search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்
    X

    ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கு: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

    • தமிழர்கள் நிறைந்துள்ள சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்று, அங்கு தமிழர்களுடன் தேநீர் அருந்தியும், அவர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தேன்.
    • ஒசாகா பயணத்தில், டைசல் என்ற புகழ் பெற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    உடன்பிறப்புகளாம் உங்கள் முகத்தை நான் நேரில் பார்த்து 9 நாட்களாகிறது. கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை என் தோளில் சுமத்தி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பையும் சுமக்கும்படி கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கு உழைத்தீர்கள்.

    நீங்கள் அளித்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தமிழ் நாட்டை முன்னேற்றிட எல்லா வகையிலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

    பத்தாண்டுகால இருட்டை ஒவ்வொரு பகுதியாக விரட்டி, விடியலைத் தந்து கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. இன்னும் சில பகுதிகளில் இருட்டு ஒளிந்து கொண்டிருக்கிறது. அதையும் விரட்டி, ஒளி மிகுந்த தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே நம் இலக்கு. அதனால்தான் கடந்த இரண்டாண்டுகளில் தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள், முதலீடுகள் தொடர்பான நிகழ்வுகளில் அதிகமாகவும் ஆர்வமாகவும் பங்கேற்று வருகிறேன்.

    அதற்காக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை திராவிட மாடல் அரசிற்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார வல்லுநர்கள் எடுத்துரைத்திருந்தனர்.

    தொழில்துறை அமைச்சராகத் தன் பணியை சிறப்பாக நிறைவேற்றி, நிதியமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் தங்கம் தென்னரசு தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக ஏற்கனவே வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டபோது, "அடுத்த முறை உங்கள் மாநில முதலமைச்சரை அழைத்து வாருங்கள்" என அங்குள்ளவர்கள் சொன்னதைத் தெரிவித்து, இந்தப் பயணம் குறித்து வலியுறுத்தி இருந்தார்.

    தொழில்துறைக்குப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் இதனைக் குறிப்பிட்டுக் காட்டினார். சிங்கப்பூரின் போக்குவரத்துத்துறை அமைச்சரும் நண்பருமான ஈஸ்வரன் ஏற்கனவே எனக்கு அழைப்பு விடுத்திருந்ததும் நினைவுக்கு வந்தது. ஜப்பான் நாட்டுடன் தமிழ்நாட்டுக்கு நல்லுறவு இருப்பதையும் உணர்ந்திருக்கிறேன்.

    இந்த நிலையில்தான் கடல் கடந்து, சிங்கப்பூர்-ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணச் சிறகுகளை விரித்தேன். 9 நாட்கள் வெளிநாட்டுப் பயணமா, இவ்வளவு நாட்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்ததில்லையே என நான் தயங்கினாலும், இந்தப் பயணம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது என்பதால் பயணச் சிறகுகள் விரிந்தன.

    சிங்கப்பூரிலும் ஜப்பானிலும் நாம் நினைத்தபடி, வெற்றிகரமாக பயணம் அமைந்த நிலையில், தாய்மடியாம் தமிழ்நாட்டை நோக்கிப் பயணிக்க ஆயத்தமாகும் சூழலில், உடன்பிறப்புகளிடம் இந்தப் பயணத்தின் நோக்கத்தையும், பயண நிகழ்வுகளையும், அவை ஏற்படுத்தவிருக்கும் விளைவுகளையும் விளக்கமாகச் சொல்லிட வேண்டும் என்கிற என் மனதின் விருப்பமே இந்தக் கடிதம்.

    தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள நீண்டகால உறவை எடுத்துக்கூறி, வந்தாரை வாழவைக்கும் சிங்கப்பூர், இனி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் கை கொடுக்கும் என்று நான் நம்புவதாகச் சொன்னபோது அனைவரும் கைதட்டல்களால் வரவேற்றனர். முதலீட்டாளர் மாநாட்டுக்கான அழைப்பினை விடுத்து அவர்களிடமிருந்து விடைபெற்றேன்.

    தமிழர்கள் நிறைந்துள்ள சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்று, அங்கு தமிழர்களுடன் தேநீர் அருந்தியும், அவர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தேன். சிங்கப்பூர் பயணம் முழுவதுமே சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. அந்த உணர்வுடன், சிங்கப்பூரிலிருந்து ஜப்பான் நாட்டின் ஒசாகா நகருக்கு விமானத்தில் புறப்பட்டோம். 7 மணி நேரப் பயணம். பல ஆயிரம் மைல்கள் கடந்திருந்தாலும் மனது தமிழ் நாட்டையே சுற்றி வந்தது. வெளிநாட்டில் இருந்தாலும், டி.வி. சேனல்கள், சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்அப், செல்போன் கால்கள் வழியாக தமிழ்நாட்டின் நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்து கொண்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கியபடியேதான் இருந்தேன்.

    ஒசாகா பயணத்தில், டைசல் என்ற புகழ் பெற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த நிகழ்வாக, ஒசாகா முதலீட்டாளர்களுடனான கருத்தரங்கம் நடைபெற்றது. ஜப்பானிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில், உற்பத்தி சார்ந்த துறைகளில் நிறைய முதலீடுகளைச் செய்திருக்கின்றன. அதுபோல பின்டெக் சிட்டி உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளிலும் முதலீடு செய்ய வேண்டும் என அவர்களிடம் தெரிவித்து, உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தேன்.

    தமிழ்நாட்டில் ஒரகடத்தில் உள்ள கோமாட்சு நிறுவனத்தில் மாதந்தோறும் 300-க்கும் அதிகமான இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் முதலீடு செய்ய வேண்டும் என ஒசாகாவில் உள்ள தலைமை நிறுவனத்தாரிடம் தெரிவித்து, முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தேன்.

    இந்தியன் கிளப் நிகழ்வில் குழுமியிருந்தவர்களிடம், அவர்களின் உழைப்பை, வளர்ச்சியைப் பாராட்டி, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எடுத்துக்கூறுங்கள் எனத் தெரிவித்தேன். எங்கு சென்றாலும், யாரைச் சந்தித்தாலும் அது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய வாய்ப்பாக அமைய வேண்டும் என்பதே என் முதன்மை நோக்கமாக இருந்தது.

    டோக்கியோ முதலீட்டாளர் கருத்தரங்கில் நான் பேசுகையில், "உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளில் உங்கள் முதலீடுகளைச் செய்யுங்கள். அதுபோல ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த துறைகளுக்காக சென்னையில் உங்கள் நிறுவனங்களின் அலுவலகம் அமைய வேண்டும். எங்களிடம் மனித வளம் நிறைய உள்ளது" எனக் கேட்டுக்கொண்டு, முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தேன்.

    தற்போது பயோ-மெட்ரிக் முறையில் நாம் கைரேகையைப் பதிவு செய்து அலுவலகத்திற்குச் செல்கிறோம்.

    இதன் அடுத்தகட்டமாக, மனிதர்களின் முகத்தை அடையாளம் கண்டு அனுமதிக்கும் தொழில்நுட்பம் உருவாகியுள்ளது. விமான நிலைய கவுண்ட்டர்களில் மக்கள் கூட்டமாகக் காத்திருக்கும் பொழுதுகளில், கொரோனா போன்ற கட்டுப்பாடுகள் நிலவும் நேரங்களில், விமானத்திற்கான போர்டிங் பாஸ் பரிசோதனை, பாதுகாப்பு பரிசோதனை உள்பட எல்லாவற்றிலுமே ஒருவரின் முகத்தை அடையாளமாக வைத்து விரைவாக முடித்து விடலாம். உரிய அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாதவர்களை எந்த இடத்திலும் உள்ளே விடாமல் தடுத்து விட முடியும்.

    இந்தியாவில் ஐ.ஐ.டி. உள்ளிட்ட நிறுவனங்கள் ஜப்பானின் என்.இ.சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தமிழ் நாட்டில் செயல்படுத்தப்படும் 'நான் முதல்வன்' திட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு இத்தகைய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க என்.இ.சி. முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.

    மாலையில் ஓம்ரான் என்ற நிறுவனத்துடன் சந்திப்பு நடந்தது. மருத்துவப் பரிசோதனைகள் சார்ந்த கருவிகள் தயாரிக்கும் நிறுவனமான ஓம்ரான், இந்தியாவில் முதன்முறையாக தமிழ் நாட்டில்தான் ஒப்பந்தம் செய்துள்ளது.

    தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாடு அரசின் மீதும்-தமிழ்நாட்டு மக்களின் மீதும் மிகப்பெரிய நம்பிக்கையை ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டில் ஜனவரி 2024-ல் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு "வருக வருக" என அனைவரையும் அழைத்து, "கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி போலன்றித் தமிழ்நாடு மாறியிருக்கிறது. தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது" என்ற நம்பிக்கையை தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திய மனமகிழ்வுடன், வெற்றிகரமாக சென்னை திரும்புகிறேன்.

    உடன்பிறப்புகளின் முகம் காண உங்களில் ஒருவனான நான் ஆவலுடன் இருக்கிறேன். நமக்கான பணிகள் காத்திருக்கின்றன. முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம். அவர் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டை, முதன்மை மாநிலமாக உயர்த்திக் காட்டுவோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு சென்னை வந்தடைகிறார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    Next Story
    ×