search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்களை மறுகுடியமர்த்துவதில் தொடரும் சிக்கல்
    X

    பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்களை மறுகுடியமர்த்துவதில் தொடரும் சிக்கல்

    • சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினர்.

    சென்னை:

    சென்னையில் பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக பக்கிங்காம் கால்வாயில் நீர்வழிப்பாதையில் கரையோரம் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான முதல்கட்ட திட்ட அறிக்கையை நீர்வளத் துறையினர் தயாரித்து உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக சிவானந்தா சாலை-டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை இடையே 2.9 கி.மீட்டர் தூரத்திற்கு பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க முடிவு செய்து ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    இதேபோல் நீர்வளத் துறையின் 2023-24 ம் ஆண்டின் கொள்கை குறிப்பின்படி பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதனுடன் தொடர்புடைய கால்வாய், அடையாறு கூவம் ஆறுகளில் பாயும் வடிகால் வாய்களில் சீரமைப்பு மற்றும் விரிவான மறுசீரமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதற்கு ரூ.1,281 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் நீர்வழிப்பாதையை தூர் வாரி சீரமைத்தல், படகு போக்குவரத்து மையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற இருக்கின்றன.

    இதற்கிடையே பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிக்கும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் கால்வாய் கரையோரத்தை சீரமைக்கும் பணி தொடங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

    மேலும் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் காலி செய்யும் போது அவர்களுக்கு அதே பகுதியில் மாற்று இடம் கொடுத்து குடியமர்த்த வேண்டும் அல்லது ஏற்கனவே வசித்த இடத்தில் இருந்து 5 கி.மீட்டர் தூரத்திற்குள் குடிய மர்த்த வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    ஆனால் கால்வாய் கரையோரம் வசிப்பவர்களை அப்புறப்படுத்தும் போது அவர்களுக்கு மாற்று இடம் அருகில் ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இதன் காரணமாக பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் அப்புறப்படுத்துவது தொடர்பாக என்ன மாதிரியான முடிவு எடுப்பது என்று அதிகாரிகள் தவித்து வருகிறார்கள்.

    பக்கிங்காம் கால்வாய் கரையோரம் உள்ள முக்கிய இடங்களான விக்டோரியா ஹாஸ்டல், சிவராஜபுரம், சுங்குவார் தெரு, மட்டன் குப்பம், ரோட்டரி நகர், நீலம்பாஷா தர்கா உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்த இடமாற்றம் அவர்களை கவலை அடையச் செய்து உள்ளது. இதுவரை எத்தனை குடும்பங்கள் இதில் பாதிக்கப்பட உள்ளது என்று உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

    கடந்த 2020-ம் ஆண்டு அரசின் அறிவிப்பின்படி 15 ஆயிரம் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. கடந்த 2020-21- ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கொள்கை குறிப்பில் இந்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 564 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் பற்றி பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினர். ஆனால் இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பயோமெட்ரிக் கணக்கெடுப்புக்கு தகவல்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து இந்த கணக்கெடுப்பும் இப்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது "மறு குடியமர்த்தலுக்கு ஒதுக்கப்பட்ட இடம் எங்கே? என்று அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை. நாங்கள் தற்போது வசிக்கும் இடம் அருகே அல்லது 5 கி. மீட்டர் தூரதிற்குள் குடியமர்த்த வேண்டும். அப்படியானால்தான் எங்களது வாழ்வாதாரம் பாதிக்காது" என்றனர்.

    லாக் நகரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறும் போது, "எனது குடும்பம் பல தலைமுறைகளாக இங்கு வசிக்கிறது. எனக்கும் எனது மனைவிக்கும் வாழ் வாதாரம் இந்த பகுதியை சுற்றியே உள்ளது. குழந்தைகள் அருகில் உள்ள பள்ளியில் படிக்கிறார்கள். நாங்கள் எப்படி நீண்ட தூரத்திற்கு செல்ல முடியும். மேலும் மறு குடியமர்த்துதல் தொடர்பாக அதிகாரிகள் இதுவரை எந்த தெளிவான முடிவும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை" என்றனர். சிவராஜபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கூறும் போது, "பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க அருகிலேயே அரசுக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. ஆனால் அது வேறு துறைக்கு சொந்தமானது என்று கூறுகிறார்கள். மறுகுடியமர்த்தும் இடங்கள் எர்ணாவூர் மற்றும் கார்கில் நகர் என்று தெரிகிறது. அங்கு நாங்கள் செல்ல நிர்பந்திக்கப்படலாம் என்பதால் பயப்படுகிறோம்" என்றார்.

    அப்பகுதியை சேர்ந்த மற்றொருவர் கூறும்போது, "மறுகுடியமர்த்தலுக்கு தேவையான இடத்தை முடிவு செய்ய குடும்பங்களின் எண்ணிக்கை மட்டும் போதுமானது. ஆனால் பயோமெட்ரிக் பதிவு மற்றும் படிவங்களில் கையெழுத்திட ஏன் வற்புறுத்த வேண்டும் மறுகுடியமர்த்தலுக்கான இடங்கள் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்காத நிலையில் இது சந்தேகத்தை எழுப்பி உள்ளது" என்றார்.

    இதற்கிடையே பக்கிங்காம் கால்வாய் கரை யோரத்தில் வசிப்பவர்கள் காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக சென்னை மத்திய மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் செல்வம் கூறும்போது, "பரம்பரை, பரம்பரையாக பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் இடமாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? இது அவர்களுக்கான இடம் கிடையாதா?"

    கால்வாய் அருகில் வசிக்கும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களிடம் பயோமெட்ரிக் தகவல்களை அதிகாரிகள் சேகரிக்க தொடங்கி உள்ளனர். பொது மக்களும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் லாக் நகர் பகுதியில் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர். காலம், காலமாக வாழும் மக்களின் வாழ்விட உரிமையை பறிக்கக் கூடாது. அவர்களை மாற்று இடத்தில் நீண்ட தூரத்தில் குடியமர்த்தும் போது வாழ்வாதாரம் பாதிக்கும்" என்றார்.

    Next Story
    ×