search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்போர் நலசங்கங்களுடன் இணைந்து சென்னை மாநகராட்சி புதுநடவடிக்கை!
    X

    குடியிருப்போர் நலசங்கங்களுடன் இணைந்து சென்னை மாநகராட்சி புதுநடவடிக்கை!

    • புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பூங்காக்களில் மரக்கன்றுகள் நடப்படுகிறது.
    • அடுத்த மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம்.

    சென்னை:

    சென்னை நகரை தூய்மையாக மாற்ற வேண்டும் என்பதற்காக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சுற்றுச்சூழலை மேம்படுத்த மரக்கன்றுகளை ஆண்டுதோறும் நட்டு வருகிறது. கடந்த 2 வருடத்தில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 967 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

    நடப்பு ஆண்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அந்த பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர்.

    சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பூங்காக்களில் மரக்கன்றுகள் நடப்படுகிறது. அதுபோல பொது இடங்கள், சாலையோர, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் உள்ள காலி இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. அந்த இடங்களில் நாட்டு மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

    குடியிருப்பாளர் நலச்சங்கங்கள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாவலர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடப்படுகின்றன. எந்தெந்த இடங்களில் வைக்க வேண்டும் என்று தன்னார் வலர்கள், பொதுமக்கள் விரும்புகிறார்களோ அந்த இடம் சரியானதாக இருக்குமா? என்பதை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    குடியிருப்போர் நலசங்கங்கள், பொதுமக்கள் மாநகராட்சியிடம் மரக்கன்று நடுவதற்கு அணுகலாம். எந்த பகுதியில் வைக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் மரக்கன்று நடப்படும்.

    இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள் அந்தந்த வார்டு அலுவலகம், பூங்கா ஊழியர்களை அணுகலாம். இதுவரையில் இதுபோன்று 74 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அடுத்த மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

    அதற்காக சென்னையில் மரக்கன்றுகளை நடுவதற்கு இடங்களை தெரிவு செய்து வருகிறோம். மரக்கன்றுகள் வனத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் வாங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×