என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் தி.மு.க.வில் இணைந்தனர்
- தமிழகத்தில் தற்போது நேர்மறையான அரசியல் தேவைப்படுகிறது.
- நாம் தமிழர் கட்சியில் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
கோவை:
நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகினர்.
இந்த நிலையில் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை தி.மு.கவில் இணைத்து கொண்டனர்.
தி.மு.க.வில் இணைந்தவர்களை, அமைச்சர் செந்தில்பாலாஜி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
அதனை தொடர்ந்து ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நாங்கள் சரியான தலைமை உள்ள கட்சியில் இணைய வேண்டும் என நினைத்தோம்.
அதன்படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு சரியான, வலுவான தலைமை உள்ள தி.மு.கவில் தங்களை இணைத்து கொண்டுள்ளோம்.
தமிழகத்தில் தற்போது நேர்மறையான அரசியல் தேவைப்படுகிறது. அது தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உள்ளது. அவரது சிரித்த முகத்துடனான பண்பு அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் உள்ளது. அது எங்களையும் ஈர்த்துள்ளது.
அதன் காரணமாக நாங்கள் தி.மு.கவில் இணைந்துள்ளோம். நாம் தமிழர் கட்சியில் உள்ள பலரும் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எங்களுடன் பேசி கொண்டிருக்கிறார்கள். அவர்களும் விரைவில் தி.மு.கவில் இணைவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன், மாநில மாணவரணி தலைவர் வக்கீல் ராஜீவ்காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன், மாநில மாணவரணி துணை செயலாளர் வி.ஜி.கோகுல் உள்பட பலர் உள்ளனர்.






