search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோடு நகராட்சி பகுதியில்  மழைநீர் வடிகால் அமைக்க ஆலோசனை கூட்டம்
    X

    திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க ஆலோசனை கூட்டம்

    • கடந்த 40 வருடங்களாக தொடரும் இருந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பழனியாண்டவர் கோவில் தோட்டத்திலிருந்து கூட்டப்பள்ளி வரை மழைநீர் வடிகால் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடந்து வந்தது.
    • சட்டையம் புதூர், சூரியம்பாளையம் பகுதி பொதுமக்கள் சுமார் 200 பேர் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியின் பழனி ஆண்டவர் கோவில் தோட்டம், சீதாராம் பாளையம், சக்திவேல் நகர், தொண்டிக்கரடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் சாக்கடைகளில் தேங்கி நிற்கிறது.

    மழைநீர் வடிகால்

    கடந்த 40 வருடங்களாக தொடரும் இருந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பழனியாண்டவர் கோவில் தோட்டத்திலிருந்து கூட்டப்பள்ளி வரை மழைநீர் வடிகால் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடந்து வந்தது.

    இந்த நிலையில் அந்த தண்ணீர் சூரியம்பாளையம் ஏரியில் கலக்காமலும், 17-வது மற்றும் 18-வது வார்டு பகுதிகளான சூரியம்பாளையம், சட்டையம்புதூர் பகுதிகளில் நிலத்தடி நீரை மாசுபடுத்தாமல் கொண்டு செல்லப்படுகிறதா? என்ற அச்சம் அப்பகுதி மக்களுக்கு இருந்தது.

    மனு

    இதனால் அந்த கால்வாய் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபுவிடம் சட்டையம் புதூர், சூரியம்பாளையம் பகுதி பொதுமக்கள் சுமார் 200 பேர் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

    இதேபோல் தங்களது பகுதியில் தண்ணீர் தேங்காமலும் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமலும் மழை நீர் வடிகால் அமைத்துத் தர கோரி 1, 7, 8, 9 மற்றும் 10-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுவை நகர் மன்ற அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

    ஆலோசனை கூட்டம்

    இதையடுத்து பல ஆண்டுகளாக தீராமல் இருந்துவரும் இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் பொதுமக்கள் சார்பிலும் அதிகாரிகள் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எந்த வழியாக தண்ணீரைக் கொண்டு செல்வது, மழைநீர் ஏரியில் தேங்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து விரைவில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தெரிவித்தார்.

    இதை ஏற்ற பொதுமக்கள் நகர் மன்ற தலைவரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    முன்னதாக பணிகள் நடக்கும் இடத்தை நகராட்சி பொறியாளர் சரவணன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், ரவிக்குமார், ராஜவேல் தினேஷ்குமார், அண்ணாமலை, சிநேகாஹரிகரன், அடுப்பு ரமேஷ் உள்ளிட்ட பலரும் ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×