என் மலர்
உள்ளூர் செய்திகள்
வாராந்திர குறைதீர்க்கும் நாள் முகாமில் 15 பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணைகள்- கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்
- முகாமில் புதிய கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
- கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலுக்கு 50 அடி தூரத்திற்கு முன்னதாக பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்ட வாராந்திர பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
புதிய கலெக்டர்
இதில் முதல்முறையாக புதிய கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
அப்போது மாற்று திறனா ளிகள் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் தொடர்பான மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் மாற்றுதிறனாளிகள் இருந்த இடத்திற்கே சென்று அவர்களிடம் மனுக்களை பெற்றார்.
உதவித்தொகை ஆணை
முகாமில் 15 பயனாளி களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி வள்ளிக்கண்ணு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமாரதாஸ், உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தீவிர சோதனை
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சிலர் மண்எண்ணை, பெட்ரோல், விஷப்பாட்டிலுடன் வந்து தற்கொலையில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வந்தது.
இதனை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவுப்படி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு 50 அடி தூரத்திற்கு முன்னதாக பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.இன்று அப்பகுதியில் போலீசார் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு பின்ன ரே பொது மக்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்.
புகார் மனு
முகாமில் பாளை யூனியன் நொச்சிகுளம் பஞ்சாயத்து துணைத் தலைவர் கண்ணன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் குமார், பேச்சி உள்ளிட்டவர்கள் கொடுத்த மனுவில், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் எங்களுடைய ஆலோசனை இல்லாமல் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி நடைமுறைபடுத்தி உள்ளார்.
9-வது வார்டில் கடந்த 35 ஆண்டுகளாக குடிநீர், சாலை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. பஞ்சாயத்து நிதியில் நடந்த முறைகேடுகள் குறித்து தனி அலுவலரை நியமித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என கூறி இருந்தனர்.
டாஸ்மாக்
சமத்துவ மக்கள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் செல்வம், இளஞ்செழியன் உள்ளிட்டவர்கள் கொடுத்த மனுவில், அழகிய பாண்டியபுரம்- உக்கிரன் கோட்டை சாலையில் பாருடன் கூடிய டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த சாலை வழியாக பள்ளி மாணவ- மாணவிகள், அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள், விவசாயிகள் சென்று வருகிறார்கள். எனவே அவர்கள் நலன் கருதி அந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.








