search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டரை நியமிக்க வேண்டும்
    X

    மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டரை நியமிக்க வேண்டும்

    • தொடர் சிகிச்சை பெறுவது குறித்து ஆலோசனை பெற முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர் ஒருவரை விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் முன்னாள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், வர்த்தக பிரமுகர் கருணாநிதி, சதுரங்க கழக மாநில இணைச்செயலாளர் பாலகுணசேகரன், ரோட்டரி சங்க பிரமுகர்கள் சாந்தகுமார் கருணாகரன், நேசக்கரம் தன்னார்வலர் குழு நிர்வாகிகள் எழிலரசன், பெலிக்ஸ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்த மனுவில் கூறியிப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செயல்படும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொது மருத்துவர் (எம். டி) பணியிடம் காலியாக உள்ளது.

    இதற்காக நீடாமங்கலத்தில் இருந்து மாற்றுப் பணியாக வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பொது மருத்துவர் ஒருவர் மன்னார்குடிக்கு வந்து செல்கிறார்.

    வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்கள், நடைமுறை சிக்கல் காரணமாக அந்த 3 நாட்களிலும் பல நேரங்களில் பொது மருத்துவர் இல்லாத நிலையே நீடிக்கிறது.

    இதனால், மாரடைப்பு ஏற்பட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையை நாடிவரும் நோயாளிகளுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்து, அடுத்த கட்டமாக உரிய மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    குறைந்தபட்சம் இசிஜி எடுத்து, அது தொடர்பான வழிகாட்டல் செய்வதற்கூட முடியாத நிலை உள்ளது.

    இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளிட்ட தொடர் சிகிச்சை பெறுவது குறித்து ஆலோசனை பெறவும் முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    மேலும், இம்ம மருத்துவமனையில் மாதத்துக்கு சராசரியாக 300 மகப்பேறு மற்றும் பொது அறுவை சிகிச்சை, மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

    அதுபோல் , மருத்துவமனைக்கு அன்றாடம் 1000 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 350 உள்நோயாளிகள் அன்றாடம் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

    இவர்களில் பலர் பொது மருத்துவர் இல்லாமல், குறித்த நேரத்துக்கு உரிய சிகிச்சை பெற முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே, நோயாளிகளின் நலன் கருதி, நிரந்தரமாக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பொது மருத்துவர் ஒருவரை விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×