search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது பயன்பாட்டு மையத்திற்கு அதிநவீன எந்திரங்கள் வந்தன
    X

    அதிநவீன எந்திரங்கள்.

    பொது பயன்பாட்டு மையத்திற்கு அதிநவீன எந்திரங்கள் வந்தன

    • பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில், அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.
    • துணியில் டிசைன்களை மிக துல்லியமாக எந்திரம் பொறிக்கும்.

    திருப்பூர் :

    பொது பயன்பாட்டு சேவை மையங்களை அமைத்து, பின்னலாடை உற்பத்தி துறையில் உள்ள தொழில் நுட்ப இடைவெளிகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் திருப்பூர் தொழில் துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

    தென்னிந்திய இறக்குமதி எந்திர பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம்(சிம்கா) பல்லடம் அருகே நாரணாபுரத்தில் நிட்டிங் பொது சேவை மையத்தை உருவாக்கியுள்ளது. அதிநவீன எந்திரங்களுடன் இம்மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    இதேபோல் திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு, பின்னலாடை உற்பத்தி துறையினர் 50 பேரை இணைத்து தாராபுரம் ரோடு பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில், அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.

    ரூ.16.25 கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ. 8.56 கோடி, மாநில அரசு ரூ. 3 கோடி மானியம் வழங்குகின்றன. தொழில் துறை குழுவினர் ரூ. 4.69 கோடி முதலீடு செய்கின்றனர்.பொது பயன்பாட்டு மையம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் முதல் கட்ட மெஷினரிகள் வந்திறங்கின.

    மைய தலைவர் ராமசாமி, நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரம், தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, விஜயகுமார் உள்ளிட்டோர் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.சீனாவில் இருந்து ஆட்டோமேட்டிக் டிரையருடன் கூடிய ஆட்டோமேட்டிக் கிளாஸ் பிரின்டிங் எந்திரம், 2 காஸ் கியூரிங் எந்திரம் 2 என இரண்டு வகையான நான்கு எந்திரங்கள் வந்துள்ளன.கிளாஸ் பிரின்டிங் எந்திரத்தில் 76க்கு 36 இன்ச் என்கிற பெரிய பரப்பளவில் துணியில் பிரின்டிங் செய்ய முடியும்.

    பிறப்பிக்கும் கட்டளையை ஏற்று தானாக இயங்கி, துணியில் டிசைன்களை மிக துல்லியமாக இந்த எந்திரம் பொறிக்கும். பிரின்டிங் செய்யப்பட்ட துணியே உடன் இணைக்கப்பட்டுள்ள டிரையருக்கு அனுப்பி உலர்த்தியும் கொடுத்துவிடும். அதிவேக உற்பத்தி திறன் மிக்கது. புதுமையான பிரின்டிங் சேம்பிள் தயாரிப்புக்கு இந்த எந்திரம் கைகொடுக்கும். எந்திரங்களை நிறுவும் பணிகள் நடந்துவருகின்றன. ரவுண்ட் பிரின்டிங் எந்திரம், எம்ப்ராய்டரி எந்திரங்களும் அடுத்தடுத்து வர உள்ளன. முதல்கட்ட எந்திரங்கள் வந்துவிட்டதால் விரைவில் இப்பொது பயன்பாட்டு மையமும் இயக்கத்தை துவக்க உள்ளது.

    Next Story
    ×