search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகத்துக்கான முன்னேற்பாடுகள்- கமிஷனர்களுக்கு அமைச்சர் அறிவுரை
    X

    மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகத்துக்கான முன்னேற்பாடுகள்- கமிஷனர்களுக்கு அமைச்சர் அறிவுரை

    • மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் எந்தவித தொய்வுமின்றி நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.
    • திடக்கழிவு மேலாண்மை செயலாக்கத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், சென்னை நீங்கலாக அனைத்து மாநகராட்சிகளின் கமிஷனர்களுடன் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகளின் நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது, தூய்மை இந்தியா திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கோயம்புத்தூர், திருச்சி மாநகராட்சி கமிஷனர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    மாநகராட்சி பகுதிகளில் கடந்த 20 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் பொதுமக்களை சரியாக சென்றடைந்துள்ளதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்துவர வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் எந்தவித தொய்வுமின்றி நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.

    மேலும், புதிய திட்டங்களுக்கான கருத்துருக்களும், விரிவான திட்ட அறிக்கைகளும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும். கட்டிடங்களுக்கான அனுமதி வழங்குவது, சொத்துவரி விதிப்பது போன்ற பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், காலி மனையிடங்களை முறையாக சொத்து பதிவேட்டில் பதிவு செய்து தணிக்கைக்கு உட்படுத்திட வேண்டும்.

    அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் தினந்தோறும் குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி கமிஷனர்கள் முனைப்போடு மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் கோடைகாலத்தில் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். திடக்கழிவு மேலாண்மை செயலாக்கத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் கிர்லோஷ்குமார், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் விஷ்ணுசந்திரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய செயல் இயக்குனர் ராஜகோபால் சுன்கரா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×