search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே புதைந்து கிடந்த சிவன், முருகன், விநாயகர் உள்பட 12 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
    X

    புதுக்கோட்டை அருகே புதைந்து கிடந்த சிவன், முருகன், விநாயகர் உள்பட 12 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

    புதுக்கோட்டை அருகே குடிநீர் குழாய்க்காக பள்ளம் தோண்டும் போது 12 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

    அறந்தாங்கி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ளது பெருமகளூர் பேரூராட்சி. புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள இங்கு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சோமநாத சுவாமி உள்ளது.

    இக்கோவிலில் உள்ள லிங்கம் தாமரை தண்டுலிங்கம் என அழைக்கப்படுகிறது. இக் கோவிலில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கே முன்பே திருப்பணி வேலைகள் தொடங்கியது. பொருளாதார பற்றாக்குறை காரணமாக திருப்பணிகள் இன்னும் முடிவடையாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கோவில் அருகே குடிநீர் குழாய் அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. பாதியளவு தோண்டிய போது எந்திரத்தில் ஏதோ பொருள் தட்டுப்பட்டு சத்தம் கேட்டது.

    இதையடுத்து பொக்லைன் டிரைவர் மற்றும் பணியாளர்கள், அந்த பொருள் என்ன வென்று பார்த்த போது அம்மன் சிலை ஒன்று கிடந்தது. மேலும் மண்ணுக்குள் ஏராளமான சிலைகள் இருப்பதும் தெரியவந்தது.

    இது குறித்து உடனே வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேராவூரணி தாசில்தார் ரகுராமன் மற்றும் சேதுபாவாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்களது முன்னிலையில் மண்ணுக்கடியில் தோண்டும் பணி நடைபெற்றது.

    அப்போது மண்ணுக்குள் நடராஜர், சிவன், முருகன், விநாயகர் உள்ளிட்ட 12 ஐம் பொன்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது

    அந்த சிலைகளை மீட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பேராவூரணி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்தனர். சாமி சிலைகளுக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்யப்பட்டன.

    அந்த சிலைகள் அங்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. சோமநாதசுவாமி கோவில் சோழர் காலத்து தொடர்புடைய கோவிலாகும். இக்கோவிலில் இருந்து தஞ்சாவூர் அரண்மனைக்கு சுரங்கப்பாதை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இக்கோவிலில் பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட சாமி சிலைகளை திருடர்கள் திருடி செல்லாதவாறு இருக்க மண்ணில் புதைத்து வைத்திருக்கலாம். அப்படி புதைக்கப்பட்ட சிலைகள் நேற்று கண்டெடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகளை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து வியந்து சென்றனர்.

    Next Story
    ×