என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் பண்ணை தொழிலாளர்கள் சாலை மறியல்
- கந்தர்வகோட்டையில் பண்ணை தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்
- இவர்கள் நிரந்தர பணி கேட்டும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி கிராமத்தில் சுமார் 650 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசுக்கு சொந்தமான மாநில எண்ணெய் வித்து பண்ணை உள்ளது. இந்தப் பண்ணையில் ஆண்கள், பெண்கள் என சுமார் 350 தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நிரந்தர பணி கேட்டும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பண்ணையில் பணிபுரியும் 60 வயதை கடந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படாததை கண்டித்தும், பணி நிரந்தரம் செய்ய கோரி பண்ணையின் எதிரே தமிழ்நாடு அரசு மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக பண்ணை தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அரசப்பன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் மற்றும் அரசு பண்ணை மேலாளர் புகழேந்தி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. தொழிலாளர்களின் இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.