search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்தபடி வீசிய சூறாவளி காற்று- மழை பெய்யாததால் மக்கள் ஏமாற்றம்
    X

    சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்தபடி வீசிய சூறாவளி காற்று- மழை பெய்யாததால் மக்கள் ஏமாற்றம்

    • அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் விடைபெற்றது.
    • வெயிலினால் காய்ந்து கிடந்த இலை சறுகுகள், சாலை மண்கள் புழுதியை கிளப்பியபடி காற்றுடன் சேர்ந்து பறந்தது.

    சென்னை:

    கோடை காலம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இடையில் அவ்வப்போது பெய்த கோடை மழையால் ஓரளவு வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடிந்தது. அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயிலின் பிற்பாதியில் வெயிலின் கோரத்தாண்டவம் அதிகளவில் இருந்தது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் சதம் அடித்தது.

    இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் விடைபெற்றது. இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் தமிழ்நாட்டில் சில இடங்களில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று சில இடங்களில் வெயில் சுட்டெரிக்கத்தான் செய்தது. அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெயிலின் தாக்கத்தை உணர முடிந்தது.

    ஆனால் அக்னி நட்சத்திரம் காலத்தில் பதிவான வெயிலை விட குறைவாகவே சென்னை நகர் பகுதிகளில் இருந்தது. மீனம்பாக்கம் உள்பட புறநகர் பகுதிகளில் வெயில் இயல்பை விட சற்று அதிகமாகவே பதிவானது.

    நேற்று பிற்பகலில் இருந்து சூரியன் சுட்டெரித்து வந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை 4 மணிக்கு மேல் சீதோஷ்ண நிலை அப்படியே மாறியது. மேகங்களே இல்லாமல், வெறுமையாக இருந்த வானத்தில் திடீரென்று கருமேகங்கள் சூழத் தொடங்கின.

    5 மணி அளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பல இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து இருட்டாக்கியது. மேலும் சூறாவளி காற்றும் பலமாக வீசியது. வெயிலினால் காய்ந்து கிடந்த இலை சறுகுகள், சாலை மண்கள் புழுதியை கிளப்பியபடி காற்றுடன் சேர்ந்து பறந்தது.

    இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமப்பட்டனர். அதிலும் வாகன ஓட்டிகள் பலரை சூறாவளி காற்று தள்ளியதால், சிலர் அச்சத்தில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தியதையும் பார்க்க முடிந்தது. அதிலும் குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையோரத்தில் கடற்கரை மணலுடன் காற்று வீசியது.

    இருள் சூழ்ந்தபடி, கருமேகக்கூட்டங்கள் வந்ததால், மழை வெளுத்து வாங்கும், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து குளிர்ச்சியான நிலை உருவாகும் என்று எதிர்பார்த்திருந்த மக்களை, வெறும் காற்றுடன் வந்த மேகக்கூட்டங்கள் அப்படியே கலைந்து சென்று, மழை பெய்யாமல் மக்களை ஏமாற்றி விட்டது. ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'சென்னைக்கு வடக்கில் உருவாகி, இடி மேகக்கூட்டங்களில் வந்த குளிர்ந்த காற்று சென்னை உள்பட புறநகர் பகுதிகளில் வந்ததால், தரைப்பகுதியில் சூறாவளி போல் காற்று வீசியது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது. இதனால் சென்னை நுங்கம்பாக்கத்தில் மாலையில் 6 டிகிரி வரை வெப்பம் குறைந்திருந்தது. காற்றில் ஈரப்பதம் பெரிய அளவில் இல்லாததால், மழை பெய்யாமல் சென்றுவிட்டது' என்றனர்.

    Next Story
    ×