என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு
- தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
- பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. சுமார் 28 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதி உள்ளனர்.
பிளஸ்-2 தேர்வு முடிவு மே 5-ந்தேதி வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. மே 7-ந் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறுவதால் அதற்கு முன்பு பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடும் என பெற்றோர்கள் கருதி தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்கு பிறகு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 8-ந்தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 8-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வர்கள் இந்த இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






