என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் 2-வது நாளாக கொட்டிய கன மழை
    X

    சேலத்தில் 2-வது நாளாக கொட்டிய கன மழை

    • சேலம் மாநகரில் 1 மணி நேரத்திற்கு மேல் கன மழை கொட்டியது.
    • இனி வரும் நாட்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதில் கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக சேலத்தில் 108 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்ததுடன் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. 2-வது நாளாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. மதியம் வரை வெயில் வாட்டிய நிலையில் பின்னர் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக காடையாம்பட்டி, ஏற்காடு, சேலம் மாநகர் உள்பட பல பகுதிகளில் நேற்று கன மழை கொட்டியது.

    ஏற்காட்டில் 1½ மணி நேரத்திற்கும் மேல் கொட்டிய கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில தண்ணீர் தேங்கியது. ஏற்காட்டில் பெய்த மழையால் இன்றும் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்காட்டில் திடீரென பெய்த கன மழையால் ஏற்காட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சேலம் மாநகரில் நேற்று மதியம் 1 மணி நேரத்திற்கு மேல் கன மழை கொட்டியது. இதனால் கிச்சிப்பாளையம் நாராயண நகர், தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை ஜெயா தியேட்டர், அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி, 4 ரோடு, 5 ரோடு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் , பெரமனூர் உள்பட பல சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் பல பகுதிகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் குடியிருப்பு வாசிகள் தவித்தனர்.

    இதே போல தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக கன மழை கொட்டியது. இந்த மழை விவசாய பயிர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 23 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு 17.4, சேலம் 12.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 64 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கடந்த சில நாட்களாக வெப்பத்தில் தவித்த மக்கள் தற்போது ரம்மியமான சூழல் நிலவுவதால் நிம்மதியாக தூங்கினர். மேலும் இனி வரும் நாட்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×