search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இருந்து சீரடி சாய்பாபா கோவிலுக்கு இன்று தனியார் ரெயில் இயக்கம்
    X

    தனியார் ரெயிலை சோதனை செய்த தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள்

    கோவையில் இருந்து சீரடி சாய்பாபா கோவிலுக்கு இன்று தனியார் ரெயில் இயக்கம்

    • வாரம் ஒரு முறை கோவையில் இருந்து சீரடிக்கு இந்த ரெயில் இயக்கப்படும்
    • வியாழக்கிழமை மாலை சீரடியில் இருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை கோவை வந்தடையும்

    பிரதமர் மோடியின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ள ரெயில் திட்டங்களின் ஒரு பகுதியாக கோவையில் இருந்து சீரடிக்கு இன்று தனியார் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    வாரம் ஒரு முறை செல்லும் இந்த ரெயிலில் டிக்கெட் முதல் பராமரிப்பு பணிகள் வரை தனியார் நிறுவனமே மேற்கொள்கிறது. முன்னதாக போத்தனூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ரெயிலை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்யா, சேலம் கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இந்த ரெயிலில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், உணவு வசதிகள், செல்போன் சார்ஜ் வசதி, படுக்கை, போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

    செவ்வாய்க்கிழமை கோவையில் இருந்து புறப்படும் இந்த ரெயிலை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் டிக்கெட் சரிபார்க்கும் பணியாளர்களை தெற்கு ரயில்வே வழங்கி உள்ளது.

    கால அட்டவணையின்படி, இன்று கோவையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் நாளை புதன்கிழமை மதியம் மந்திராலயத்தையும், மாலையில் சீரடியையும் சென்றடையும். இரவு தங்கிய பின் வியாழக்கிழமை காலை சீரடி சாய்பாபா கோயிலுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    வியாழக்கிழமை மாலையில் சீரடியில் இருந்து புறப்படும் இந்த ரெயில் வெள்ளிக்கிழமை மாலை கோவை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு, மந்த்ராலயம் மற்றும் சீரடி ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×