என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே வீட்டு தகராறில் தாயை மகன் சுத்தியால் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அருகே உள்ள ஓடாச்சேரியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கோகிலம் (55).

    இவர்களுக்கு முருகானந்தம் என்கிற முருகேசன் (38) என்ற மகன் உள்ளார். ராமசாமி பசுமை வீடு திட்டத்தில் புதிதாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார். முருகானந்தம் வெளிநாடு சென்று விட்டு சமீபத்தில்தான் ஊருக்கு வந்து இருந்தார்.

    அவர் தனது தந்தையிடம் வீட்டை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ராமசாமியும், அவரது மனைவி கோகிலமும் கூரை வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு முருகானந்தம் பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். ஆத்திரம் அடைந்த அவர் சுத்தியலை எடுத்து பெற்றோர் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

    இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை கோகிலம் இறந்தார்.

    ராமசாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கொலை குறித்து தலைஞாயிறு போலீசில் புகார் செய்யப்பட்டது. வேதாரண்யம் டி.எஸ்.பி., பாலு உத்தரவின் பேரில் தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் வழக்கு பதிவு செய்து கொலையாளி முருகானந்தத்தை கைது செய்தனர்.

    தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் தலைஞாயிறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகப்பட்டினம் நகரம், புத்தூர் ரவுண்டானா அருகில் உள்ள ரெயிலவே மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்வது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
    நாகப்பட்டினம்:

    நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் இளம்வழுதி கூறியதாவது;

    இந்த ரெயில்வே மேம்பாலத்தில் இரு பாலத்திற்கிடையில் வரக்கூடிய எக்ஸ்பேன்சன் ஜாயிண்ட் 4 செ.மீ இடைவெளியில் இருக்க வேண்டும். தற்சமயம் சிறிதளவு இடைவெளி அதிகமாக உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை துணை இயக்குநர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்து, இந்த விரிசல் ஏற்பட்டதற்கான காரணத்தையும், அதனை சரிசெய்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும், பாலத்தை சரிசெய்யும் பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது, தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, உதவிப் பொறியாளர் சாலைகுகன், கோட்டப் பொறியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
    டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் 6-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தா. பாண்டியன் கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் வறட்சி ஏற்பட்டு குளங்கள், ஆறுகள், ஏரிகளில் தண்ணீரின்றி காணப்படுகிறது. மரங்கள் பட்டுபோய் உள்ளன. குடிநீர் கிடைக்காமல் உயிரினங்கள் அவதிப்படுகின்றன. பருவ மாற்றத்தினை முன்பே அறிந்து தமிழக அரசு திட்டமிடவில்லை. ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெயரைக்கூட பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் கொடுத்தது யார்?. அ.தி.மு.க. சின்னம் முடக்கப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் 2 வாரத்திற்கு முன்பே கூறுகிறார்கள்.

    முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றும், எந்தவித விசாரணையும் இன்றி மீண்டும் அவருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழக மக்களை பாதுகாக்க வேண்டும். தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்.

    விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் இதுவரை வந்து சேரவில்லை. இதை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும். 60 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் பிரச்சினை நடைபெற்று வருகிறது. இதற்கு ஒரேதீர்வு கச்சத்தீவை மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் பாண்டியன், சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் தமீம் அன்சாரி, இளைஞர்பெருமன்ற மாவட்ட செயலாளர் பாஸ்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.

    மது தட்டுப்பாட்டால் குத்தாலத்தை நோக்கி படையெடுக்கும் மதுப்பிரியர்கள். வெவ்வேறு கிராமங்களில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை மூடி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    குத்தாலம்:

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள மதுபானக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டன. இதனால் திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளை நோக்கி பல்வேறு ஊர்களிலிருந்து குடிமகன்கள் குவிந்து வருகின்றனர். பல இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் மதுபான விற்பனை நடைபெறுகிறது.

    நாகை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவில் மார்ச்.31-ம் தேதிக்கு பிறகு கத்திரிமூலை, கோமல் ஆகிய இரண்டு கிராமங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றது. இக்கடைகளுக்கு கும்பகோணம், ஆடுதுறை, மயிலாடுதுறை போன்ற ஊர்களிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்தும் பயணம் செய்து வந்து மதுப்பிரியர்கள் மது வாங்கிச் செல்கின்றனர். மது வாங்கும் பலர் அங்கேயே அமர்ந்து அருந்துவதால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த இரண்டு நாட்களாக பெரும் அவதியடைந்துள்ளனர்.

    இதில் ஆத்திரமடைந்த கத்திரிமூலை மற்றும் கோமல் கிராம மக்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பு திரண்டு கடையை முற்றுகையிட்டனர். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் வேறுவழியின்றி கடையை பூட்டிவிட்டு வெளியேறினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை போலீஸ் துணை சூப்பிரண்டு கலிதீர்த்தான் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதாகவும், அதுவரை கடை திறக்கப்படாது என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இதனால் வெகு தூரம் பயணம் செய்து வந்தும் மது கிடைக்காததால் பலர் விரக்தி அடைந்தனர். தங்களுக்கு தகுந்த மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த பின்னரே மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாகையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.
    வேதாரண்யம்:

    தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 21- வது நாளாக போராட்டம் நடந்தது.

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அண்டை மாநிலங்களில் புதிதாக அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    காவிரி மேலாண்ம வாரியம் அமைக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், ஓ. பன்னீர் செல்வம் அணி, த.மா.கா., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தது.

    வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனும் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்து இருந்தார். அதன்படி இன்று தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.ஆனாலும் தஞ்சையில் இன்று கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தது. கும்பகோணத்திலும் கடைகள் திறந்திருந்தன.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி , மன்னார்குடியிலும் கடைகள் திறந்து இருந்தது. மாவட்டத்தில் இரு சில இடங்களில் மட்டும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    நாகை மாவட்டம் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, பகுதியில் கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தது. வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதியில் 273 கடைகள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக அடைக்கப்பட்டு இருந்தது.

    வணிகர் சங்க பேரவை தலைஞாயிறு பகுதி தலைவர் செல்வக்குமார் தலைமையில் வியாபாரிகள் கடைகளை அடைத்து இருந்தனர்.

    இதேபோல் கரியாப்பட்டினத்தில் 75 கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. நாகை தெற்கு மாவட்ட வணிகர் சங்க பேரவை இணை செயலாளர் முத்து, கரியாப்பட்டினம் வர்த்தக சங்க தலைவர் முகமது யாசின் ஆகியோர் தலைமையில் இன்று ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கீழ்வேளூரில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் வலிவலம், தேவூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் வணிகர் சங்க பேரவை சார்பில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தோப்புத்துறையைச் சேர்ந்தவர் நெய்னாமுகமது. இவரது மகன் முகமதுஇஸ்மாயில் (வயது 15). இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று டியூ‌ஷனுக்கு சென்றுவிட்டு மெயின் ரோட்டில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு திரும்பும்போது நாகை-வேதாரண்யம் சாலையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த பன்னாள் கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் வெங்கடேஷ்(27) என்பவர் முகமது இஸ்மாயில் மோதி அவரும் கிழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    இதில் காயமடைந்த முகமது இஸ்மாயில் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், வெங்கடேஷ் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    சீர்காழியில் காரை கடத்தி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பறித்து சென்ற நகை மற்றும் பணம் பறிமுதல்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே உள்ள பச்ச பெருமா நல்லூரை சேர்ந்தவர் திருஞான சம்பந்தம் (வயது 33). இவர் நேற்று முன்தினம் ஜே.சி.பி எந்திரம் வாங்குவதற்காக தனது உறவினர்கள் பாண்டியன்(30), கொளஞ்சியப்பன்(35) ஆகியோருடன் ஒரு காரில் கடலூர் புறப்பட்டார். அவர்கள் செம்மங்குடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்றனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் காரை வழி மறித்து நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி காரில் இருந்த திருஞானசம்பந்தம் உள்பட 3 பேரையும் கீழே இறக்கிவிட்டு அவர்கள் ஜே.சி.பி எந்திரம் வாங்க வைத்து இருந்த ரூ. 2 லட்சம் மற்றும் ½ பவுன் நகை ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இது பற்றி சீர்காழி போலீசில் திருஞானசம்பந்தம் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அழகு துரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். நேற்று சீர்காழி சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கடத்தப்பட்ட கார் அந்த வழியாக வந்தது.

    அதனை பறிமுதல் செய்து அதில் வந்த சீர்காழியை சேர்ந்த அருண்குமார், சதிஸ்குமார், மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த சந்தானகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் பறித்து சென்ற நகை-பணம் மீட்கப்பட்டு திருஞான சம்பந்தத்திடம் ஓப்படைக்கபட்டது.

    பொறையாறு அருகே மோட்டார் சைக்கிள் வேலன் வாய்க்காலில் பாய்ந்ததில் தந்தை, மகள் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    தரங்கம்பாடி:

    கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பி.முட்லூர் திடீர்குப்பம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை மகன் அன்புராஜா (வயது 28), சிற்ப தொழிலாளி. இவருடைய மனைவி மைதிலி (26). இவர்களின் மகள்கள் திலிசா (4), ஹரிசா (1½).

    நேற்று காலை அன்புராஜா, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் நாகை மாவட்டம் திருக்கடையூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கு சென்றார். பின்னர் நேற்று மாலை அங்கிருந்து புறப்பட்டு பி.முட்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    பொறையாறு அருகே பூந்தாழை என்ற இடத்தில் உள்ள ஒரு வளைவில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்கு இருந்த வேலன் வாய்க்காலில் பாய்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அன்புராஜ், அவருடைய மகள் திலிசா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் படுகாயம் அடைந்த அவரது மனைவி மைதிலியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை ஹரிசா லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அன்புராஜா, திலிசா ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் தந்தையும், மகளும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி அருகே கர்ப்பிணி பெண்ணை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம், சீர்காழி அருகே திருப்பங்கூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த பிரம்மநாதன் மகள் தேவிகா (வயது 29). இவருக்கும், கடலூர் மாவட்டம், சிதம்பரம் எல்லைக்கட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் (36) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் சரவணன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்ப்பிணியான தனது மனைவி தேவிகாவை திருப்பங்கூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டு சென்றார்.

    சம்பவத்தன்று காலை வீட்டின் பின்புறம் முகத்தில் காயங்களுடன் தேவிகா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து தேவிகாவின் தந்தை பிரம்மநாதன் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவிகாவின் கணவர் சரவணனிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் சம்பவத்தன்று மனைவி தேவிகாவை தனது வீட்டுக்கு குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். அப்போது கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் சரவணன், தேவிகாவை அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த தேவிகா இறந்துள்ளார் என்று தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண் மர்ம சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி சரவணனை கைது செய்தனர்.

    சீர்காழி அருகே இளம்பெண் மாயமானது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே உள்ள பட்டவிளாகம் அத்தியூரை சேர்ந்த செல்வம் என்பவர் மகள் சந்தியா (வயது 21). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 28-ந்தேதி வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது தந்தை செல்வம் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சந்தியாவை தேடி வருகின்றனர்.
    சீர்காழி அருகே கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள திருப்புங்கூரை சேர்ந்தவர் பரம்மநாதன். இவரது மகள் தேவி (28).

    இவருக்கும் சிதம்பரம் எல்லாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தச்சு தொழிலாளி சரவணன் (32) என்பவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. தேவி தற்போது 3 மாத கர்ப்பமாக இருந்தார்.

    அவர் தனது தாய் வீட்டிற்கு வந்து இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் வீட்டின் கொல்லைப்புறத்தில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தேவியின் தந்தை பரம்மநாதன் வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் மர்மசாவு என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தேவியின் கணவர் சரவணனை பிடித்து விசாரணை மேற் கொண்டனர். அப்போது அவர் மனைவியை கொன்றது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

    அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில், கடந்த 28-ந் தேதி நள்ளிரவு தேவியை பார்க்க வீட்டின் பின் பக்கமாக வந்ததாகவும், தேவியுடன் பேசிக் கொண்டு இருந்த போது குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    நான் தேவியை கீழே தள்ளி விட்டேன். பின்னர் அங்கிருந்து சென்று விட்டேன். அதன் பின்னர் தான் அவர் இறந்தது தெரியவந்தது என்று கூறி உள்ளார்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில் வயலில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கீழ்வேளூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார் கொல்லை உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை கண்டித்து விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    அதிகாரிகளின் சமரச பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்போது கைவிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டம் நாகையிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

    இம்மாவட்டத்தில் 9 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள சித்தாய்மூரில் விவசாயிகள் வயலில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள்.

    தி.மு.க. விவசாய அணி மாவட்ட பொறுப்பாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.



    இந்த திட்டத்தை எதிர்ப்பை மீறி செயல்படுத்தினால் ஹைட்ரோ கார்பன் எரிவாயு குழாயை உடைத்து எறிந்து போராட்டம் நடத்தப்போவதாகவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×