என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    விராலிமலையில் அமைந்துள்ள ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி ஆசிரமத்தில் வருகிற 4-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தை திடலில் உள்ள ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி ஆசிரம அமைந்துள்ளது. இங்கு வருகிற 4-ந்தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி இன்று காலை (1-ந்தேதி, வியாழக் கிழமை) காலை 7.30 மணிக்கு புனித தீர்த்தம் எடுத்து கிரிவலம் வருதல், காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், 10 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

    நாளை (2-ந்தேதி) மாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, முதற்கால ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனையும், 3-ந்தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை ஆரம்பம், வேத பாராயணம், விமான கலசம் வைத்தல், பூர்ணாஹூதி தீபாராதனை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை ஆரம்பம் வேதபாராயணம் நடைபெற உள்ளது.

    இதை தொடர்ந்து வருகிற 4-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு கோபூஜை, நான்காம் கால யாகசாலை ஆரம்பம், 6 மணிக்கு ஸ்பர்சா ஹூதி, 7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, காலை 7. 30 மணிக்கு பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், 8.20 மணிக்கு விமான மஹா கும்பாபிஷேகம், 8.30 மணிக்கு மூலஸ்தானம் மஹா கும்பாபிஷேகம், தீபாராதனை, 10 மணிக்கு மஹா அபிஷேகம் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்படும்.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு சத்ருசம்கார மூர்த்தி சுவாமிகள் வீதி உலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி ஆசிரம நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
    பொன்னமராவதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. நேற்று மாலை 5மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது .

    பொன்னமராவதி:

    பொன்னமராவதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. நேற்று மாலை 5மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது . முக்கிய சாலைகளான அண்ணா சாலையில் மழை நீர் சூழ்ந்தது.

    இதே போல ஆஸ்பத்திரி ரோடு,புக்குடி வீதி,வேலுப்பிள்ளை காம்பவுன்ட், ஆகிய பகுதிகளில் சாக்கடையில் ஏற்பட்ட மண் அடைப்புகள் காரணமாக அங்குள்ள கடைகளிலும் வீடுகளிலும் முட்டியளவு சாக்கடை நீர் புகுந்தது.

    இதேபோல பொன்னமராவதியை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    கோவில் திருவிழாவை யொட்டி ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1600க்கும் அதிகமான மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அங்குள்ள ரேணுகா தேவி அம்மன் கோவிலில் 10 நாள் திருவிழா நடைபெறுவதையொட்டி அப்பகுதி விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் அனைத்தும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஐஸ் உற்பத்தி, கருவாடு உற்பத்தி உள்பட மீன்பிடி சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் ரூ.40 லட்சம் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 10 நாட்கள் திருவிழா முடிந் ததும் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டைப்பட்டினம் மீனவர்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முதல் போராட்டத்தை வாபஸ் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுக்கோட்டை அருகே குடிநீர் குழாய்க்காக பள்ளம் தோண்டும் போது 12 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

    அறந்தாங்கி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ளது பெருமகளூர் பேரூராட்சி. புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள இங்கு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சோமநாத சுவாமி உள்ளது.

    இக்கோவிலில் உள்ள லிங்கம் தாமரை தண்டுலிங்கம் என அழைக்கப்படுகிறது. இக் கோவிலில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கே முன்பே திருப்பணி வேலைகள் தொடங்கியது. பொருளாதார பற்றாக்குறை காரணமாக திருப்பணிகள் இன்னும் முடிவடையாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கோவில் அருகே குடிநீர் குழாய் அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. பாதியளவு தோண்டிய போது எந்திரத்தில் ஏதோ பொருள் தட்டுப்பட்டு சத்தம் கேட்டது.

    இதையடுத்து பொக்லைன் டிரைவர் மற்றும் பணியாளர்கள், அந்த பொருள் என்ன வென்று பார்த்த போது அம்மன் சிலை ஒன்று கிடந்தது. மேலும் மண்ணுக்குள் ஏராளமான சிலைகள் இருப்பதும் தெரியவந்தது.

    இது குறித்து உடனே வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேராவூரணி தாசில்தார் ரகுராமன் மற்றும் சேதுபாவாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்களது முன்னிலையில் மண்ணுக்கடியில் தோண்டும் பணி நடைபெற்றது.

    அப்போது மண்ணுக்குள் நடராஜர், சிவன், முருகன், விநாயகர் உள்ளிட்ட 12 ஐம் பொன்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது

    அந்த சிலைகளை மீட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பேராவூரணி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்தனர். சாமி சிலைகளுக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்யப்பட்டன.

    அந்த சிலைகள் அங்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. சோமநாதசுவாமி கோவில் சோழர் காலத்து தொடர்புடைய கோவிலாகும். இக்கோவிலில் இருந்து தஞ்சாவூர் அரண்மனைக்கு சுரங்கப்பாதை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இக்கோவிலில் பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட சாமி சிலைகளை திருடர்கள் திருடி செல்லாதவாறு இருக்க மண்ணில் புதைத்து வைத்திருக்கலாம். அப்படி புதைக்கப்பட்ட சிலைகள் நேற்று கண்டெடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகளை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து வியந்து சென்றனர்.

    புதுக்கோட்டை அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 4 நாட்டுப்படகு மீனவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராம். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் வெங்கட்ராம், ரமேஷ், முத்துமாரி , கருப்பையா ஆகிய 4பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கரையில் இருந்து 10 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது , அலை சீற்றத்தால் என்ஜினுக்குள் கடல் நீர் புகுந்து பழுதானது.

    இதனால் 4 மீனவர்களும் கரை திரும்ப முடியாமல் தவித்தனர். உடனே மீனவர்கள் 1093 என்ற அவசர எண்ணுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அதி நவீன ரோந்து படகு மூலம் சென்று 4 மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து 4 பேரும் மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    தேசிய வேலை உறுதித்திட்டத்தில் ஆண்டுக்கு நூறுநாள் வேலையும் சட்டப்படியான கூலி ரூ.203-ம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 102 பெண்கள் உட்பட 213 பேர் கைது செய்யப்பட்டனர்.

    குன்றாண்டார்கோவில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய பேராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பி.மருதப்பா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலச் செயலாளர் சங்கர் பேசினார். நிர்வாகிகள் முனியய்யா, கே.தங்கவேல், பீமராஜ், சத்திவேல், பழனிச்சாமி உள்ளிட்ட 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் துரைச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடையப்பன், பொன்னுச்சாமி, மணிவேல், லெட்சுமி, சுப்பையா, சந்திரபாண்டியன், தங்கராஜ் மற்றும் 84 பெண்கள் உட்பட 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அன்னவாசலில் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டப்பொருளாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் சுப்பையா, முருகன், சோலையன், ராமையா, மணி, அஞ்சலைதேவி மற்றும் 12 பெண்கள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஆவுடையார் கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வீரையா மற்றும் சுப்பிரமணியன், காசி, கலந்தர், காளியம்மாளார் உள்ளிட்டோர் பேசினர்.
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பொன்னமராவதியில் கொன்னையூர் மாரியம்மன் கோவிலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தே.மு.தி.க. சார்பில் வெள்ளித்தேர் இழுக்கப்பட்டது.

    திருமயம்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பொன்னமராவதியில் கொன்னையூர் மாரியம்மன் கோவிலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தே.மு.தி.க. சார்பில் வெள்ளித்தேர் இழுக்கப்பட்டது.

    இதில் மாவட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட அவைத் தலைவர் சீனிவாச மூர்த்தி, புதுக்கோட்டை நகர செயலாளர் சுப்பிரமணியன். ஒன்றிய செயலாளர் சின்னக் கருப்பன், ஒன்றிய பொருளாளர் மோகன், ஒன்றிய துணை செயலாளர் அன்புச்செல்வன், நகர செயலாளர் செல்வகுமார் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னமராவதி:

    திருச்சி மாவட்டம் வளநாடு சேர்ந்தவர் சங்கன் மகன் திருப்பதி வெங்கடேசன் (வயது32). இவர் தனது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பொன்னமராவதி வந்துள்ளார்.

    பின்னர் அவர் வெள்ளையாண்டிபட்டி விளக்கு என்ற இடத்தில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் நிலைதடுமாறி விழுந்துள்ளது. இதில் பலத்த காயத்துடன் திருப்பதிவெங்கடேசன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார்.இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    பள்ளியில் பயிலும் சிறுவர், சிறுமியர்கள் கிருஷ்ணவேடம் அணிந்து நடனம் ஆடினர். புல்லாங்குழல் ஊதி பாட்டுப்பாடி மகிழ்வித்தனர். மேலும் கிருஷ்ணரின் சேட்டைகளான வாயில் வழிய, வழிய வெண்ணைய் உண்பது போன்ற நிகழ்ச்சிகளையும் நடித்து காட்டினர். ஏராளமான குழந்தைகளும், பெற்றோர்களும் போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் தங்க மூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    அறந்தாங்கி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 14 பேர் காயம் அடைந்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பாண்டிபத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று (23-ந்தேதி) காவடி எடுப்பு மற்றும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமன் வீட்டு அருகில் வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர் செட்டில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ராமன் மற்றும் அருகில் உள்ள வீடுகளில் வசிப்போர் சிலர் கோவிலுக்கு சென்று அங்கிருந்த நிர்வாகிகளிடம், பிள்ளைகள் பாடம் படிப்பதால் குறைந்த சத்தத்தில் பாடல் ஒலிபரப்புமாறு கூறியுள்ளனர்.

    இதற்கு அவர்கள் மறுக்கவே நியாயம் கேட்டு சென்றவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை அதே பகுதியை சேர்ந்த அண்ணாத்துரை (வயது 40) தட்டி கோட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ராமர் மற்றும் அவரது தரப்பினர் சேர்ந்து அண்ணாதுரை, வினோத் (19), ரகுராம்ராஜன் (37), ஆனந்த் (23), மணிமாறன் (28), சுப்பிரமணி (45) ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளனர்.

    இதில் அவர்கள் அனைவரும் படுகாயம் அடைந்தனர். இதேபோல் அண்ணாதுரை தரப்பை சேர்ந்தவர்கள் ராமர் (49), அவரது மனைவி முத்து (42), பாரதி (21), மெய்யப்பன், சுப்பையா, பெருமாள், ஜெய ராஜ் ஆகியயோரை தாக்கி உள்ளனர். இதனால் அந்த இடமே கோஷ்டி மோதலால் போர்க்களம்போல காட்சி அளித்தது.

    இதில் படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அண்ணாதுரை மட்டும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே திருவிழா காண வந்திருந்த அறந்தாங்கியை அடுத்த பிராந்தனி பகுதியை சேர்ந்த வீரையன் மகள் ஆனந்த்குமார் திடீரென பெட்ரோல் குண்டை கோவில் வளாகத்தில் வீசினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிக்க வில்லை. இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பு கூடியது.

    உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மற்றொரு பெட்ரேல் குண்டையும் பறிமுதல் செய்தனர்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் விரைந்து வந்து மோதலை தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தார். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் அறந்தாங்கி டி.எஸ்.பி. செல்லபாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த மோதல் சம்பவம் தொடர்பாக நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விராலிமலை அருகே குப்பை கிடங்கில் தி.மு.க. பிரமுகர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விராலிமலை:

    விராலிமலை அருகே சுடுகாட்டில் எரிந்த நிலையில் கிடந்த தி.மு.க. பிரமுகர் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த ராமகவுண்டன்பட்டி கிராமத்தை ஒட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் நேற்று இரவு திடீரென கரும்புகையுடன் கூடிய துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது அங்கு அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் உடல் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது.  தொடர்ந்து அந்த உடலில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் இது குறித்து உடனடியாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின்பேரில் விரைந்து வந்த புதுக்கோட்டை எஸ்.பி. லோகநாதன், கீரனூர் டி.எஸ்.பி. தமிழ்செல்வன், விராலிமலை இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் பிணமாக கிடந்தவர் உடலில் எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்தனர்.  பின்னர் கரிக்கட்டையாக கிடந்த அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதை தொடர்ந்து புதுக்கோட்டையில் மோப்ப நோய் மார்ஷல் வரவழைக்கப்பட்டது. இந்த நாய் சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை.

    இதற்கிடையே திருச்சியில் இருந்து தடய அறிவியல் ஆய்வு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஆய்வு  செய்ததில் பிணமாக கிடந்தவரின் உடல் அருகே சாவி கொத்துக்கள் கிடந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அவர் தி.மு.க. கரை வேட்டி அணிந்திருந்ததும் தெரிய வந்தது. இந்த வேட்டி பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.

    எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் யார், தி.மு.க. பிரமுகரா, அவரை யாராவது கடத்தி வந்து கொலை செய்து அதனை மறைக்க தீவைத்து எரித்து சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குப்பை கிடங்கில் தி.மு.க. பிரமுகர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் மீது போலீசார் வரும் வரை தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. அவர்கள் வந்த பின்னர்தான் தீயை முழுமையாக அணைத்தனர். எனவே கொலை சம்பவம் சிறிது நேரத்திற்கு முன்னர்தான் நடந்திருக்கவேண்டும் என்றும், கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர்.

    இதையடுத்து போலீசார் அனைத்து சோதனை சாவடிகளையும் உஷார் நிலையில் இருக்க செய்தனர். சந்தேகத்திற்கிடமான முறையில் நபர்கள், வாகனம் ஆகியவற்றை சோதனையிட அறிவுறுத்தினர். ஆனால் கொலையாளிகள் யாரும் பிடிபடவில்லை. எனவே கொலையாளிகள் சம்பவ நடந்த பகுதியில் தான் பதுங்கி இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
    புதுக்கோட்டையை சேர்ந்த தொழிலாளி குவைத் சிறையில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் காரையூரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஷாஜகான் வேலைக்காக சென்றார். அங்கு தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அடி தடி வழக்கு ஒன்றில் சிக்கினார். இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

    4 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர் நேற்று திடீரென மயக்கமடைந்தார். அவரை அங்குள்ள சிறைக்காவலர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் அதற்குள் ஷாஜகான் இறந்துவிட்டார்.

    இது குறித்து காரையூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு குவைத் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ஷாஜகானின் மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுத்தனர்.

    ஷாஜகான் சிறைக்காவலர்கள் தாக்கியதால் இறந்தாரா? அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்தாரா? என்பது மர்மமாக உள்ளது. குவைத் சிறையில் புதுக்கோட்டை தொழிலாளி மரணமடைந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×