என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
திண்டுக்கல் அருகே தேவாலயம் பூட்டு உடைக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல்
- தேவாலயத்தில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஒன்றுகூடி வெள்ளோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
- போலீசார் இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
சின்னாளபட்டி:
திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு பகுதியில் புனித தெரசா சந்தியாகப்பர் கோவில் உள்ளது. இங்கு பழைய நிர்வாகக்குழுவினருக்கு போட்டியாக புதிய குழு உருவானது. அவர்கள் நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் இதற்கு பழைய நிர்வாகக்குழு மறுத்தது. இந்தநிலையில் ரூ.40 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் சிலர் புகார் அளித்தனர்.
பழைய நிர்வாகக்குழு மற்றும் புதிய குழுவினருக்கு இடையே பிரச்சிைன ஏற்பட்டதால் கோவிலில் இருதரப்பினர் சார்பாகவும் 2 பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டன. அதன் சாவிகள் வி.ஏ.ஓவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று வெள்ளோடு பகுதியில் ஒருவர் இறந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்த கோவில் நிர்வாகம் சார்பாக சென்றபோது அங்கிருந்த 2 பூட்டுகளுமே உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஒன்றுகூடி வெள்ளோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தனமேரி கீதா மற்றும் அம்பாத்துரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பழைய நிர்வாகக்குழு தங்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என புதிய குழுவினர் தெரிவித்தனர். ஆனால் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் முடிவு எட்டப்படவில்லை. உயர் அதிகாரிகள் முன்னிலையில் மறுபடியும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.






