search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகநூல் பக்கத்தில் இளம்பெண் படத்துடன் ஆபாச பதிவு
    X

    முகநூல் பக்கத்தில் இளம்பெண் படத்துடன் ஆபாச பதிவு

    • மதுரையில் முகநூல் பக்கத்தில் இளம்பெண் படத்துடன் ஆபாசமாக பதிவிடப்பட்டது.
    • இதுதொடர்பாக பெண் உள்ளிட்ட சிலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பெத்தானியபுரம், காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவியும் சமூக சேவகியுமான முத்துலட்சுமி (வயது 34), மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறக்கட்டளை தொடங்கி ஆதரவற்ற முதியோர் மற்றும் ஏழை எளியோருக்கு தினமும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்தேன். இதற்காக எனது முகநூல் பக்கத்தில் அன்னதானத்திற்கு நன்கொடை வேண்டி, தொலைபேசி எண்ணை பதிவிட்டு இருந்தேன்.

    அப்போது கத்தாரில் இருந்து மாரிச்சாமி கோசாலை என்பவர் என்னை தொடர்பு கொண்டு "எனது மகன் பிறந்த நாள் அன்று அன்னதானம் வழங்குங்கள்" என்று கூறி, எனது வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்தினார். அதன்படி அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மதுரை திரும்பிய மாரிச்சாமி, என் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்து சென்றார். இதற்கிடையே மாரிச்சாமியின் மனைவி வினிதாராஜி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, நீங்கள் என் கணவருடன் பேசுவது பிடிக்கவில்லை என்று கூறினார். எனவே நான் மாரிச்சாமியின் போன் நம்பரை பிளாக் செய்து விட்டேன். அதன் பிறகும் வினிதாராஜி என்னிடம், என் கணவரை ஏமாற்றி எவ்வளவு பணம் வாங்கினாய்? என்று அசிங்கமான வார்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இந்த நிலையில் எனக்கு நள்ளிரவு நேரங்களில் புதுப்புது எண்களிலிருந்து அழைப்பு வரத் தொடங்கியது. எதிர் முனையில் பேசியவர்கள், 'ஒரு இரவுக்கு உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்? இந்த போட்டோவில் உள்ள மாதிரி இருப்பாயா? அல்லது சிறு வயது போட்டோவா?' என்று கேட்டு மனஉளைச்சல் ஏற்படுத்தினர். நான் அந்த போன் நம்பர்களை பிளாக் செய்தேன்.

    அதன் பிறகு 60-க்கும் மேற்பட்ட போன் நம்பரில் இருந்து போன் வந்தது. இந்த நிலையில் ஒரு பெண் எனக்கு போன் செய்து, 'உங்கள் போட்டோ மற்றும் தொலைபேசி எண்ணை டெலிகிராம் இணையதளத்தில் பதிவு செய்து, 'நீங்கள் விபச்சாரி' என்று யாரோ குறிப்பிட்டு உள்ளனர்' என்று தெரிவித்தார். அந்தப் பதிவின் ஸ்க்ரீன் ஷாட் தகவலையும் எனக்கு அனுப்பி வைத்தார்.

    என்னை இணையதளம் வாயிலாக விபச்சாரி என்று அவதூறு பதிவு செய்த வினிதா ராஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த புகார் மனு தொடர்பாக போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் விசாரணை நடத்த தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

    தனிப்படை போலீசார் அந்த இணையதளத்தில் பதிவான தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தனர். அது டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றின் செல்போன் நம்பர். அந்த எண்ணை இதற்கு முன்பு ராஜ் கோசாலை என்பவர் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

    தனிப்படை போலீசார் இது தொடர்பாக மாரிச்சாமி மனைவி வினிதாராஜி மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×