என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு மதுபான சுதந்திரதினத்தை முன்னிட்டு 15-ந் தேதி டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் விற்பனை நடைபெறாமலும், மூடப்பட்டும் இருக்க வேண்டும்.

    எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மதுபானக்கூடங்கள்(பார்) மற்றும் ஓட்டல் பார்கள் ஆகியவற்றில் மேற்படி நாளில் மது விற்பனை ஏதும் நடைபெறாது என்றும், அவை யாவும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை அருகே 10 அடி ஆழ பள்ளத்தில் சிவபெருமானை நினைத்து விஷ்வ இந்து பரி‌ஷத் நிர்வாகி அரை நிர்வாணத்தில் தவம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சின்ன அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துக் கிருஷ்ணன் (வயது 55). விஷ்வ இந்து பரி‌ஷத் அமைப்பின் அறந்தாங்கி நகர செயலாளராக இருந்து வரும் இவர், சிவபெருமானை நினைத்து தவம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

    இதையடுத்து கடந்த 2-ந் தேதி ஆடி அமாவாசையையொட்டி அறந்தாங்கி வடுகாடு சுடுகாட்டு பகுதியில் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டிய அவர், அரை நிர்வாணத்தில் அதற்குள் அமர்ந்து சிவபெருமானை நினைத்து தனது தவத்தை தொடங்கினார். அவர் தவம் மேற்கொள்வது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யாருக்கும் தெரியாது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துகிருஷ்ணன் தவம் மேற்கொண்டு வருவதை அறிந்த பொது மக்கள் இது குறித்து அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு முத்துகிருஷ்ணன் அரை நிர்வாணத்தில் தவம் மேற்கொண்ட நிலையில் இருந்தார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் தவத்தை கைவிடுமாறு கூறினர். இதையடுத்து நேற்று அதிகாலை முத்து கிருஷ்ணன் தனது தவத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.

    இது பற்றி அவர் போலீசார் மற்றும் பொதுமக்களிடம் கூறும்போது, சிவ பெருமானை நேரில் சந்திப்பதற்காக நான் தவம் மேற்கொண்டேன். தற்போது எனக்கு அம்பாள் காட்சி தந்ததால் தவத்தை முடித்துக் கொண்டேன். மேலும் சிவ பெருமானை நினைத்து மீண்டும் வேறொரு இடத்தில் தவம் மேற்கொள்வேன் என்றார்.

    முத்துகிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர் யாருக்கும் தெரியாமல் சிவபெருமானை நினைத்து சுடுகாட்டு பகுதியில் தவம் மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பொன்னமராவதி அருகே உள்ள அம்மன் குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஒற்றைத் தேரோட்டம் நடந்தது.
    பொன்னமராவதி அருகே உள்ள அம்மன் குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஒற்றைத் தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்ட சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கோயில் முன்பு அலங்கரிக்கப்பட்ட தேரை பொதுமக்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்று வழிபாடு செய்தனர்.இதில் அம்மன்குறிச்சி, ஆலவயல், கண்டியாநத்தம், கல்லம்பட்டி, நகரப்பட்டி உட்பட பல்வேறு ஊராட்சிப்பகுதிகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர். பொன்னமராவதி சப்-இன்ஸ்பெக்டர் முத்துக் கருப்பன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கார் மீது ஆட்டோ மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமயம்:

    புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம்  அருகே. நமண சமுத்திரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். ஆட்டோ டிரைவர் இவர் செபஸ்தியாபுரத்தில் உள்ள வாடிக்கையாளரை ஏற்றி வர சென்று கொண்டிருந்தார். நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே சென்றபோது காரைக்குடியிலிருந்து -பெங்களூர் நோக்கி சென்ற கார் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ டிரைவர் சிதம்பரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து நமண சமுத்திரம் காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்த சிதம்பரம் உடலை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. இந்த விபத்து குறித்து நமண சமுத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீரனூர்:

    கீரனூர் அருகே உள்ள கல்லூக்குமியல்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). கூலி தொழிலாளி இவர் தினமும் அருகில் உள்ள பாறை குளத்திற்கு சென்று குளிப்பது வழக்கம்.

    இந்த நிலையில் வழக்கம் போல பாறை குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தினால் குடத்தில் தண்ணீர் எடுத்து கரையில் நின்று குளித்துள்ளார். அப்போது தண்ணீர் எடுக்கும் போது குடம் கை தவறி குளத்தில் விழுந்து விட்டது.

    குடத்தை எடுக்க முற்பட்ட போது ஆறுமுகம் கால் நழுவி குளத்தில் விழுந்துள்ளார். தண்ணீர் ஆழமான பகுதியில் சிக்கி கொண்ட ஆறுமுகம் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீரனூர் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை மீட்டு புதுக்கோட்டை மீனவர்கள் கரை சேர்த்தனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை (8-ந்தேதி) கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இதில் மெகராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் உச்சிப்புளியை சேர்ந்த வேல்முருகன், முனியாண்டி, சுந்தரம், மாரி ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இந்தநிலையில் அவர்களுடன் சென்ற மீனவர்கள் செவ்வாய்க்கிழமை (9-ந்தேதி) மீன்களுடன் ஒருவர்பின் ஒருவராக கரைக்கு திரும்பினர். மெகராஜூக்கு சொந்தமான படகில் சென்ற 4 மீனவர்கள் மட்டும் கரை திரும்பவில்லை.

    இதனால் படகின் உரிமையாளர் மெகராஜ், மீன்துறை அலுவலகத்தில் தகவல் தெரிவித்து விட்டு மற்றொரு படகில் வேறு சில மீனவர்களுடன் மாயமான படகை தேடி சென்றார். மேலும் கடலோர காவல் படை, கப்பற்படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது ராமையாவிற்கு சொந்தமான விசை படகில் சென்ற ராம்திலீப், ராபின் உள்ளிட்டோர் ஆள் கடலில் மாலை 6 மணி அளவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அதே திசையில் சற்று தூரத்தில் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்ற கூக்குரல் கேட்டது.

    இதைக்கேட்ட மீனவர்கள் தங்கள் படகை அங்கு செலுத்தினர். அருகில் சென்று பார்த்த போது மாயமான மண்டபம் மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டு இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்த போது தங்களின் விசை படகு பழுதாகி கடந்த 3 நாட்களாக கடலில் தத்தளித்து கொண்டு இருப்பது தெரிய வந்தது. மீனவர்கள் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து ஜெகதாபட்டினம் மீனவர்கள் தங்கள் விசைப்படகில் மண்டபம் மீனவர்களின் விசைப்படகை கட்டி இழுத்து வந்தனர். இந்த படகு இன்று அதிகாலை 6 மணிக்கு ஜெகதாப்பட்டினம் துறைமுகத்திற்கு பத்திரமாக வந்து சேர்ந்தது.

    இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உரிமம் இல்லாமல் உரம் விற்பனை செய்யக் கூடாது என்று புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பயிர் சாகுபடியில் பெரும்பங்கு வகிக்கும் இராசயன உரங்கள் உர விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், தனியார் விற்பனை நிலையங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. உர உற்பத்தி மற்றும் உர விநியோகம் உரக்கட்டுப்பாடு ஆணை1985, அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 மற்றும் உர நகர்வு ஆணை 1972-ஆகிய ஆணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி நிர்வகிக்கப்படுகிறது.

    விற்பனை உரிமங்கள் மொத்த விற்பனை, சில்லரை விற்பனை இரு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. உர விற்பனை உரிமம் இல்லாத உர விற்பனை சட்டப்படி குற்றமாகும். உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து உரங்களைப் பெற்று சில்லரை விற்பனையளர்களுக்கு விற்பனை செய்வது மொத்த விற்பனையாகும். மொத்த விற்பனை உரிமம் பெற்றவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் நேரடியாக விவசாயிகளுக்கு விற்பனை செய்திட அனுமதி கிடையாது.மொத்த விற்பனையாளர்கள் அல்லது உர நிறுவனங்களிடமிருந்து உரங்களைப் பெற்று விவசாயிகளுக்கு விற்பனை செய்வது சில்லரை விற்பனையாகும். சில்லரை விற்பனை உரிமம் பெற்றவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் இதர சில்லரை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி கிடையாது. விவசாயிகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    உர விற்பனை உரிமம் இல்லாமல் உரம் விற்பனை செய்யக் கூடாது. உர விற்பனை உரிமம் அனைவரது பார்வையில் தெளிவாக படும்படி விற்பனை நிலையத்தில் வைக்க வேண்டும்.ஒவ்வொரு உர விற்பனையாளரும் தங்களின் விற்பனை நிறுவனத்தின் உரங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பான மாதாந்திர அறிக்கையினை பிரதிமாதம் 20-ஆம் தேதிக்குள் தவறாது அனுப்பிட வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே அரசு மன்னர் கல்லூரி அமைந்துள் ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

    இதற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங் கப்படாமல் உள்ளதாகவும், பேராசிரியர்கள் பற்றாக் குறையால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

    மேலும் கல்லூரியில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, இல்லாமல் இருப் பதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்துடன் மாணவர்களுக்கு இலவச அரசின் லேப்-டாப் வழங்க வேண்டும், கேண்டீனில் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கல்லூரியில் அய்வக வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கல்லூரிக்கு முன்பாக அமர்ந்து தங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று கூறி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி :

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை 137 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இதில் வைரக்கண்ணு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வைரக்கண்ணு மகன் கணேஷ்குமார் (வயது 30), பிச்சைபாண்டி (46), முகமதுகான் (48) மற்றும் ஒருவர் ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 4 பேரையும் விசைப்படகுடன் சிறைப் பிடித்தனர். பின்னர் 4 பேரையும் கைது செய்து, விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதனிடையே 4 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் 4 மீனவர்களையும் சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர், அவர்களது படகை கணேஷ்குமாரின் விசைப்படகு மீது மோத விட்டதாகவும், இதனால் படகு சேதமடைந்ததாகவும் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே படகை சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    கடந்த 3-ந்தேதி கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சுந்தரம், முருகேசன், சூசை ஆகியோர் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது விசைப்படகு பழுதாகியது. அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், 3 பேரையும் விசைப்படகுடன் இலங்கை அழைத்து சென்றனர். பின்னர் படகை சரி செய்ததோடு, சாப்பாடு கொடுத்து உபசரித்து, இந்திய கடல் எல்லையில் விட்டு சென்றனர்.

    இந்நிலையில் இன்று ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளை கைப்பற்ற தி.மு.க. சார்பில் தீவிர முயற்சி நடந்து வருகிறது.
    கீரனூர்:

    உள்ளாட்சி மன்ற தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. தற்போது கீரனூர் தேர்வு நிலை பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் 10 கவுன்சிலர்களும், துணைத் தலைவரும் உள்ளனர். வரும் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர் பதவிகளை கைப்பற்ற தி.மு.க. சார்பில் தீவிர முயற்சி நடந்து வருகிறது.

    15 வார்டு வாரியாக செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப் பட்டு வருகிறது. அதில் தி.மு.க. வடக்கு மாவட்ட துணை செயலாளர் செல்லபாண்டியன், நகர செயலாளர் பழனியப்பன், மாவட்ட பிரதிநிதி அசரப்அலி, ரவிச்சந்திரன், பழனி, அவைத்தலைவர் மாரிமுத்து, மதியழகன், அருள்ராஜ், இம்தியாஸ், சக்திவேல், ஆறுமுகம், சௌந்தர்ராஜன், நல்லையா ஆகியோர் கலந்து கொண்டு வார்டு உறுப்பினர்கள், பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    வார்டில் உள்ள பிரச்சனைகள் என்ன? மக்களுக்கு செய்யாத பணிகள் என்ன உள்ளது? இது குறித்து சம்பந்தப்பட்ட தாலுகா, மாவட்ட அதிகாரிகளிடம் மனு கொடுப்பது, தீராத பிரச்சினைகளுக்கு மறியல் போராட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
    அறந்தாங்கி அருகே கோவில் கட்டுவது தொடர்பாக இருதரப்பினருக்டையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பாண்டிக்குடி கிராமத்தில் வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். பழமையான இந்த கோவிலை இடித்து விட்டு புதிதாக கோவில் கட்ட அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர்.

    இதற்கு அந்த பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். கோவில் உள்ள இடம் தனக்கு சொந்தமானது, எனவே கோவில் கட்டக்கூடாது என்றார். மேலும் மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

    இதே போல் பொதுமக்களும் வழக்கு தொடர்ந்தனர். அதில் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது, எனவே புதிதாக கோவில் கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு கோவிலில் திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பொதுமக்கள், பழைய கோவிலை இடித்து விட்டு புதிதாக கோவில் கட்டும் பணியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினர். தற்போது 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. முழுமையாக பணி முடிந்ததும் கும்பாபிஷேகம் நடத்த பொதுமக்கள் திட்டமிட்டு இருந்தனர்.

    இதனிடையே ரவிச்சந்திரன் அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அறந்தாங்கி ஆர்.டி.ஓ. ரம்யா தேவியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கும்பாபிஷேகம் நடத்தினால் பிரச்சினை ஏற்படும். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் அறந்தாங்கி தாசில்தார் மணிவண்ணன், 144 தடை உத்தரவை பிறப்பித்தார். அதில் வெற்றி விநாயகர் கோவில் கட்டுவதற்கும், அங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாண்டிக்குடி பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க பாண்டிக்குடி கிராமத்திலும், வெற்றி விநாயகர் கோவில் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி, சாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரி படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கியை அடுத்த சுப்பிரமணியபுரம் அருகே உள்ள சித்தகண்ணியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி செல்வி. முருகேசன் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் வள்ளி.

    இவர் புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இ.இ.இ. முதலாமாண்டு சேர்ந்துள்ளார். அவரின் சேர்க்கைக்கான சான்றிதழ்களில் சாதிச் சான்றிதழையும் கல்லூரி நிர்வாகம் கேட்டுள்ளது. உடனே வள்ளி, தான் சார்ந்த காட்டுநாயக்கன் சாதியின் பெயரை குறிப்பிட்டு அறந்தாங்கியில் உள்ள சேவை மையத்தில் மனு செய்துள்ளார்.

    ஆனால் அவரின் மனு பரிசீலனைக்காக வருவாய்த்துறையினருக்கு சென்றபோது, மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுகுறித்து வள்ளியின் தாயார் செல்வி அறந்தாங்கி தாசில்தார் அலுவலத்திற்கு சென்று கேட்டபோது, புதுக்கோட்டை மாவட்டத்தில் காட்டு நாயக்கன் சாதிப் பெயரில் சான்றிதழ் வழங்க முடியாது என வருவாய்த்துறையினர் கூறிவிட்டனர். மேலும் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நடைமுறைப்படி மட்டுமே சான்றிதழ் வழங்க முடியும் எனக்கூறிவிட்டனர்.

    இந்நிலையில் மாணவி படிக்கும் கல்லூரி நிர்வாகம் மாணவி காட்டுநாயக்கன் என்ற பெயரிலான சாதிச்சான்றிதழை உடனே கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சாதிச்சான்றிதழ் இல்லாவிட்டால், அவர் தனது படிப்பை தொடரமுடியாது என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி வள்ளி தனது தாயார் செல்வியுடன் சென்று அறந்தாங்கி தாசில்தார் அலுவலகத்தை அணுகினார். ஆனால் சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் அவர் தனது படிப்பை பாதியில் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து மாணவி வள்ளி, நிருபரிடம் கூறியதாவது:-

    மிகவும் ஒடுக்கப்பட்ட காட்டுநாயக்கன் சமூகத்தில் பிறந்த நான் எப்படியாவது படித்து ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் படித்து வருகிறேன். எனது ஆர்வத்திற்கு எனது பெற்றோரும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் வருவாய்த்துறையில் நான் சார்ந்த காட்டுநாயக்கன் சாதியின் பெயரை குறிப்பிட்டு, சாதிச்சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர். நான் தொடர்ந்து கல்லூரியில் படிக்க வேண்டுமானால், சாதிச்சான்றிதழ் தரவேண்டும் என கல்லூரி நிர்வாகம் கேட்டு வருகிறது.

    வருவாய்த்துறை தரமறுக்கும் ஒரு சான்றிதழ் இருந்தால் மட்டுமே நான் தொடர்ந்து கல்லூரியில் படிக்க முடியும் என கல்லூரி நிர்வாகம் கூறிவருவதால், எனது கல்லூரி வாழ்க்கை சூனியமாகிவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    நான் படித்தால் மட்டுமே என் குடும்பத்தை காப்பாற்ற முடியும். என்னை நம்பி உள்ள எனது குடும்பத்தை காப்பாற்ற, ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எனக்கு காட்டுநாயக்கன் என்ற சாதியின் பெயரை குறிப்பிட்டு சாதிச்சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.

    கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும், பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பணம் கொடுத்து உதவியது போல, கல்லூரியில் சேர்ந்து படிக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாயமான காட்டுநாயக்கன் சமுதாயத்தைச் சேர்ந்த எனக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×