என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை
    X

    டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை

    டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் சாய்ந்துவிட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில் பாசனத்துக்கு காவிரி நீர் கிடைக்காததாலும், பருவ மழை பொய்த்து போனதாலும் பயிர்கள் கருகி வந்தன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    தஞ்சையில் நேற்று பகலில் விட்டு விட்டு மழை பெய்தது. இரவும் இந்த மழை நீடித்தது. கும்பகோணம், பாபநாசம், பூதலூர், திருவிடைமருதூர் ஆகிய இடங்களிலும் நேற்று மழை பெய்தது. இன்று மேக மூட்டமாக உள்ளது.

    திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. திருவாரூர், திருத்துறைப் பூண்டி, கொடராச்சேரி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.

    நன்னிலம் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது.

    மழை ஒரு பக்கத்தில் மகிழ்ச்சியை தந்த போதும் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் இயற்கை இடர்பாடோடு கிடைத்த சொற்ப நீரைக்கொண்டும் நிலத்தடி நீரைக்கொண்டும் விவசாய பணியை மேற்கொண்டு கதிர் வரும் நிலையில் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் கனமழை பெய்வது நெற்கதிர்களை பதராக்கிவிடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

    நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சீர்காழியில் காலை முதல் மதியம் வரை பலத்த மழை பெய்தது. வேதாரண்யத்தில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. வேதாரண்யத்தில் 51.6 மில்லி மீட்டர் மழையும், தலைஞாயிறில் 39 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    இந்த மழை சீர்காழி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் சாய்ந்துவிட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உரிய காலத்தில் மழை பெய்யாமல் அறுவடை காலத்தில் மழை பெய்கிறதே என்று விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த மழை தொடர்ந்தால் பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை உருவாகலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×