என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த நாகூர் ஆரியநாட்டுத்தெரு கீழபட்டினச்சேரி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் முத்துராஜா (வயது31). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து (42), முத்துவீரன், முத்துக்குமார், கலையரசன், சவுந்தரராஜன் ஆகிய 6 பேரும் நேற்று அதிகாலை நாகூர் வெட்டாற்றில் இருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர்.
மீன்பிடித்து விட்டு நேற்று மாலை கரை திரும்பியுள்ளனர். அப்போது கரையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் மீனவர்கள் வந்து கொண்டிருந்தபோது, காற்று வேகமாக வீசியதாலும், கடல் சீற்றமாக இருந்ததாலும் அவர்களது படகு கடலில் கவிழ்ந்தது.
அப்போது அந்த பகுதியில் கரையில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் படகு கவிழ்ந்ததை கண்டவுடன் உடனே மற்றொரு படகில் விரைந்து சென்றனர். பின்னர் கடலில் தத்தளித்து கொண்டிருந்த 6 மீனவர்களையும் மீட்டு படகில் ஏற்றிக்கொண்டு கரை திரும்பினர். பின்னர் கரையில் வந்து பார்த்தபோது வீரமுத்து இறந்திருந்தது தெரியவந்தது. மற்ற 5 மீனவர்களும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
உயிரிழந்த வீரமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நாகை கடலோர காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கீழையூர் வெள்ளக் கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55). விவசாயி.
இவருக்கு சீர்காழி தாலுகா எருமல் கிராமத்தில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் பம்பு செட் பாசனத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். நிலத்தடி நீர் குறைந்ததால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நெற்பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் கடன் தொல்லையும் சேர்ந்து கொண்டது. தனியார் வங்கியில் வாங்கிய கடனுக்கு நோட்டீஸ் வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வயலை பார்க்க சென்றார். அருகில் உள்ள வயல்களில் எல்லாம் அறுவடை நடைபெற்ற நேரத்தில் தனது வயலில் மட்டும் நெற்பயிர்கள் வளர்ச்சி அடையாமல் பாதிக்கப்பட்ட வேதனையில் வயலில் சுருண்டு விழுந்து இறந்தார். கிருஷ்ண மூர்த்திக்கு சாந்தி என்ற மனைவியும், சுரேஷ், ராஜேஷ் என்ற மகன்களும் ராஜலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
சீர்காழி அருகே உள்ள பச்சை பெருமாநல்லூரை சேர்ந்தவர் ரவி (52). விவசாயி. இவர் சம்பா சாகுபடி செய்திருந்தார்.
ஆனால் மழை இல்லாததாலும், மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறந்து விடப்படாததாலும் பயிர்கள் கருக தொடங்கியது. நேற்று ரவி தனது வயலில் அறுவடை செய்தார். அப்போது கூலிக்கு கூட நெல் விளைச்சல் இல்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள தில்லையாடி ஊராட்சியில் கிளார்க்காக வேலை பார்த்து வருபவர் ராமமூர்த்தி (37). இவர் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து அவரது மதிப்பெண் சான்றிதழை நாகை கலெக்டர் பழனிச்சாமியிடம் சமர்பிக்க உத்தரவிடப்பட்டது.
ராமமூர்த்தி 10-ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. எனவே தனக்கு பதவி உயர்வு கிடைக்காது என்ற சந்தேகத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஒரு சில பாடங்களில் கூடுதல் மதிப்பெண் அளித்து போலியாக சான்றிதழ் தயாரித்து கலெக்டரிடம் சமர்பித்துள்ளார்.
ஆனால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இதனை ஆய்வு செய்த போது போலி சான்றிதழ் தயார் செய்தது தெரிய வந்தது.அவரிடம் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி வட்டார ஊராட்சி அலுவலர் மனோகரன் பொறையாறு போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் முருகவேல் பஞ்சாயத்து கிளார்க் ராமமூர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூர் ஆடியப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலித் தொழிலாளி. கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன்கள் ராகவன் (7), ராகுல் (5).
இவர்கள் 2 பேரும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி சாலையில் உள்ள தனியார் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். ராகவன் 2-ம் வகுப்பும், ராகுல் 1-ம் வகுப்பும் படித்தனர்.
இன்று காலை அவர்கள் வழக்கம் போல் வேனில் பள்ளிக்கு வந்தனர்.காந்திஜி சாலையில் வேனில் இருந்து இறங்கி ரோடு ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு வேன் மாணவர்கள் ராகவன், ராகுல் மீது மோதியது. இதில் ராகவன் சம்பவ இடத்திலே பலியானான். ராகுல் கை முறிந்தது.
அவன் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான மாணவன் ராகவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து ஏற்படுத்திய வேனை ஓட்டி வந்தவர் எஸ்.எஸ். நல்லூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த டிரைவர் பிரபு தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.பள்ளி சென்ற மாணவன் விபத்தில் பலியான சம்பவம் மயிலாடுதுறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வேளாங்கண்ணி வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
சட்டப் பேரவை கூட்டத்தில் விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம், புயல் நிவாரணம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாதது விவசாயிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜல்லிக்கட்டு பிரச்சினையை தமிழக அரசு சுமூகமாக தீர்க்கவில்லை. போலீஸ் நிலையத்தை எரித்தது உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் அல்ல. சமூக விரோதிகள் சிலர் தான் ஊடுருவி இந்த செயல்களை செய்துள்ளனர்.
அவர்களை கண்டறிந்தது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து கட்சி கூட்ட வேண்டும்.
அதில் கடந்த ஒருவார காலமாக நிலவிய சூழல், பிரச்சினைக்கு காரணம், விவசாயிகள் பிரச்சினை, தமிழக பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து எதிர் கட்சிகளிடம் விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே உள்ள கீழையூர் வைரவன் காட்டை சேர்ந்தவர் வேதையன் மனைவி ஆனந்தவல்லி (வயது 46). இவர் காமேஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வயலில் வேலை பார்த்த போது அவரை ஒரு பாம்பு கடித்தது. அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக கீழையூர் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர்:
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில் பாசனத்துக்கு காவிரி நீர் கிடைக்காததாலும், பருவ மழை பொய்த்து போனதாலும் பயிர்கள் கருகி வந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
தஞ்சையில் நேற்று பகலில் விட்டு விட்டு மழை பெய்தது. இரவும் இந்த மழை நீடித்தது. கும்பகோணம், பாபநாசம், பூதலூர், திருவிடைமருதூர் ஆகிய இடங்களிலும் நேற்று மழை பெய்தது. இன்று மேக மூட்டமாக உள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. திருவாரூர், திருத்துறைப் பூண்டி, கொடராச்சேரி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.
நன்னிலம் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது.
மழை ஒரு பக்கத்தில் மகிழ்ச்சியை தந்த போதும் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் இயற்கை இடர்பாடோடு கிடைத்த சொற்ப நீரைக்கொண்டும் நிலத்தடி நீரைக்கொண்டும் விவசாய பணியை மேற்கொண்டு கதிர் வரும் நிலையில் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் கனமழை பெய்வது நெற்கதிர்களை பதராக்கிவிடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சீர்காழியில் காலை முதல் மதியம் வரை பலத்த மழை பெய்தது. வேதாரண்யத்தில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. வேதாரண்யத்தில் 51.6 மில்லி மீட்டர் மழையும், தலைஞாயிறில் 39 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
இந்த மழை சீர்காழி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் சாய்ந்துவிட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உரிய காலத்தில் மழை பெய்யாமல் அறுவடை காலத்தில் மழை பெய்கிறதே என்று விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த மழை தொடர்ந்தால் பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை உருவாகலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது. கோடியக்கரை, ஆதனூர், கருப்பம்புலம், புரவகுலம், கத்திரிபுலம், வாய்மேடு, தகட்டூர், செம்போடை, வெள்ளப்பள்ளம், தலைஞாயிறு ஆகிய இடங்களிலும் மழை பெய்தது.
இந்த மழை வேர் கடலை மற்றும் பூஞ்செடிகள் சாகுபடிக்கு உகந்தது என்று விவசாயிகள் தெரிவித்தனர். இந்த மழை காரணமாக வேதாரண்யத்தில் உப்பள பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் 33 மில்லி மீட்டர் மழையும், தலை ஞாயிறில் 54.8 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்பட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தி.மு.க.சார்பில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகையில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தஞ்சையில் இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து திருச்சி சென்ற பயணிகள் ரெயிலை மறித்தனர்.
மறியல் போராட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், முன்னாள் அமைச்சர் கள் எல். கணேசன்,உபயத்துல்லா, எம்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.முன்னாள் மாவட்ட அமைப்பாளர் செல்வம், நகர செயலாளர் டி.கே.ஜி நீலமேகம், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் அஞ்சுகம் பூபதி காரல் மார்க்ஸ், சண்.ராமநாதன், மேலவெளி ஊராட்சி முன்னாள் தலைவர் முரளிதரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் இன்று காலை 8.05 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து திருச்சி சென்ற ரெயிலை மறித்தனர்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கோவி. செழியன், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், கணேசன், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூரில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் மன்னார்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை மறித்தனர். இதில நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீடாமங்கலத்தில் தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் திருச்சி-காரைக்கால் பயணிகள் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள்.
நாகையில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சீர்காழியில் வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறியத்தனர். அவர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழையூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூண்டி கடைத்தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேதையன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் தொகுதி செயலாளர் பால்ராஜ், மாவட்ட இணை செயலாளர் மீனா, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி கழக செயலாளர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார்.
இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சராக இருந்து மக்களாட்சியை கொண்டு வந்த எம்.ஜி.ஆர். இலங்கையில் பிறந்தவர் ஆவார். அவரது தந்தை இறந்த பிறகு மிகவும் வறுமையில் வாடிய எம்.ஜி.ஆரின் குடும்பத்தினர் தமிழகம் வந்தனர். பின்னர் நாடக துறையில் நுழைந்து தனது திறமையால் சினிமாவிற்கு வந்தார். பின்னர் மக்களின் செல்வாக்கினால் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சர் ஆனார்.
எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது பள்ளி குழந்தைகளுக்கு மதிய சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார். முதன் முதலாக தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். பின்னர் 5-வது உலக தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்தினார். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது ஏழை- எளிய மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தினார். மக்களுக்காகவே கட்சி நடத்துவது அ.தி.மு.க.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் குணசேகரன், ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் சுல்தான்ஆரிபு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வரதன், வேளாங்கண்ணி பேரூர் கழக செயலாளர் கிங்ஸ்லிஜெரால்டு, வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ரவிச்சந்திரன், ஜெயலலிதா பேரவையை சேர்ந்த ராஜ ராஜசோழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பிரதிநிதி இப்ராகிம் நன்றி கூறினார்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் (44). பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
இவரது மனைவி மணிமேகலை. இவர் பாரதீய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என்று தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறி வந்த நிலையில் கடைசி நேரத்தில் பிரச்சினை நீதி மன்றத்தில் இருப்பதால் எதுவும் செய்வதற்கில்லை என்று கை கழுவியதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் பாரதீய ஜனதா கட்சியிலிருந்து விலகி கொள்ளிடம் மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் ரவிக்குமார் தலைமையில் தி.முக.வில் சேர்ந்தனர். அவர்களுக்கு உடனடியாக தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
பக்தவச்சலம் கடந்த 30 ஆண்டுகளாக இந்து முன்னணி மற்றும் பாரதீய ஜனதாவில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே காளகஸ்திநாதபுரத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பிரபாகரன் (வயது 23). இவரும் அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவரும் நண்பர்கள்.
இருவரும் காணும்பொங்கலை முன்னிட்டு நேற்று தரங்கம்பாடி கடலில் குளிக்க சென்றனர். அப்போது பிரபாகரனை திடீரென அலை இழுத்து சென்றது. இதை பார்த்த பழனி அவரை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்று தரங்கம்பாடி கடற்கரையில் அடிக்க உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. இது வரை அலை இழுத்து சென்று 15-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். எனவே இனி இதுபோன்ற உயிர் இழப்புகள் ஏற்படாமல் இருக்க போலீசார் எச்சரிக்கை பலகை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.






