வழியாக குரும்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது டிராக்டரில் குரும்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் பாண்டி (வயது 17). என்பவர் அதில் பயணம் செய்து வந்தார்.

    இந்நிலையில் டிராக்டர் இலுப்பூர் அருகே உள்ள சாத்தம்பட்டி பிரிவு சாலை அருகில் வரும்போது டிராக்டரில் இருந்து பாண்டி தவறி கீழே விழுந்ததார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாண்டி பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்மொழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அன்னவாசல் அருகே உள்ள ராசாம்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது 57). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மதியம் தனது மொபட்டில் இலுப்பூர் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் இலுப்பூர் அருகே உள்ள சென்னப்பநாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகில் வந்தபோது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ராமன் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

    இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பலன்றி ராமன் பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    புதுக்கோட்டை அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்ததன் காரணமாக தொழிலாளி ஒருவர் பலியானார்
    கீரனூர்:

    கீரனூர் பஸ் நிலையம் அருகில் ஒதுக்குபுறமாக உள்ள கட்டிடத்தில் இன்று காலை வாலிபர் பிணம் கிடப்பதாக கீரனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் அருகே மது பாட்டில்கள் கிடந்தது.

    இறந்தவர் பெயர் விவரம் குறித்து விசாரணை நடத்திய போது, அம்மாச்சத்திரத்தை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி கருப்பையா (வயது 45) என்பது தெரிய வந்தது.

    அளவுக்கு அதிகமாக மது குடித்ததன் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கருப்பையா உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அறந்தாங்கி அருகே ஊராட்சி செயலர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கருங்குழிகாடு பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வன் (வயது 40). மேல்மங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அஞ்சம்மாள் (38). இவர்களுக்கு சுந்தர்ராஜன் (16) என்ற மகனும், முத்துமீனா (14) என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அஞ்சம்மாள், முத்துசெல்வனுடன் கோபித்து கொண்டு திருநாலூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு கடந்த 4 ஆண்டுகளாக தனது மகன் சுந்தர்ராஜனுடன் வசித்து வருகிறார். முத்துசெல்வன் தனது மகள் முத்துமீனாவுடன் கருங்குழிகாட்டில் வசித்து வந்தார்.

    மேலும் மனைவியுடன் விவாகரத்து கேட்டு புதுக்கோட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்தநீதிபதி, இருவரும் சேர்ந்து வாழும்படி கடந்த 2வாரங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இருப்பினும் முத்துசெல்வனுக்கு மனைவியுடன் வாழ விரும்பவில்லை. இது தொடர்பாக தனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கூறி வந்துள்ளார்.

    நேற்றிரவு வீட்டிற்கு வந்த முத்துசெல்வன், வீட்டை பூட்டி விட்டு தூங்கி விட்டார். இன்று காலை வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது முத்துசெல்வன் வீட்டிற்குள் தூக்குபோட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முத்துசெல்வன் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பாததால் தூக்குபோட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அவரது உறவினர்கள் முத்துசெல்வன் சாவில் மர்மம் உள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி செயலர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த காடைஇடையாத்தூரில் மாரியம்மன் கோவில் நிகழ்ச்சியில் பல்லி விழுந்த பிரசாதத்தை சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு ஏற்பட்ட வாந்தி மயக்கத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
    அறந்தாங்கி :

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த காடைஇடையாத்தூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று இரவு வழிபாடு முடிந்த பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதை முதலில் குழந்தைகள் பெற்று சாப்பிட்டனர். பொங்கலை சாப்பிட்டவுடன் அவர்களுக்கு வாந்தி – மயக்கம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், மீதமிருந்த சர்க்கரை பொங்கலை பார்த்துள்ளனர். அப்போது அதில் இறந்த நிலையில் ஒரு பல்லி கிடந்தது.

    உடனே மயக்கம் அடைந்த சிறுவர்கள் பரத், மகத்,ஸ்ரீராம்,மகிசா, ஸ்ரீராகவன்,ஜனா, சபரி,மஞ்சு, சந்தோஷ், மாதேஷ் உள்ளிட்ட 13 குழந்தைகளையும், பிரவினா என்ற பெண்ணையும் மீட்டு சிகிச்சைக்காக நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் நிகழ்ச்சியில் பல்லி விழுந்த சர்க்கரைபொங்கலை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுக்கோட்டையில் மழையால் பூக்கள் உற்பத்தி அதிகமாகியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்து வரும் மழையால் மல்லிகை பூக்கள் அமோக விளைச்சல் கண்டுள்ளது. புதுக்கோட்டை ஆலங்குடி, வடநாடு, மாஞ்சான் விடுதி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பூக்கள் பயிர் செய்துள்ளனர். மழையால் பூக்கள் உற்பத்தி அதிகமாகியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மேலும் தமிழக அரசு மருந்து தெளிப்பான் மற்றும் பூச்சி மருந்து வழங்கியுள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ மல்லிகை பூவுக்கு ரூ.300 வரை விலை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    அறந்தாங்கி அருகே தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த வாலிபர், எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கியை அடுத்த ஆயிங்குடி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் குமரேசன்.(வயது 19). இவர் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 ந் தேதி எலிகளை கொல்ல பயன்படுத்தப்படும் விசத்தன்மை கொண்ட பேஸ்ட் சாப்பிட்டு உள்ளார். இதை அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் குமரேசன் சோர்ந்து காணப்பட்டதால், அவரது பெற்றோர் அவரிடம் விசாரித்தனர்.

    அப்போது குமரேசன் எலி விசம் சாப்பிட்ட விபரத்தை கூறியுள்ளார். உடனே அவர்கள் குமரேசனை சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமரேசன் எதற்காக விசத்தை சாப்பிட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி அருகே விவசாயி வீட்டில் 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி திருநாளூர் அடுத்த பேயன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா, விவசாயி. இவரது மனைவி செல்லம்மாள், இவர்களது மகன் மதியழகன் (வயது 35) இவருக்கு திருமணம் முடிந்து மாரியம்மாள் என்ற மனைவியும், சர்மிளா, ஜனனி, வின்னிஸ் என்ற 3 மகள்களும் உள்ளனர். மதியழகன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கருப்பையா மற்றும் அவரது மனைவி செல்லாம்மாள் எப்போதும் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே தான் தூங்குவார்கள். மருமகள் மற்றும் பேர குழந்தைகள் வீட்டின் கதவை திறந்து வைத்து வீட்டிற்கு உள்ளே படுத்திருப்பார்கள்.
    நேற்று வழக்கம் போல் இரவு 9 மணிக்கு அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். இரவு 12 மணியளவில் செல்லமாள் திடீர்ரென எழுந்து உள்ளார்.

    அப்போது வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன, இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லமாள் உள்ளே சென்று பீரோவை திறந்து பார்த்துள்ளார்.

    அப்போது அங்கு வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 ஜோடி வெள்ளி கொலுசு மேலும் செல்போன் ஆகியவை திருடு போய் இருப்பது தெரியவந்தது. உடனே தனது செல்போனுக்கு வேறு செல்போனிலிருந்து கால் செய்துள்ளார். அப்போது அந்த போனை எடுத்து சென்ற அந்த மர்ம நபர் தவறுதலாக செல்போனை ஆன் செய்துவிட்டார்.

    செல்போனை திருடி சென்ற நபர் எதோ கோவில் திருவிழாவில் இருப்பது போன்று சத்தம் கேட்டுள்ளது. இதை சுதாரித்த அந்த மர்ம நபர் உடனே செல்போனை ஆப் செய்துவிட்டார்.

    இந்த சம்பவம் குறித்து கருப்பையா அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருவிழா சத்தம் கேட்டதால் இந்த பகுதியை சேர்ந்த யாரோ ஒருவர் தான் திருடி சென்றிருக்க வேண்டும் என்று போலீசார்

    இந்த திருட்டு சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    ×