என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
- வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- கோரிக்கைகளை வலியுறுத்தி
பெரம்பலூர்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரையிலான அலுவலர்கள், சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துகுமார் தலைமையில் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடன் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துணை தாசில்தார் உள்ளிட்ட பதவிகளின் பட்டியல்கள் திருத்தத்தின் காரணமாக பணியிறக்கம் செய்யப்பட்ட அலுவலர்களின் பாதிப்புகளை தவிர்த்து பதவி உயர்வினை உறுதி செய்து உரிய ஆணைகளை வெளியிட வேண்டும்.
அரசு மட்டத்தில் 2 கடிதங்கள் வழங்கப்பட்ட நிலையில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட வருவாய் நிர்வாக ஆணையர் உடன் கடிதம் வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக தாமதம் செய்யப்படும் இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பெயர் மாற்றம் மற்றும் விதித்திருந்த அரசாணையை உடன் வழங்கிட வேண்டும். கடந்த ஆகஸ்டு மாதம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய காலக்கெடுவிற்குள் ஆணைகள் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக்கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.






