என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அருகே உணவில் வி‌ஷம் கலந்து தாய்-மகளை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள களக்குடி கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மனைவி கோமதி. மகள் ஆர்த்தி, தாய் முத்தம்மாள். சம்பவத்தன்று இவர்கள் 3பேரும் வீட்டில் உள்ள உணவை சாப்பிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் 3பேரும் மயக்கமடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, உணவில் வி‌ஷம் கலந்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து 3பேரும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு 3பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உணவில் வி‌ஷம் கலந்தது யார் என்று தெரியவில்லை. இதனிடையே குழந்தைவேல் நாகுடி போலீஸ்நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில் தனது குடும்பத்துக்கும், அப்பகுதியை சேர் ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருப்பதாகவும், அதனால் அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாகவும் கூறியிருந்தார்.

    இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் 3 பேரும் சாப்பிட்ட உணவு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல் வெளியாகும் என தெரிகிறது.

    புதுக்கோட்டை அருகே இன்று என்ஜின் பழுதால் நடுவழியில் ரெயில் நின்றதால் திருச்சியிலிருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டது.
    புதுக்கோட்டை:

    காரைக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இன்று காலை காரைக்குடியில் சென்னைக்கு புறப்பட்டது.

    புதுக்கோட்டை அருகே செல்லும் போது என்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் நடுவழியில் நின்றது. பின்னர் என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு கொண்டு சென்று ரெயிலை நிறுத்தினார். இதையடுத்து பழுதை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    இதையடுத்து திருச்சியிலிருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக 7.40 மணிக்கு புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. தாமதம் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    பழுதான என்ஜினை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
    திருவரங்குளம் பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    புதுக்கோட்டை அருகே உள்ள திருவரங்குளம் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு தினமும் ஹோமங்களும், தீபாராதனைகளும் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று கோவிலை வந்தடைந்தது. தேர்பவனி வந்த வீதிகளில் பொதுமக்களும், பக்தர்களும் தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    தேரோட்டத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, மாங்கோட்டை, வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படி நடைபெற்றது. அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகங்களும், அர்ச்சனைகளும், யாகங்களும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

    முக்கி வீதிகளின் வழியாகச் சென்று கோவிலை வந்தடைந்தது. கோவில் விழாவில், தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நடுக்கடலில் படகு பழுதாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோட்டைப் பட்டினம் மீனவர்கள் 3 பேரையும் இலங்கை கடற்பையினர் மனிதாபிமானத்துடன் மீட்டு இலங்கைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு உணவும் வழங்கி உபசரித்துள்ளனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் 250 விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இதில் ரெங்கநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் சுந்தரம் (வயது50), முருகேசன் (40), சூசை (45) ஆகிய 3 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 25 கடல் மைல் தொலைவில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களது விசைப்படகு திடீரென பழுதானது. இதனால் அந்த இடத்தில் இருந்து ஒரு அடி கூட படகை நகர்த்தமுடிய வில்லை. மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் விசைப்படகு அங்குமிங்கும் அலைக்கழித்தது.

    இதனால் செய்வதறியாது திகைத்த படகில் இருந்த மீனவர்கள் தங்களது வாக்கி டாக்கி மூலம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்கத்திற்கும், மற்ற மீனவர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் கோட்டைப்பட்டினத்தில் இருந்து ஒரு விசைப்படகில் 4 மீனவர்கள் உடனடியாக அவர்களை தேடி புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் கூறிய இடத்தில் படகு எதுவும் பழுதாகி நிற்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர் கள் பழுதான படகில் இருந்த மீனவர்களை தொடர்பு கொள்ளவும் முடியாமல் போனது.

    இதற்கிடையே விசைப் படகு பழுதாகி நின்ற பகுதிக்கு இலங்கை கடற்படையினர் ரோந்து பணி வந்தனர். அவர்கள் மீனவர்களிடம் விசாரித்தபோது காரணம் தெரியவந்தது. உடனே மற்றொரு ரோந்து படகை அங்கு கொண்டுவரச்செய்து பழுதான படகை கயிற்றில் கட்டி இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தமிழக மீனவர்களை ஒரு அறையில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தனர். மேலும் பழுதான படகினையும் சரிபார்த்து 3 மீனவர்களையும் படகுடன் நேற்று நள்ளிரவில் இந்திய கடல் எல்லையில் கொண்டு வந்து விட்டனர். தொடர்ந்து 3 மீனவர்களும் இன்று காலை கோட்டைப்பட்டினம் வந்து சேர்ந்தனர்.

    இதுகுறித்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் சின்ன அடைக்கலம் கூறியதாவது:-

    நடுக்கடலில் படகு பழுதாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோட்டைப் பட்டினம் மீனவர்கள் 3 பேரையும் இலங்கை கடற்பையினர் மனிதாபிமானத்துடன் மீட்டு இலங்கைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு உணவும் வழங்கி உபசரித்துள்ளனர்.

    அத்துடன் படகையும் பழுது பார்த்து பத்திரமாக இந்திய கடல் எல்லையில் கொண்டுவந்து விட்டுள்ளனர். இதற்காக இலங்கை அரசுக்கும், இலங்கை கடற்படையினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அவர்கள் கண்டுகொள்ளாமல் சென்றிருந்தால் 3 மீனவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குன்நாண்டார் கோவிலில் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் கீரனூரில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    கீரனூர்:

    குன்நாண்டார் கோவிலில் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் கீரனூரில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பழசெல்வம், மாவட்ட தலைவர் ராமசேதுபதி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரெங்கசாமி, சிவசாமி, செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் குன்நாண்டார் கோவில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பா.ஜ.க. கொடி ஏற்ற வேண்டும். கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். கீரனூர் ரெயில் நிலையத்தை விரிவு படுத்தி பல்லவன், சேது எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று பயணிகளை ஏற்றி, இற்க்கி செல்ல மத்திய ரெயில்துறை மந்திரிக்கு கோரிக்கை மனு அனுப்பவும் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும. போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் செட்டியாபட்டி, ராயப்பட்டி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வந்திப் பூக்கள் அமோகமாக உற்பத்தியாவதால் விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் செட்டியாபட்டி, ராயப்பட்டி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் செவ்வந்திப் பூக்கள் அமோகமாக உற்பத்தியாவதால் விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வடகாடு, ஆலங்குடி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செவ்வந்திப்பூ பயிர் செய்துள்ளனர்.

    சமீபத்தில் பெய்த மழையால் பூக்கள் நல்ல உற்பத்தி அடைந்துள்ளது. மேலும் பூக்கள் உற்பத்தி செய்ய நல்ல திடமான விதைகளைத் தோட்டக்கலை துறையினர் விவசாயிகளுக்கு வழங்கினர். மேலும் பூச்சி மருந்து, தெளிப்பான் போன்ற அனைத்து பொருட்களையும், உபகரணங்களையும் வழங்கினர். பூக்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளதாலும், நல்ல விலை கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தோட்டக்கலை துறையினருக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
    தமிழக அரசு புதுச்சேரி அரசிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறது என்று புதுக்கோட்டையில் முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று நடைபெற்ற குருப்பெயர்ச்சி விழாவில் புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரி வளர்ச்சிக்காக பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகியோரை சந்தித்து ரூ.7,675 கோடி நிதி வழங்கவேண்டும் என கேட்டுள்ளோம். அவர்களும் ஏற்றுக்கொண்டு நிதி மந்திரியின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர்.

    சுற்றுலாவை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கில் சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கன்னியாகுமரிக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்துடன் 10 லட்சம் டன் பொருட்களை கையாள்வதற்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த ஒப்பந்தம் ஒரு சில நாட்களில் கையெழுத்தாக உள்ளது.

    இதில் மத்திய கப்பல் போக்குவரத்து இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். அடுத்த ஆண்டு 40 லட்சம் டன் பொருட்களை கையாள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தோடு நல்ல நட்புறவு ஏற்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் கட்டுமான பணிகளுக்கு தமிழகத்தில் இருந்து தான் மணல் வரவேண்டும். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு வேண்டும். எனவே தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளேன்.

    தமிழக அரசு புதுச்சேரி அரசிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். தமிழக சட்டமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளது வரவேற்கத்தக்கது. இதற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    சசிகலா புஷ்பா எம்.பி.யின் விவகாரம் என்பது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். சசிகலா புஷ்பாவிற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எந்தவித ஆதரவும் அளிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுக்கோட்டையில் அரசு இராணியார் மருத்துவமனை வளாகத்தில் உலக தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு இராணியார் மருத்துவமனை வளாகத்தில் உலக தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் கி.தேசிங்குராசன் தலைமை தாங்கினார்.

    ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தலைவர் ஜெரால்டு ஞானப்பிரகாசம், அரசு இராணியார் மருத்துவமனை டாக்டர் இந்திராணி, டாக்டர் வீ.சி.சுபாஷ் காந்தி, டாக்டர் ரோட்டரி சங்கம் 3000ன் செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் மாருதி.க.மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர்.

    அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் தனி அலுவலர் பரிமளதேவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து பேசினார். பிறந்த சிசுவுக்கு அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று கூறி பிரசவித்த தாய்மார்களுக்கும் பிறந்த சிசுவுக்கும் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. முகம்மது எசியா, சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.

    கோட்டைப்பட்டினத்தில் நடுக்கடலில் மீனவர் ஒருவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 257 விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர். இதில் தவமணி (வயது 55), செந்தில்வேல் (32), ஏழுமலை (32), விஜயகுமார் (52) ஆகிய 4 பேர் ஒரு விசைப்படகில் 20 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென தவமணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அழைத்துக்கொண்டு படகில் கரை திரும்பினர். இருப்பினும் வரும் வழியில் தவமணி இறந்தார். இது குறித்து மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் மாயமானதை தொடர்ந்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    கோட்டைப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடந்த 30-ந்தேதி 143 விசைப்படகுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பின்னர் அனைவரும் வழக்கம்போல் நேற்று மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 36), என்பவர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற அவரும், அதேபகுதியை சேர்ந்த வடமாலை மகன் மோகன்தாஸ் (29), பாண்டி (37), பழனி (25) ஆகிய 4 மீனவர்கள் மட்டும் கரை திரும்பவில்லை.

    இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர் விசைப்படகு மீனவர் சங்கத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீண்டும் 4 பேர் கொண்ட குழுவினர் கடலுக்குள் சென்று காணாமல்போன அந்த 4 மீனவர்களை தேடி சென்றனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    திருமயம் துணைமின் நிலையத்தில் நாளை 1- ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி திருமயம், மணவாளங்கரை, ஆகிய பல பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
    திருமயம்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டம் திருமயம் துணைமின் நிலையத்தில் நாளை 1- ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    இதனால் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூர்,  கடியாப்பட்டி, கண்ணங் காரைக்குடி,ஊனையூர், சவேரியார்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர் கோனாப்பட்டு, துளையானூர், கே.பள்ளிவாசல், பி.அழகாபுரி, நெய்வாசல்,

    நல்லூர், வாரியப்பட்டி, கொல்லக்காட்டுப்பட்டி, ராங்கியம் ,கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி,  வி.லெட்சு மிபுரம். ஏனப்பட்டி, விரச்சிலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என திருமயம் உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
    ×