என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் கோண்டூர் பகுதியில் பாரதீய ஜனதா கட்சியினர் கொடி கம்பம் வைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.
கொடிக்கம்பம் அமைக்க எதிர்ப்பு: பா.ஜனதா- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்-சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
- தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- பாரதீய ஜனதா கட்சியினர் தங்கள் நட்டு வைத்த கொடி கம்பத்தை அவர்களே அப்புறப்படுத்தினர்.
கடலூர்:
கடலூர் அருகே கோண்டூரில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை யொட்டி பாரதீய ஜனதா கட்சி சார்பாக புதிய கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்று விழா நடைபெற்றது. இதற்காக மாநகர தலைவர் வேலு வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகள் ஒன்று திரண்டனர். அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் மாநில நிர்வாகி சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் பெருமளவு ஒன்று கூடி இந்த பகுதியில் கொடி கம்பம் வைக்க கூடாது கொடிக்கம்பம் வைப்பதற்காக அனுமதி பெற்று வைத்துள்ளீர்களா என்று பா.ஜ.கவினரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் இருதரப்பினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த வாய் தகராறு முற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையின் போது பா.ஜ.க.வினர் உரிய முறையில் அனுமதி பெறாமல் கொடி கம்பத்தை வைத்தனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர். அதற்கு பா.ஜ.க.வினர் இன்று பிரதமர் மோடி பிறந்தநாள் என்பதால் கொடிக்கம்பம் வைத்ததாக கூறினர். இருதரப்பு பேச்சு வார்த்தையின் முடிவில் போலீசார் கொடிக்கம்பம் நடுவதற்கு உரிய முறையில் அனுமதி பெற்று வைக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்ததை அடுத்து பாரதீய ஜனதா கட்சியினர் தங்கள் நட்டு வைத்த கொடி கம்பத்தை அவர்களே அப்புறப்படுத்தினர். இதனால் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






