என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2016 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடை பெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் விரைவில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் தொடர்பான பல்வேறு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தலை சிறப்பாக நடத்தும் வகையில் மேற் கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல்களை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் மன்றத்தில் வைத்து ஆலோசித்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் கருத்தினைப் பெறுதல், வரைவுப்பட்டியலுக்கு திருத்தங்கள் தொடர்பான கருத்துக்களை உரிய ஆவணங்களுடன் ஒப்படைத்தல், வாக்குச் சாவடிகளின் இறுதிப்பட்டியலை வெளியிடுதல், வாக்காளர்களின் வரைவு பட்டியலை 100 சதவீதம் சரிபார்த்தல், புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து வாக்காளர் பட்டியல் அச்சிடுவதற்கு வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வாக்குச்சாவடியின் எண்ணிக்கைக்கு ஏற்ப மண்டலங்களை பிரித்தல் தொடர்பான கருத்துருக்கள் பெறுதல் மற்றும் அவற்றிற்கான மண்டல அலுவலர்களை நியமனம் செய்தல், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடத்துதல் மற்றும் மேற்கண்ட அலுவலர்களை நியமனம் செய்தல், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான இட ஒதுக்கீடு விபரங்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது அனைத்து அலுவலர்களும் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளை விரைவாக முடித்து சிறப்பாக தேர்தல் பணி ஆற்ற சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு பக்க பலமாக உள்ளது. வெளிப்படையாக அனுமதி அளிக்காவிட்டாலும் அணை கட்டப்படுவது உறுதியாகி விட்டது. கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 15 ஆயிரம் கனஅடி நீர் அளிக்காமல் கண் துடைப்பிற்காக தற்போது அணையை திறந்து விட்டு உள்ளனர்.
கர்நாடகாவில் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது என்ற போர்வையில் கர்நாடக மாநில அரசே மறைமுகமாக முழு அடைப்பை நடத்தியது. இதில் தமிழக முதல்-அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தியது கண்டனத்திற்கு உரியது.
கர்நாடகாவில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அரசியல் லாபத்திற்காக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. கர்நாடகத்தை போல கேரள மற்றும் ஆந்திர அரசுகளும் தமிழகத்தை வஞ்சிக்கின்றன.
தமிழக முதல்-அமைச்சர் முல்லை பெரியாறு பிரச்சனையிலும், காவிரி பிரச்சனையிலும் முறையாக உச்சநீதிமன்றத்தை அணுகி முறையான நடவடிக்கை எடுத்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. காவிரி பிரச்சனையில் தமிழக முதல்-அமைச்சரின் செயல்பாடு திருப்தி தரக்கூடியதாக உள்ளது. ஆனால் இன்றைக்கு உள்ள நிலையில் கர்நாடகா ஒட்டு மொத்தமாக ஓரணியில் உள்ளது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி விட்டார்கள். ஆனால் தமிழகம் பிளவுபட்டு உள்ளது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.
எனவே தமிழக முதல்-அமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஒரு முடிவு எடுத்து பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறுவது பிரதமர் நியாயமாக நடந்து கொள்வார் என்பதற்காக அல்ல. எதிரும் புதிருமாக உள்ள அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஓரணியில் உள்ளது என்பதை நிரூபிப்பதற்காகத்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2016-17 ஆம் ஆண்டில் ரூ.91.72 கோடி செலவினத்தில் 22 மாவட்ட ங்களில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.3.4922கோடி செலவினத்தில் செயல்படுத்தப்படவுள்ளன.
தோட்டக்கலை பயிர்களில் வீரிய ஓட்டு இரக காய்கறிகள், மிளகாய், மா, கொய்யா, திசுவாழை, முந்திரி, மல்லிகை, சாமந்தி, மிளகு ஆகியவற்றில் புதிய தோட்டங்கள் அமைப்பதற்கு ரூ.87.91 லட்சம் செலவில் 520 எக்டர் பரப்பிற்கு 40 சதம் மானியமும், பப்பாளி, எலுமிச்சை போன்ற பயிர்களுக்கு 50 சதம் மானியமும் வழங்கப்படுகிறது.
பசுமைக்குடில்கள், நிழல்வலைகுடில்கள், பறவை தடுப்பு வலை மற்றும் நிலப்போர்வை போன்ற உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளை உள்ளடக்கிய பாதுகாக்கப்பட்ட சாகுபடி இனத்திற்கு ரூ.63.325 லட்சம் செலவினத்தில் பசுமைக்குடில்கள் மற்றும் நிழல்வலைகுடில்கள் 14000 சதுர மீட்டர் பரப்பிலும், நிலப்போர்வை 50 எக்டர் பரப்பிலும் 50 சதம் மானியத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பண்ணை இயந்திரங்களான மினி டிராக்டர்கள், பவர் டில்லர்கள் மற்றும் தெளிப்பான்கள் 25 சத மானியம் முதல் 50 சத மானியம் வரை அனுமதிக்கப்ட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரூ.3.875 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அறுவடைக்கு பிந்தைய மேலாண்மைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள 50 சதம் மானியத்தில் சிப்பம் கட்டும் அறை, குறைந்த செலவின வெங்காய சேமிப்பு கிடங்கு போன்றவை செயல் படுத்தப்பட உள்ளன.
தோட்டக்கலை பயிர்களுக்கான சந்தை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த மானியத்துடன் கூடிய ஊரக சந்தை, சில்லறை விற்பனை நிலையம் மற்றும் நடமாடும் விற்பனை நிலையம் அமைக்க விவசாயிகள் மற்றும் விவசாய உற்பத்தி குழுக்கள் வரவேற்கப்படுகின்றனர். இதற்காக ரூ.12.750 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் வழங்கிய இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி தேர்தல் 2016ஐ முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் வரைவு பட்டியல்களின் மீதான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான கலந்தாய்வுக்கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் 24.10.2016 உடன் நிறைவடைய உள்ளதால் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உள்ளாட்சி சாதாரண அக்டோபர் 2016ல் நடத்தும் வகையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆரம்பக்கட்ட பணிகளை துவக்கியுள்ளது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குச் சாவடிகளில் வரைவு பட்டியல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள கால அட்டவணையின்படி வெளியிடப்பட்டுள்ளது.
இதில் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் ஊரகப்பகுதிகளில் 2252 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற பகுதிகளில் 273 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற பகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஊரகப்பகுதிகளுக்கு வாக்கு சீட்டு முறைகளும் பயன் படுத்தப்படவுள்ளது.
நகர்ப்பகுதிகளில் 1200 வாக்காளர்களுக்கு 1வாக்குச் சாவடியும், ஊரகப் பகுதிகளில் 1000 வாக்காளர்களுக்கு 1 வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளதுடன் நகர்ப்பகுதிகளில் 1 வார்டுக்கு குறைந்தபட்சம் 1 வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர்கள் எண்ணிக்கை 1200க்கும் மேல் இருக்கும் பட்சத்தில் தேவைக்கேற்ப கூடுதல் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 638 ஒரு வார்டு வாக்குச்சாவடிகளும், 1614 இரு வார்டு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் ஆண் வாக்குச்சாவடிகள் 36ம், பெண் வாக்குச் சாவடிகள் 36ம், அனைத்து வாக்காளர்கள் 2180ம் என மொத்தம் 2252 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நகராட்சிகளில் ஆண் வாக்குச்சாவடிகள் 53ம், பெண் வாக்குச் சாவடிகள் 53ம், அனைத்து வாக்காளர்கள் 167ம் என மொத்தம் 273 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து அதிகபட்சம் 2 கி.மீ சுற்றளவிற்குள் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்காளர் பட்டியல்களில் ஏதேனும் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக உரிய படிவங்களில் பூர்த்தி செய்து சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் (வருவாய் கோட்ட அலுவலர்கள்) விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு உடற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது என கலெக்டர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் இராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் ஆறு மாதக்காலம் சிறப்பு உடற்பயிற்சி கல்வி முடித்துள்ள முன்னாள் படைவீரர்களுக்கு உடற்பயிற்சி பணிக்கு உதவிடும் வகையில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் மூலம் நான்கு மாதக்காலம் சிறப்பு உடற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் இராணுவத்தில் 6-மாதக்காலம் சிறப்பு உடற்பயிற்சி கல்வி பெற்றமைக்கான சான்று, அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, வேலை வாய்ப்பு பதிவட்டை போன்ற சான்றுகளுடன் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரில் அணுகி விண்ணப்பிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் மாவட்ட கலெக்டர் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல் படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் திருமயம் ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி, கோட்டூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கிராம சேவை மைய கட்டிட பணியையும், ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் புதுக்கண்மாய் தூர்வாறும் பணியையும், பேரையூர் விளக்கு முதல் கோட்டையூர் விளக்கு வரை மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் பணியையும், கோட்டூர் சாலையில் ரூ.18.87 இலட்சம் மதிப்பீட்டில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் விராச்சிலை ஊராட்சி, விராச்சிலையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட நிதியின் கீழ் ரூ.5.98 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணியையும், ஆதனூர் ஊராட்சி, ஆதனூரில் பிரதமமந்திரி அவா‘யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டின் பணியையும், அரண்மனைப்பட்டியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.25.62 இலட்சம் மதிப்பீட்டில் நடப்பட்டுள்ள நாற்றங்கால் பணியையும் என மொத்தம் ரூ.92.17 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரோஜா, வேலு, வட்டாட்சியர் சார்லஸ், உதவிப் பொறியாளர்கள் ஆனந்த ராஜா, சேது, ஒன்றியப் பணி மேற்பார்வையாளர்கள் குண்டுமணி, சிவசங்கரன், அறிவழகன், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அம்மாப்பட்டியில் செல்வவினாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அம்மாப்பட்டியில் செல்வ வினாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா. நடைபெறுவதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் கணபதி பூஜையுடன் யாக சாலை பூஜை தொடங்கின அதனை தொடர்ந்து திங்கள் கிழமை 05.09.16 காலை 7 மணியளவில் தொடங்கி யாக சாலை பூஜை 8.30வரை தொடர்ந்து நடைபெற்றன.
சரியாக காலை 9.40 மணியளவில் யாக சாலை பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர்குடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து சென்று கோபுரகலசத்தில் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தீர்த்த வாரி தெளிக்கப்பட்ட பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்சியில் பி.கே.வைரமுத்து, வீட்டு வசதி வாரியத் தலைவர், ராதாகிருஷ்ணன் முன்னால் அமைச்சர், எஸ்,ரகுபதி எம்.எல்.எ, க.ராமசாமி தேமுதிக, மாவட்டசெயலாளர், செ.சுப்பிரமணியன். தேமுதிக. ஒ.செயலாளர், எல்.மாயாண்டி, ஊராட்சி மன்றதலைவர். சின்னையா, ஊ.ம.து.தலைவர் மற்றும் அம்மாப்பட்டி ஊரார்கள் பொதுமக்கள் களந்து கொண்டனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் எல்லைக் காட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எஸ்வி. எல்லை 7ஸ்டார் கபடிக்குழு மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய கபடிப்போட்டி நடந்தது. இந்தப் போட்டியை மிராஸ் மாரியப்பன் அம்பலம், ஊராட்சித்தலைவர் முருகே சன், உலகம்பட்டி கருப்பையா அம்பலம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 26 அணி வீரர்கள் பங்குபெற்று கபாடி விளையாடினர். இதில் முதல்பரிசை கட்டையாண்டிபட்டி அணியினரும், இரண்டாம் பரிசை தொட்டியம்பட்டி அணியினரும், 3-வது பரிசை மணல்மேட்டுப்பட்டி அணியினரும், 4-வது பரிசை கண்டியாநத்தம் எல்லைக்காடு எஸ்வி அணியினரும் பெற்றனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கு உடற்கல்வி ஆசிரியர் இன்பராஜ்பொன்னுத்துரை, வைரவன், முத்துராசு, எல்லை செவன்ஸ்டார் அணி, வத்துமலைராசு, பாண்டி, வேலுச்சாமி, கோடங்கி பழனிச்சாமி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்று ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் பி.கே.வைரமுத்து, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநிலச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.ஏ.ரெத்தினசபாபதி, நார்த்தாமலை பா.ஆறுமுகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கினர்.
மேலும் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ராஜசேகர், நகரச் செயலாளர் பாஸ்கர், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி தலைவர் கார்த்திக் தொண்டைமான், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் செல்லத்துரை, நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.சேட், அரிமழம் யூனியன் துணைத் தலைவர் கடையக்குடி திலகர், மாவட்ட கழக பொருளாளா கருப்பையா, கறம்பக்குடி ஒன்றியச் செயலாளர் சரவணக்குமார், பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் அழகு சுப்பையா, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் வீரமணி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராஜ நாயகம், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் சுபத்ரா தேவி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் மாசிலாமணி, முன்னாள் கழக அமைப்புச் செயலாளர் கே.ஆர்.கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் டி.வி.சி.ராசு, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் 2-ஆம் வாரத்தில் (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்த கிராமத்தில் உள்ள குடும்ப அட்டைகள், நியாயவிலைக் கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் பொருட்டு தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் தொடர்புடைய கூட்டுறவுச் சங்க தனி அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரால், துணை ஆட்சியர் நிலையில் நியமிக்கப்படும் அலுவலர் ஒருவர் பார்வையாளராக இருப்பார்.
புதுக்கோட்டை வட்டம் கவிநாடு கிழக்கு கிராமம், ஆலங்குடி வட்டம் வெண்ணாவல்குடி கிராமம், திருமயம் வட்டம் கீழாநிலைகோட்டை கிராமம், குளத்தூர் வட்டம் மேலப்புதுவயல் கிராமம், இலுப்பூர் வட்டம் தச்சம்பட்டி கிராமம், கந்தர்வகோட்டை வட்டம் நத்தமாடிப்பட்டி கிராமம், அறந்தாங்கி வட்டம் வைரிவயல் கிராமம், ஆவுடையார்கோவில் வட்டம் திருப்புனவாசல் கிராமம், மணமேல்குடி வட்டம் ஏனாதி கிராமம், பொன்னமராவதி வட்டம் கொன்னையன்பட்டி கிராமம், கறம்பக்குடி வட்டம் கோட்டைக்காடு கிராமம், விராலிமலை வட்டம் கோமங்கலம் கிராமம்.
இங்கு நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள் குறித்து எடுத்துக்கூறி பயன் பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சி பிருந்தாவனம் அருகே உள்ள பிள்ளையார்குளத்தில் நேற்று தூய்மை பணி நடைபெற்றது. இதில் நகராட்சியுடன், ஊர்காவல் படை ஏரியா கமாண்டர் மணிவண்ணன் தலைமையில் ஊர்காவல் படையினர் 50 பேர் குளத்தில் உள்ள முட்புதர்கள், குப்பைகளை அகற்றினர்.
இந்த பணி இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி, ஆலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல கனமழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆலங்குடி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் கத்திரி, மிளகாய், மக்காச்சோளம், தக்காளி, வெண்டை உள்ளிட்ட பயிர்கள் நல்ல விளைச்சல் கொடுக்கும் என விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






