என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    மானிய விலையில் 3 ஆயிரம் லிட்டர் டீசல் வழங்கக்கோரி கோட்டைப்பட்டினம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து தினந்தோறும் 310 விசைப்படகுகளில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.

    குறிப்பாக இந்த மீனவர்களின் வலைகளில் இறால் மற்றும் விலை உயர்ந்த மீன்கள் அதிக அளவில் கிடைத்து வந்தன. தற்போது மீன்பாடு தலைகீழாக குறைந்துள்ளது. அத்துடன் மீன்கள் போதிய அளவில் கிடைத்தபோதும் மீன்களின் விலை மிகவும் குறைந்துவிட்டது.

    இதனால் மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதுமட்டுமின்றி மாதந்தோறும் மீனவர்களுக்கு அரசு சார்பில் 1,500 லிட்டர் டீசல் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டீசல் 15-ந்தேதிக்குள் தீர்ந்து விடுகிறது.

    அதற்குமேல் வெளி மார்க்கெட்டில் மானியம் அல்லாத டீசலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. ஒரு முறை மீனவர்கள் விசைப்படகில் கடலுக்கு சென்று வந்தால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுவதாகவும் கூறிவந்தனர்.

    எனவே இதனை சரிக்கட்டும் வகையில் தமிழக அரசு மானிய விலையில் வழங்கும் டீசலை 1,500 லிட்டரில் இருந்து 3 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதனை வலியுறுத்தி கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் வருகிற செப்டம்பர் 2-ந் தேதி வரை நீடிக்கும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

    மீனவர்களின் இந்த வேலைநிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து உள்ளனர். மேலும் தினந்தோறும் ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது.

    அரசு, மீனவர்களின் பிரச்சினை குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவர் சங்க பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    போதுமான பயிற்சி இல்லாத காரணத்தாலேயே இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் அதிக பதக்கங்களை வெல்ல முடியாததற்கு காரணம் என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல மொழிகள் பேசும் நாட்டில் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கை ஆபத்தான பல விளைவுகளை ஏற்படுத்தும். ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற இந்துத்துவக் கொள்கையையே இந்தக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

    ஏற்கனவே உயர்கல்வியில் 90 சதவிகிதமும், பள்ளிக்கல்வியில் 50 சதவிகிதமும் தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. முழுக்க முழுக்க தனியார்மயமாக்குவதையே இந்த கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. மேலும், மாநில உரிமைகளையும் இது பறிப்பதாக உள்ளது. எனவே, இந்த கல்வி கொள்கை முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.

    தமிழகத்தில் மக்கள் பிரச்சனையை ஆளுங்கட்சி முன்வைப்பது இல்லை. எதிர்கட்சி விவாதிப்பதில்லை. ஆனால், ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் நீக்கியிருப்பது முற்றிலும் ஜனநாயக விரோதம்.

    திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தில் தொடரும் மர்மக் காய்ச்சலைத் தடுப்பதற்கு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சனைகளை தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒலிம்பிக்கில் இரண்டு பெண்கள் பதக்கங்களை வென்று பட்டியலில் இடம் பெற செய்து இருப்பது பெருமையளிக்கிறது. அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் விளையாட்டுத் துறையில் போதுமான அக்கறை செலுத்துவதில்லை. போதுமான பயிற்சி இல்லாத காரணத்தாலேயே இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் அதிக பதக்கங்களை வெல்ல முடியாததற்கு காரணம். வருங்காலங்களில் இத்தகைய குறைகள் களையப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் உடனிருந்தனர்.
    புதுக்கோட்டை லோக் அதாலத்தில் 492 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் (லோக் அதாலத்தில் 492 வழக்குகள் விசாரிக்கப்பட்டு 492 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தன் மூலம் வங்கிகளில் வராக் கடனாக இருந்த ரூ.4 கோடியே 73 லட்சம் வசூலிக்கப்பட்டது.

    மாவட்ட முதன்மை நீதிபதி கே.முரளி சங்கர் தலைமையில் முகாம் நடைபெற்றது. மேலும் இந்த வசூல் முகாமில் அத்தியாவசிய பண்டங்கள் நீதிபதி இங்ஸ்லி கிருஸ்டோபர், தலைமைக் குற்றவியல் நீதிபதி அனில்குமார், கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதி சாஸ் பிரியா, சார்பு நீதிபதி இந்துராணி, குற்றவியல் நீதிபதி நாகராஜன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ரவீந்திரன் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைந்தனர்.

    தமிழகத்தில்போட்டி சட்டசபை கூட்டத்தை தி.மு.க. நடத்தியுள்ளது அசிங்கமான வி‌ஷயம் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் போராட்டத்திற்கு பா.ஜனதா ஆதரவு குறித்து தமிழக பா.ஜனதா தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர வேண்டும். விவசாயிகளின் போராட்டம் நியாயமானது. காவிரி, பாலாறு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய பிரச்சினைகளில் பா.ஜனதா இரட்டை நிலைப்பாடு எதுவும் எடுக்கவில்லை.

    காவிரி, முல்லைபெரியாறு , பாலாறு ஆகிய பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமை எந்தவிதத்திலும் பாதிப்படைய கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

    மற்றவர்கள் ஆயிரம் கருத்துக்கள் கூறலாம். அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அமைச்சரவையில் 75 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு அமைச்சர் கூறும் கருத்தை வைத்து முடிவு செய்ய முடியாது.ஒட்டு மொத்த அமைச்சர்களும் ஜல்லிகட்டு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நிச்சயமாக வரும் காலத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தமிழகத்தில் கேலிகூத்தான சட்டசபை நடந்து வருகிறது. சட்டசபையில் தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளையும் கலந்து ஆலோசித்து அதற்கு தீர்வு காண வேண்டும். போட்டி சட்டசபை கூட்டத்தை தி.மு.க. நடத்தியுள்ளது அசிங்கமான வி‌ஷயம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்கநாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்கநாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர், நல்லிணக்கநாள் உறுதிமொழியான ‘நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுப்பூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல் பேச்சு வார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளை பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும், இதனால் உறுதியளிக்கிறேன்” என வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் நல்லிணக்கநாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு ) மீரா பரமேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி மத நல்லிணக்க நாள் உறுதிமொழி கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் எடுக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பூமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், அலுவலக மேலாளர்கள் வைத்தியநாதன் (பொது), முத்துலெட்சுமி (குற்றவியல்) உள்பட வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை அருகே ஆம்னி வேன் மோதி புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

    பொன்னமராவதி:

    சிவகங்கை மாவட்டம் கேசம்பட்டியை சேர்ந்தவர் விஜி ( வயது 27). இவர் தனது நண்பர் அதே ஊரை சேர்ந்த குமார்(27) என்பவருடன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து கேசம்பட்டிக்கு 2 மோட்டார் சைக்கிளில் தனித் தனியே சென்றனர்.

    பொன்னமராவதி - புழுதிபட்டி சாலையில் கேசராபட்டி பகுதியில் செல்லும் போது எதிரே வந்த ஆம்னி வேன் மோட்டார் சைக்கிள்களில் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். உடனே அவர்களை 108 ஆம்புலன்ஸ் குழுவினர் மீட்டு வலையபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜி இறந்தார். குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி வேன் டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த விஜிக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    கீரனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    கீரனூர் மின் வாரிய செயற் பொறியாளர் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    புதுக்கோட்டை, குளத்தூர் தாலூகா, தொண்டை மான்நல்லூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதியான தொண்டைமான்நல்லூர், கீரனூர், உடவயல், குளத்தூர், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், தென்ன திரையான் பட்டி, சிட்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாப் பல்கலைக்கழகம் ஆகிய பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணிவரை மின்சாரம் இருக்காது என்று கீரனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

    விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருமயம்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரத்தில் விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் மருந்து பாதுகாப்புத் துறையில் 100 சதவீதம் அன்னிய முதலீட்டை விலக்கி கொள்ள வேண்டும் பசுமாட்டின் பெயரில் தலித் மக்களை ஒடுக்கும் சக்திகளை கட்டுப்படுத்தி ஒடுக்கப்பட்டவர்களை பாதுகாக்க வேண்டும். கல்வி காவிமயம் மற்றும் சமஸ்கிருத திணிப்பை கைவிடவேண்டும் மாநிலக்கல்விக் கொள்கையில் தலையீடு செய்வதை நிறுத்த வேண்டும்.

    பாரத ஸ்டேட் வங்கியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விகடனை வசூல் செய்யும் உரிமத்தை தனியாரிடம் வழங்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் பொதுத்துறை நிறுவனங்களை அன்னிய நாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்க்கு திருமயம் ஒன்றிய செயலாளர் சுப.தங்கமணி தலைமை வகித்தார். அரிமளம் ஒன்றிய செயலாளர் பெர மையா. ஒன்றிய துணை செயலாளர்கள் அர்சுணன், சின்னக்கருப்பன், ராமநாதன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் ரெங்கையா மாவட்ட நிர்வாக்குழு உறுப்பினர் சிங்கமுத்து, காடப்பன், மெய்யப்பன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் 200 குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்று புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் கூறினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சத்யம் ஓட்டல் கூட்டரங்கில் சமூகப் பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அரசுத்துறை அலுவலர்களுக்கு குழந்தைகளின் உரிமைகள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    முகாமினை மாவட்ட கலெக்டர் கணேஷ் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தகவல் அடங்கிய மாவட்ட வளஅடைவு கையேட்டினை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    குழந்தைகளின் பாதுகாப்பினை வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் குழந்தைகளுடன் தொடர்புடைய அரசு மற்றும் அரசு சாரா அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு குழந்தை உரிமைகள், பராமரிப்பு மற்றும் பாது காப்புதிறன் வளர்ப்பு பயிற்சி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பயிற்சி வகுப்பில் குழந்தை தொழிலாளர் பிரச்சனை, கிராம வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், குழந்தை களுக்கிடையிலான பாலியல் பாகுபாடுகள், தாக்கங்கள் அதன் தீர்வுகள், குழந்தை கடத்தல் தடுத்தல், இடம் பெயர்தலும் குழந்தைகள் மீதான அதன் தாக்கங்களும், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பில் கிராம நிர்வாக அலுவலர்களின் பங்கு, இளஞ்சிறார் நீதிச்சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம், குழந்தைகளின் நடத்தை சார்ந்த பிரச்சனைகள் மற்றும் கையாளும் வழிமுறைகள், குழந்தைகள் பாதுகாப்பிற்கு எதிரான முக்கிய பிரச்சனைகள் மேற்கண்ட பல்வேறு பிரச்சனைகளை களைவதற்கு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் சமுதாயத்தின் பங்கு போன்ற பல்வேறு தகவல்கள் விளக்கமாக எடுத்துரைக்கப்படவுள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை இத்திட்டத்துடன் தொடர்புடைய அரசு மற்றும் அரசு சாரா அலுவலர்களுக்கு 15 திறன் வளர்ப்பு பயிற்சிகள் மூலம் 925 நபர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 44 குழந்தைகள் பயனடைந்து வருவதுடன் 200 குழந்தைகள் பல்வேறு பாதிப்புகளிலிருந்து மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு துறை மதுரை மண்டல துணை இயக்குநர் தனசேகரப்பாண்டியன், மாவட்ட சமூகநல அலுவலர் ரேணுகா, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, பாதுகாப்பு அலுவலர் தனபால் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கீரனூர் அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்
    கீரனூர்:

    கீரனூர் அருகே உள்ள அம்மாசத்திரத்தை சேர்ந்தவர் முத்துகருப்பன் (வயது 27). இவர் கடந்த 12-ந்தேதி இரவு அம்மாசத்திரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் முத்துகருப்பன் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிக்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துகருப்பன் இறந்தார். விபத்து குறித்து கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் வழக்குப் பதிவு செய்து, கார் டிரைவர் முத்துவை கைது செய்தார்.
    திருமயம் ஸ்ரீசத்திய பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
    திருமயத்தில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீசத்தியமூர்த்தி பெருமாள் கோவில் ஆடிப்புறத்திருவிழா 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டாகப்படி சார்பில் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் நடைபெற்றது.

    ஒவ்வொரு நாளும் பல்லாக்கில் சாமி வீதியுலா நடைபெற்றது. அதனை தொடர்ந்து முக்கிய திருவிழாவான ஆண்டாள் திருக்கல்யாணம் கடந்த 10ம் தேதி நடைபெற்று வீதியுலா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேர்திருவிழா நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீசத்தியமூர்த்தி பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் பால், தேன் தயிர், சந்தனம் மலர்கள் ஆகிய 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட சாமி மேள தாளங்கள் முழங்கசாமி பல்லாக்கில் தூக்கி வந்து தேரில் அமர்த்தி பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோ‌ஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் முக்கிய வீதியான பெரியதெரு, நடுவீதி, சிவன்கோவில் தெரு,பெருமாள் கோவில் தெரு வழியாக தேரடிக்கு வந்து சென்றது. பக்தர்கள் கைத்தட்டி உற்சாகத்தை தெரிவித்தனர். பின்னர் சாமியை புஷ்கரணி ஊருணிக்கு கொண்டு சென்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் திருமயம் எம்.எல்.ஏ.ரகுபதி ஒன்றியசெயலாளர் சரவ ணன்,தே,மு,தி,க,.மாவட்ட செயலாளர். ராமசாமி, மாவட்ட பொருளாளர் சர்புதீன் முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் துரைராஜா, முன்னாள் ஒன்றிய க்குழுதுணைத் தலைவர் இராஜமாணிக்கம் ஒன்றிய பொருளாளர் காத்தப்பன் மாவட்ட பிரதிநிதிஆர்.மேகநாதன், சுப.செம்பையா நிர்வாக அதிகாரி பாண்டிராஜ்,உதவிஆணையர் ரமேஷ், ஆலயமேற்பார் வையாளர் ராஜேந்திரன் மற்றும் வர்த்தக சங்கத்தலைவர் கருப்பையா, முன்னாள் கூட்டுறவு சஙத்தலைவர் வீரசுப்பையா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை அருகே திருமணமான 2 மாதத்தில் ஊராட்சி செயலர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவரங்குளம்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள சூத்தியன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவர் கைக்குறிச்சி ஊராட்சி செயலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் நேற்று சுரேஷ் மோட்டார் சைக்கிளில் அரசடிப்பட்டி நால் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் டிராக்டர் ஒன்று சென்றது. திடீரென நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள், டிராக்டரின் பின்புறம் மோதியது. இதில் தவறி கீழே விழுந்த சுரேஷின் தலையில் டிராக்டரின் டயர் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பலியான சுரேஷின் தந்தை கணேசன் புதுக்கோட்டை விடுதி ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். திருமணமான 2 மாதத்தில் சுரேஷ் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×