search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு; திரளான பக்தர்கள் தரிசனம்
    X

    சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பிரசன்ன வெங்கடேச பெருமாள். (திரளான பக்தர்கள் வழிபாடு)

    பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு; திரளான பக்தர்கள் தரிசனம்

    • சாமி– அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது.
    • சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கடந்தார்.

    தஞ்சாவூர்:

    மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11-வது நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடப்படுகிறது.

    வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாக கருதும் வைகுண்டத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா இன்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு தஞ்சையில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று அதிகாலை நடந்தது.

    அதன்படி தஞ்சை நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

    இதையொட்டி சுவாமி–அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கடந்தார். பின்னர் பெருமாளுக்கு தீபாரா தனையும் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து பக்தர்களும் சொர்க்க வாசலை கடந்து வந்தனர்.இதில் கவுன்சிலர் மேத்தா, முன்னாள் கவுன்சிலர் சாமிநாதன், பிரதிநிதிகள் சிங்காரவேலன், பலராமன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதேபோல தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலை விசேஷ திருமஞ்சன சேவையும், தீபாராதனையும் நடைபெற்றது. அதை த்தொடர்ந்து பெருமாள் சொர்க்கவாசலை கடந்து வசந்த மண்டபத்தை அடைந்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல வெண்ணாற்றங்கரையில் உள்ள மாமணிக்கோவில், தெற்குவீதியில் உள்ள கலியுக வெங்கடேசபெருமாள் கோவில், கீழவீதியில் உள்ள வரதராஜபெருமாள் கோவில் உள்பட தஞ்சையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×