search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை தேடி நிற்கும் தொழிலாளர்களால் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல்:  மாற்று இடம் காட்டிய போலீசார்
    X

    விருத்தாசலம் பாலக்கரை பஸ் நிறுத்தம் எதிரில் வேலை தேடி நிற்கும் தொழிலாளர்கள் படத்தில் காணலாம். 

    வேலை தேடி நிற்கும் தொழிலாளர்களால் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று இடம் காட்டிய போலீசார்

    • 7.30 மணியளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் இங்கு வந்து விடுவர்.
    • அய்யனார் மற்றும் போலீசார் அதிரடியாக பாலக்கரை பஸ் நிறுத்தத்திற்கு விரைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் மும்முனை சந்திப்பில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் எதிரில் விருத்தாசலம் அடுத்த சிக்கலூர், விளங்காட்டூர், கண்டபாங்குறிச்சி, பரனூர், பரவலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் ஒன்று கூடுவர். தினமும் காலையில் 7 மணியிலிருந்து வரத் தொடங்குவர். 7.30 மணியளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் இங்கு வந்து விடுவர். இதில் அதிகளவில் கட்டுமான பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் இருப்பர். இங்கு வரும் என்ஜினியர்கள் மற்றும் கட்டுமான மேஸ்திரிகள் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அழைத்து சென்று பணி வழங்குவார்கள்.

    இது தவிர வீடு சுத்தம் செய்தல், தோட்டங்களை பராமரிளத்தல் போன்ற வேலைகளுக்கும் பொதுமக்கள் இங்கு வந்து பணியாளர்களை அழைத்து செல்வர். இவர்களுக்கு என்று நிரந்தர பணி இல்லாவிட்டாலும், இங்கு வந்து நின்றால் வேலை நிச்சயமாக கிடைக்கும். இந்நிலையில் மும்முனை சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தம் எதிரில் 200-க்கும் மேற்பட்டோர் நிற்பதாலும், இவர்களை பணிக்கு அழைக்க 100-க்கும் மேற்பட்டோர் வருதாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்று காலை 7.30 மணிக்கு விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் அதிரடியாக பாலக்கரை பஸ் நிறுத்தத்திற்கு விரைந்தனர். அங்கு நின்றிருந்த 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களை அங்கிருந்து கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

    எங்களை வேலைக்கு அழைப்பவர்கள் காலங்காலமாக இங்கு வந்துதான் எங்களை அழைத்து செல்கின்றனர். அதனால் இங்கு நின்றால் மட்டுமே வேலை கிடைக்கும். கலைந்து சென்றால் எங்களுக்கு வேலை கிடைக்காமல், எங்கள் குடும்பம் பட்டினி கிடக்கும் சூழல் ஏற்படும் என கூறினர். இதையடுத்து மும்முனை சந்திப்பில் உள்ள பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி நிற்க போலீசார் கூறினர். இதனையேற்ற கூலித் தொழிலாளர்கள் அங்கிருந்து 500 மீட்டர் தள்ளி சென்று நின்றனர். இதனால் இன்று காலை 7.30 மணிமுதல் 8.30 மணிவரை பாலக்கரை பஸ் நிறுத்தம் அருகே பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×