என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜாட் படம் வெளியிடுவதற்கு எதிர்ப்பு: தியேட்டருக்குள் புகுந்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
- 20-க்கும் மேற்பட்டோர் வணிக வளாகம் முன்பு கையில் பதாகைகளுடன் திரண்டனர்.
- போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
கோவை:
தெலுங்கு பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 10-ந் தேதி ஜாட் என்ற இந்தி திரைப்படம் வெளியாகியது.
இந்த திரைப்படத்தில், இலங்கை தமிழர் விடுதலை போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் ஜாட் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்றும், அதனை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார். இல்லையென்றால் அந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்கள் முன்பு நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் அறிவித்தார்.
கோவை-சத்தி சாலையில் பிரபலமான மால் ஒன்று உள்ளது. இந்த மாலில் உள்ள ஒரு தியேட்டரில் ஜாட் திரைப்படம் வெளியாகி இருந்தது.
இதனை கேள்விப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் 20-க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு அந்த வணிக வளாகம் முன்பு கையில் பதாகைகளுடன் திரண்டனர். அவர்கள் ஜாட் திரைப்படத்தை திரையிடக்கூடாது என கூறி கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து கோஷங்களை எழுப்பியபடி அவர்கள் தியேட்டருக்குள் நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆனால் அவர்கள் உள்ளே நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






