என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்: அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2016 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் கணேஷ் தலைமையில் நடை பெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் விரைவில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் தொடர்பான பல்வேறு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தலை சிறப்பாக நடத்தும் வகையில் மேற் கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல்களை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் மன்றத்தில் வைத்து ஆலோசித்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் கருத்தினைப் பெறுதல், வரைவுப்பட்டியலுக்கு திருத்தங்கள் தொடர்பான கருத்துக்களை உரிய ஆவணங்களுடன் ஒப்படைத்தல், வாக்குச் சாவடிகளின் இறுதிப்பட்டியலை வெளியிடுதல், வாக்காளர்களின் வரைவு பட்டியலை 100 சதவீதம் சரிபார்த்தல், புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து வாக்காளர் பட்டியல் அச்சிடுவதற்கு வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வாக்குச்சாவடியின் எண்ணிக்கைக்கு ஏற்ப மண்டலங்களை பிரித்தல் தொடர்பான கருத்துருக்கள் பெறுதல் மற்றும் அவற்றிற்கான மண்டல அலுவலர்களை நியமனம் செய்தல், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடத்துதல் மற்றும் மேற்கண்ட அலுவலர்களை நியமனம் செய்தல், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான இட ஒதுக்கீடு விபரங்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது அனைத்து அலுவலர்களும் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளை விரைவாக முடித்து சிறப்பாக தேர்தல் பணி ஆற்ற சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.






