search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவர்களிடம் மோட்டார் சைக்கிளை கொடுத்து ஓட்ட வைக்கும் பெற்றோர்
    X

    சிறுவர்களிடம் மோட்டார் சைக்கிளை கொடுத்து ஓட்ட வைக்கும் பெற்றோர்

    • வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும்.
    • வாகனத்தை இயக்குவதற்கு அனுமதி வழங்குவது பெற்றோரின் கடமை.

    குனியமுத்தூர்,

    பொதுவாக நம் நாட்டில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு, 18 வயதிற்கு மேல் தான் அனுமதி என்று வட்டார போக்குவரத்து அலுவலகம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    18 வயது பூர்த்தி அடைந்த பிறகு லைசென்ஸ் பெற்ற பின்பு தான் சாலையில் வாகனத்தை ஓட்ட முடியும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தனது இருசக்கர வாகனத்தை 18 வயதுக்கு கீழ் உள்ள தனது மகள் மற்றும் மகனிடம் கொடுத்து ஓட்ட வைத்து அழகு பார்க்கின்றனர்.

    இதற்கு பல்வேறு சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    சாதாரணமாக சிறுவர்களிடம் வண்டியை கொடுத்து ஓட்ட வைத்து அழகு பார்க்கும் பெற்றோர், என் பிள்ளை எப்படி வண்டி ஓட்டுறான் பாரு? என பெருமைப்பட பேசுவார்கள். ஆனால் அதுவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு ஒரு வாய்ப்பு. முதலில் தெருக்களில் வண்டியை ஓட்டும் சிறுவன், பெற்றோர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு மெயின் ரோட்டுக்கு செல்வான்.

    அப்படி வரும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த விபத்தால் பாதிக்கப்படுவது சிறுவன் மட்டுமல்ல. எதிர்வரும் வாகனத்தையும் பாதிக்கும்.

    எனவே இதனை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தை ஓட்டும் சிறுவர்களை பிடித்து, அவர்களது பெற்றோரை அழைத்து அபராதம் விதிக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.பெற்றோர்கள் விழிப்புணர்வுடன், பொறுப்பு உணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    அந்தந்த பருவம் வரும்போது அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து வாகனத்தை இயக்குவதற்கு அனுமதி வழங்குவது பெற்றோரின் கடமை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×