என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு  செய்த கண்காணிப்பு அலுவலர்
    X

    வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர்

    • அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.அருண்ராய் ஆய்வு செய்தார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.அருண்ராய் ஆய்வு செய்தார். அரியலூர் நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோக மேம்பாட்டுத் திட்டப் பணிகளை பார்வையிட்டு , பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பணிகள் தொடங்கிய நாள், முடிவுறும் நாள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டறிந்து, பணிகளை உரிய காலத்துக்குள் முடித்து அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அரியலூர் ஒன்றியம், மேலக்கருப்பூ கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.11.40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குமாரசாமி ஏரி தூர் வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் பணியினையும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினையும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினையும் பார்வையிட்ட அவர்,தொடர்ந்து ஜெயங்கொண்டம் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியினை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் உணவினை வழங்க வேண்டும் எனவும், விடுதிகளின் சுற்றுப் புறத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக, அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொணட் அவர், அங்கு அனைத்து துறை அலுவலர்களிடம் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) பாலமுரளி, வேளாண்மை இணை இயக்குநர்(பொ) பழனிசாமி, நகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×