என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தையை அடித்து கொன்ற மகன்
    X

    தந்தையை அடித்து கொன்ற மகன்

    • சொத்து தகராறில் இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்டார்
    • தலைமறைவான மகனுக்கு, போலீசார் வலைவீச்சு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 45). சினிமா தியேட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்த இவருக்கு மலர்கொடி என்ற மனைவியும், வெங்கடேஷ்(வயது 24) என்ற மகனும் உள்ளனர். ராமகிருஷ்ணன் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால், மனைவி மலர்கொடியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக 6 மாதமாக அவர் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக மகன் வெங்கடேசிடமும் தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக சொத்தை தனது பெயருக்கு மாற்றி தர அவர் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் வெங்கடேஷ் கடந்த 2 மாதத்திற்கு முன்பாக ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர பூலான்குடியில் தனிகுடித்தனம் இருந்து வந்துள்ளார். இருப்பினும் அவ்வப்போது தந்தை பார்ப்பதற்கு அவர் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். வழக்கம் போல நேற்றிரவு அவர் வீட்டிற்கு வந்த போது தந்தைக்கும், மகனுக்கும் இடையே சொத்து குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் குடிபோதையில் இருந்த ராமகிருஷ்ணன் தனது மகனை தகாத வார்த்தையால் திட்டி உள்ளதாக தெரிகிறது. இதனால் தந்தை, மகனிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டிருந்துள்ளனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மகன் வெங்கடேஷ் வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தந்தையை தாக்கி உள்ளார். அக்கம் பக்கத்தினர் இருவரையும் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி வெங்கடேஷை அனுப்பி வைத்துள்ளனர். காயம் அடைந்த வெங்கடேஷ் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து உள்ளார். ஆனால் மகனின் தாக்குதலுக்கு உள்ளான ராமகிருஷ்ணன், குடிபோதையில் இருந்ததால், மருத்துவமனைக்கு செல்லாமல், அப்படியே வீட்டில் படுத்து தூங்கி உள்ளார். ஆனால் விடிந்து வெகு நேரமாகியும் எழுந்திருக்காததால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்து உள்ளனர். அப்போது அவர் இறந்து போனது தெரிய வந்தது. இது குறிதது பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான ராமகிருஷ்ணனின் மகன் வெங்கடேஷ், மனைவி மலர்கொடி ஆகியோரை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×