search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம் பகுதி சிவாலயங்களில் பங்குனி உத்திர பெருவிழா நாளை தொடக்கம்
    X

    கும்பகோணம் பகுதி சிவாலயங்களில் பங்குனி உத்திர பெருவிழா நாளை தொடக்கம்

    • கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில் காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற உள்ளது.
    • கொட்டையூரிலுள்ள காவிரி கரையில் தீர்த்தவாரி விழா காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

    பட்டீஸ்வரம்:

    கும்பகோணம் பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களான குடந்தை கீழ்கோட்டம் அருள்மிகு ஸ்ரீபிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரர் (நாக தோஷப் பரிகாரத் தலம்), ஸ்ரீஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் ஸ்ரீபந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரர் ஆகிய மூன்று திருக்கோயில்களில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இம்மூன்று சிவாலயங்களில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பெருவிழா இன்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர, வாஸ்து, மிருத்சங்கிரஹணம் ஆகிய பூஜைகளுடன் தொடங்குகிறது

    தொடர்ந்து நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஆலயங்களில் நாளை காலை பத்து மணிக்கு மேல் கொடியேற்றமும், கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில் காலை 9-மணிக்கு மேல் கொடியேற்றமும் நடைபெற உள்ளது.

    தொடர்ந்து இவ்வால யங்களில் தினசரி மங்கல இன்னிசை முழங்க சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காலை பல்லக்கிலும் மாலை வேளைகளில் சந்திர பிரபை, சூரியபிரபை, பூதம், கிளி, அதிகார நந்தி, காமதேனு, யானை, சிம்மம், யாளி, கைலாசம், குதிரை, ரிசபம் போன்ற வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள வீதி உலா திருகாட்சியும் நடைபெறும்.

    மேலும் இவ்விழாவின் ஐந்தாம் திருநாளன்று வண்ண மின் விளக்குகள் ஒளிர ஓலைச் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் ரிசப வாகனத்தில் எழுந்தருள வீதியுலாவும், ஏழாம் திருநாளன்று மாலை திருக்கல்யாண உத்ஸவமும், ஒன்பதாம் திருநாளான்று காலை திருத்தேரோட்டமும், பத்தாம் திருநாளான்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் பங்குனி உத்திர தீர்த்தவாரி விழா ஏப்ரல்.4 காலை 11 மணிக்கும், கொட்டையூர் கோடீஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தவாரி விழாவானது கொட்டையூரிலுள்ள காவிரிக் கரையில் காலை 9-30 மணிக்கு மேலும் நடைபெறவுள்ளது.

    இவ்விழாக்களின் சிறப்பு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை சுவாமிமலை துணை ஆணையர் உமாதேவி, மற்றும் கண்காணிப்பாளர் சுதா, ஆய்வாளர் வெங்கடசுப்ரமணியன் மற்றும் திருக்கோவில்களின் செயல் அலுவலர்கள் கணேஷ்குமார், சிவசங்கரி மற்றும் அந்தந்த திருக்கோ யில்களின் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×