என் மலர்
உள்ளூர் செய்திகள்

உறவினர்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூடல்
- பெரம்பலூர் அருகே வாலிபர் திடீர் சாவு உறவினர்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூடல்
- மறியல் போராட்டத்தை அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்
பெரம்பலூர்.
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்ட புரம், வேப்பந்தட்டை தாலுகா, தேவையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 37). திருமணம் ஆகாத இவர், மது பழக்கத்திற்கு ஆளாகியிருந்தார்.
இந்நிலையில் வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் வெள்ளையன் மது வாங்கி கொண்டு அங்குள்ள பாரில் உட்கார்ந்து மது குடித்துள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் இருக்கையில் இருந்து மேஜையில் சாய்ந்தார். நீண்ட நேரமாக அவர் அதே இடத்தில் ஆடாமல் அசையாமல் இருந்ததால், பக்கதில் மது அருந்தியவர்கள் அவரிடம் பேச்சு கொடுத்தனர். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இருக்கையிலேயே வெள்ளையன் இறந்து போனது தெரியவந்தது. இைத தொடர்ந்து அதிர்ச்சியடைந்த அவர்கள், பார் மேலாளரிடம் தகவல் தெரிவித்தனர். அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதற்கிடையே வெள்ளையன் இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள், டாஸ்மாக் மற்றும் பாரை அகற்றக்கோரி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்த நேரம் தஞ்சையில் அரசு நிகழ்ச்சியை முடித்து கொண்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை செல்ல காரில் வந்து கொண்டிருந்தார்.
மறியல் போராட்டத்தை அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மறியல் போராட்டம் முடிவுக்க வந்த சில நிமிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த பகுதியை கடந்து சென்றார்.
பின்னர் போலீசார் வெள்ளையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் பாரில் மது அருந்தியவர் இருக்கையிலேயே இறந்த சம்பவம் அங்கிருந்த மது பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






