என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் 200 குழந்தைகளுக்கு மறுவாழ்வு:  கலெக்டர் தகவல்
    X

    குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் 200 குழந்தைகளுக்கு மறுவாழ்வு: கலெக்டர் தகவல்

    குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் 200 குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்று புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் கூறினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சத்யம் ஓட்டல் கூட்டரங்கில் சமூகப் பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அரசுத்துறை அலுவலர்களுக்கு குழந்தைகளின் உரிமைகள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    முகாமினை மாவட்ட கலெக்டர் கணேஷ் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தகவல் அடங்கிய மாவட்ட வளஅடைவு கையேட்டினை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    குழந்தைகளின் பாதுகாப்பினை வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் குழந்தைகளுடன் தொடர்புடைய அரசு மற்றும் அரசு சாரா அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு குழந்தை உரிமைகள், பராமரிப்பு மற்றும் பாது காப்புதிறன் வளர்ப்பு பயிற்சி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பயிற்சி வகுப்பில் குழந்தை தொழிலாளர் பிரச்சனை, கிராம வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், குழந்தை களுக்கிடையிலான பாலியல் பாகுபாடுகள், தாக்கங்கள் அதன் தீர்வுகள், குழந்தை கடத்தல் தடுத்தல், இடம் பெயர்தலும் குழந்தைகள் மீதான அதன் தாக்கங்களும், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பில் கிராம நிர்வாக அலுவலர்களின் பங்கு, இளஞ்சிறார் நீதிச்சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம், குழந்தைகளின் நடத்தை சார்ந்த பிரச்சனைகள் மற்றும் கையாளும் வழிமுறைகள், குழந்தைகள் பாதுகாப்பிற்கு எதிரான முக்கிய பிரச்சனைகள் மேற்கண்ட பல்வேறு பிரச்சனைகளை களைவதற்கு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் சமுதாயத்தின் பங்கு போன்ற பல்வேறு தகவல்கள் விளக்கமாக எடுத்துரைக்கப்படவுள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை இத்திட்டத்துடன் தொடர்புடைய அரசு மற்றும் அரசு சாரா அலுவலர்களுக்கு 15 திறன் வளர்ப்பு பயிற்சிகள் மூலம் 925 நபர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 44 குழந்தைகள் பயனடைந்து வருவதுடன் 200 குழந்தைகள் பல்வேறு பாதிப்புகளிலிருந்து மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு துறை மதுரை மண்டல துணை இயக்குநர் தனசேகரப்பாண்டியன், மாவட்ட சமூகநல அலுவலர் ரேணுகா, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, பாதுகாப்பு அலுவலர் தனபால் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×