என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று காலை பச்சை சாத்தி கோலத்தில் காட்சியளித்த நடராஜர்: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் நாளை ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம்

    • விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
    • இன்று மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் திருவீதி உலா வருதலும் நடக்கிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும்.

    ஆனி பெருந்திருவிழா

    அதில் முக்கியமாக ஆனி மாதத்தில் நடைபெறும் தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு ஆனி பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் சுவாமி-அம்பாள் ரதவீதிகளில் வெள்ளி வாகனத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 7-ம் திருநாளான நேற்று காந்திமதி அம்பாள் தவழ்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    8-ம் நாள் திருவிழாவான இன்று காலை சுவாமி நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி உள்பிரகாரம் வருதல் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 8 மணிக்கு சுவாமி நடராஜர் பச்சை சாத்தி கோலத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இன்று மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் திருவீதி உலா வருதலும் நடக்கிறது. இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம், வீதி உலா, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்தலும் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து இரவு நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணி முதல் 10.30 மணிக்குள் நாட்டிய நாடகம் நடக்கிறது.

    ஆனித்திருவிழாவின் முக்கிய சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிகாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள்ளாக சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளல் நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்ளாக பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    தேரோட்டத்தை யொட்டி சுவாமி, அம்பாள், விநாயகர், சண்டிகேஸ்வரர், சுப்பிரமணியர் உள்ளிட்ட 5 தேர்களையும் தயார்படுத்தும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. ரதவீதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த தேர்கள் கழுவி சுத்தப்படுத்தப்பட்டு தொடர்ந்து சாரம் கட்டும் பணிகள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தேரில் பிரம்மா குதிரைகளை செலுத்துவது போன்ற பொம்மைகள் பொருத்தப்பட்டது.

    தேர் சட்டங்கள் அமைத்து அலங்கார பதாகைகள் அமைக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் பிடித்து இழுக்க தேரில் 2 வடங்கள் கட்டப்பட்டது. துவார பாலகர்கள் தேரின் 4 பகுதிகளிலும் யாழிகள் அமைக்கும் பணியும் முடிவ டைந்தது. தேரோட்டத்தின்போது மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அத்தியா வசிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரதவீதிகள் முற்றிலுமாக மாநகராட்சி தூய்மை பணி யாளர்களால் தூய்மைப் படுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×