என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் அதிக லாபம் பெற நேரடி நெல் விதைப்பு - வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
    X

    விவசாயிகள் அதிக லாபம் பெற நேரடி நெல் விதைப்பு - வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை

    • விவசாயிகள் அதிக லாபம் பெற நேரடி நெல் விதைப்பு என்று வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
    • அரிசி கஞ்சியுடன் கலந்து, நிழலில் உலர்த்தி விதைக்கலாம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொறுப்பு) சக்திவேல் தெரிவிக்கையில்,

    புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்போது போதுமான அளவு மழை பெய்துள்ளது. இந்த மழைநீரைப் பயன்படுத்தி, விவசாயிகள் கோடை உழவு செய்து, நிலத்தைத் தயார் நிலையில் வைத்துள்ளனர். நேரடி நெல் விதைப்பில், நாற்றங்கால் அமைத்துப் பராமரிக்க வேண்டிய தேவை இல்லாததால், இதற்கான பராமரிப்புச் செலவு நீர்ச் செலவு, தொழிலாளர் செலவினம் குறைந்து, விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.

    நேரடி நெல் விதைப்பில், விதைகளை விதைப்பிற்கு முன்னதாக, அசோஸ்பைரில்லம் (நெல்) மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிர் உரங்களை, தலா 1 பொட்டலம் (200 கிராம்) வீதம் ஒரு ஏக்கருக்குத் தேவையான விதையுடன், கலந்து தேவையான அளவு அரிசிக் கஞ்சியுடன் கலந்து, நிழலில் உலர்த்தி, விதைக்கலாம்.

    ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், கடைசி உழவில் இட்டு, நிலத்தை சமப்படுத்தி, விதைப்பு செய்ய வேண்டும். மண்பரிசோதனை ஆய்வு முடிவின்படி, இரசாயன உரம் இடுவது அவசியம். மண்பரிசோதனை செய்ய இயலாத நிலையில், பொதுப் பரிந்துரையாக ஏக்கர் ஒன்றுக்கு 60 கிலோ தழைச்சத்து, 24 கிலோ மணிச்சத்து, 24 கிலோ சாம்பல் சத்தும் இடலாம். பரிந்துரைக்கப்படும் அளவில் முழு அளவு மணிச்சத்தினையும், பாதியளவு சாம்பல் சத்தினையும் அடியுரமாக இட வேண்டும். நேரடி நெல் விதைப்பில், அடியுரமாக தழைச்சத்து இடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    நேரடி நெல் விதைப்பில், 5 கிலோ நெல் நுண்ணூட்டச் சத்தினை, தேவையான அளவு மணலுடன் கலந்து, விதைத்தவுடன் ஒரு ஏக்கர் பயிரில் மேலாக இட வேண்டும்.

    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், சம்பா பருவத்தில், நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளும் இடங்களில், மேற்கண்ட தொழில் நுட்பங்களைச் செயல்படுத்தி, உயர் விளைச்சல் பெற வேண்டும் என்றார்.

    Next Story
    ×