என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
- கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆலங்குடியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது
- முகாமில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
ஆலங்குடி,
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி, ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மெர்ஸி ரம்யா தலைமை வகித்தார். முகாமில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பணிநியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுத்தனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து அரங்கங்கள் அமைத்து ஆலோசனை வழங்கப்பட்டது.
கஜானா காலி, கடன், கொரோனா தடை என முதல்வராக பதவியேற்ற போது இருந்த நெருக்கடியான சூழ்நிலைகளை தனது முயற்சியாலும் திறமையாலும் தகர்த்து தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றி உள்ளார்.
நாள் ஒன்றுக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைத்து நாட்டை உயர்த்த செயல்பட்டு வருகிறார். எனவே பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இதுபோன்ற சித்தங்களை பயன்படுத்தி இளைஞர்களும் பொதுமக்களும் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார்.முகாமில், 2 ஆயிரத்து 25 பேர் கலந்து கொண்ட நிலையில், 303 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
விழாவில் அப்துல்லா எம்பி., வேலைவாய்ப்புத்துறை இணை இயக்குநர் சந்திரன், கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகண்டன், வேல்முருகன், உதவி திட்ட அலுவலர் தில்லைமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், தாசில்தார் பெரியநாயகி, திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை தங்கமணி, ஆணையர்கள் கோகுலகிருஷ்ணன், ஆயிஷாராணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வீர செல்வம், திமுக நகர செயலாளர் பழனிகுமார், துணைச் செயலாளர் செங்கோல், அரசு வக்கீல் கண்ணதாசன், கவுன்சிலர்கள் சஷ்டி முருகன், சையது இப்ராகிம், லட்சுமணன், கருணாநிதி, கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஆசைத்தம்பி, விஜயகுமார், சரவணன், ராஜேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.






