என் மலர்
உள்ளூர் செய்திகள்

குட்கா கடத்திய கல்லூரி மாணவர்
- அகரம் சீகூர் அருகே குட்கா கடத்திய கல்லூரி மாணவர் பிடிபட்டார்
- 21 மூட்டை புகையிலை பொருட்கள் வேனுடன் பறிமுதல்
அகரம் சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் அருகாமையில் உள்ள திருமாந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே ஒரு வேனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை மர்ம நபர்கள் கடத்திச் செல்வதாக மங்களமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே உஷாரான போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அந்த வேனில் 21 மூட்டைகளில் 217 கிலோ பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.பின்னர் போலீசார் குட்கா பொருட்களை கைப்பற்றி வேனை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா சேசன் சாவடி மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ( வயது 39), கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரங்கூர் காலனி தெருவை சேர்ந்த சிங்காரவேலு மகன் கார்த்திகேயன் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.இதில் கைதான கார்த்திகேயன் கடலூர் மாவட்டம் குரும்பலூர் அரசு அறிவியல் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது.இந்த மாணவன் பணத்துக்கு ஆசைப்பட்டு குட்கா கடத்தலில் போலீஸ் பிடியில் மாட்டி கொண்டதாக கூறப்படுகிறது.ஆனால் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பன்னீர்செல்வத்துடன் வேனில் வந்ததாக தெரிவித்துள்ளார்.குட்கா கடத்தல் வழக்கில் கல்லூரி மாணவன் பிடிபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






